பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
Masterchef Australia Season 2 -வில் இருந்து அத்தனை சீசன்களையும் Masterchef US, Masterchef Canada சில சீசன்களையும் தொடர்ந்து பார்த்த அனுபவத்தில் பகிரப்படும் சில எண்ணங்கள் இவை.
Masterchef -ற்கென்று ஒரு பாரம்பர்யம் உண்டு. அந்தப் பாரம்பர்யம் ஷோவின் கட்டமைப்பிற்கு மட்டுமல்ல, அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும், நடுவர்களுக்கும், செட் அமைப்பிற்கும், காமிரா கோணங்களுக்கும், இசைக்கும் கூட உண்டு. இந்தப் பாரம்பர்யம் அப்படியே தமிழில் பின்பற்றப்படுகிறது. வருடக்கணக்காக மாஸ்டர் செஃப் பார்த்து வருபவர்களுக்கு இது பார்த்தவுடன் சட்டென்று தெரிந்துவிடும். இம்மி பிசகாமல் ஷோவின் வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் - பின்பற்றப்படுகின்றன.
முதலில் மாஸ்டர் செஃப் கூடம் - ப்ளூப்ரிண்ட் மாறாமல் அற்புதமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மாஸ்டர் செஃப் cooking stations மற்றும் pantry இவை அனைத்தும் உலகத்தரம் உடையவை. சமையல் உபகரணங்களாகட்டும், சமையல் சாமான்களாகட்டும் அவ்வளவும் புத்தம் புதிது, அவ்வளவு ஃப்ரெஷ். பளபளக்கும் பாத்திரங்களும், அடுப்புகளும், குளிர்சாதனப் பெட்டிகளும், சுடு அடுப்புகளும் (ovens) மட்டுமல்லாமல் பரிமாறும் தட்டுகளும், கோப்பைகளும், க்ளாஸ்களும் சமைக்கப் பிடிக்காதவர்களைக் கூட சமைக்கத் தூண்டிவிடும்.
இத்தனை அழகுக்கு மத்தியில் கண்களையும் மனதையும் உறுத்தும் விஷயங்கள் - இதுவரை பார்த்ததில் - இரண்டு. ஒன்று - டூ மச் கலர். விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் செட்டைப் பார்த்துவிட்டு அது டைரக்டர் ஷங்கரின் செட் போல் இருக்கிறதென்று சொன்னதாக எதிலோ படித்த ஞாபகம். அவர் வார்த்தைகள் உண்மை. ஆனால் இது மாஸ்டர் செஃப் கூடம், திரைப்பட செட் அல்ல. இந்தக் கூடத்தின் இத்தனை வண்ணங்களும் நிறங்களும் அதனுடைய ப்ரொபஷனல் தன்மையிலிருந்து கொஞ்சம் பிறழச்செய்கின்றன. சற்றே ஃபைன் ட்யூன் செய்தால் perfect செட்டாகிவிடுமென்றுத் தோன்றுகிறது.
இரண்டு - உணவுகளை நடுவர்களுக்குக் கொண்டு செல்லும் / கொண்டு செல்லக் காத்திருக்கும் வழி / இடம். இதில் அது எது என்று புரிந்துகொள்ள முடியாமல், சமைக்கும் இடத்துடனும் சேராமல், Pressure Test Tasting ஏரியாவுடனும் ஒட்டாமல் நிற்கிறது பச்சை (பிளாஸ்டிக்?) புல்தரை விரித்து நிற்கும் அந்த ஏரியா. ஏதேனும் மாற்றம் செய்ய முடியுமாவென்று யோசிக்க ஆர்ட் டைரக்டரிடம் இது ஒரு சிறிய விண்ணப்பம். செட்டின் முத்தாய்ப்பு தமிழர் வாழ்வையும் கலையையும் பறைசாற்றும் தட்டு மரமும், தரைக் குதிரையும். இவற்றை உருவாக்கியவர்களுக்கு அடுத்த வின்னிங் டிஷ்ஷைக் கொடுங்கள். அற்புதமான படைப்புகள்!
Masterchef தமிழின் நடுவர்களைத் தேர்வு செய்தவர்களுக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும். ஷோவின் மகுடமே அவர்கள் தான். இதுவரை எந்த ஷோவிலும் அவர்கள் பங்கேற்றதாகத் தெரியவில்லை (என் கணிப்புத் தவறாக இருந்தால் my apologies). சமையல் அறிவும், ஞானமும், திறமையும், உணவின் மீது அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் காதலும் மூவரின் ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் அவர்கள் மூவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் செய்கையும் எபிசோடுக்கு எபிசோட் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு டிஷ்ஷையும் அவர்கள் பங்கு போட்டு ருசி பார்க்கும் பதவிசும் நளினமும் ... கண் கொள்ளாக் காட்சி.
Masterchef ஷோவின் பெருமையையும் அதன் வீச்சையும் தாக்கத்தையும் மொத்தமாய் உணர்ந்தவர்களாய் இருக்கிறார்கள் மூவரும். அப்படிப்பட்டவர்களை Pressure Test Tasting மேஜையில் அமர்ந்து போட்டியாளர்களைக் கூவி அழைக்கும்படி சொல்லாமல் வேறு ஏதேனும் ஏற்பாடு செய்திருக்கலாம். இனியும் சமயமிருக்கிறது மாற்றங்கள் செய்வதற்கு. தமிழர்களின் வரவேற்பறைக்கு வந்திருக்கும் இவர்கள் மூவரின் வரவும் நல்வரவாகுக! Masterchef தமிழின் நோக்கம் பங்கேற்பாளர்களின் சமைக்கும் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்துவது மட்டுமல்ல, தமிழரின் உணவுப் பாரம்பரியத்தை, சமையல் கலையை, உணவு வகைகளை உலகறியச் செய்வதும் தான் என்பதை அருமையாகவே உணர்ந்திருக்கிறார்கள் நடுவர்கள். போட்டியாளர்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் உணவு அறிவையும் உயர்த்திச் செல்வார்களாக வரும் வாரங்களில், சீசன்களில்!
நடுவர்கள் எந்த அளவிற்கு இந்தப் போட்டியின் மகத்துவம் பற்றிப் புரிந்திருக்கிறார்களோ அந்த அளவு போட்டியாளர்கள் அதை உணரவில்லையோ என்று நினைக்கும்படியே இருக்கிறது இந்த மூன்று வாரங்களாகப் பார்த்தவரை. போட்டியாளர்களில் எத்தனை பேர் இதற்கு முன் Masterchef என்ற ஒரு ஷோவைப் பார்த்திருக்கிறார்கள் என்று நினைக்கும்படி இருக்கிறது அவர்கள் போக்கும் நோக்கும். Masterchef -ல் ஜெயிக்கவேண்டும் என்று கூட இல்லை. தோற்று எலிமினேட் ஆகி வெளியே சென்றவர்கள் கூட உணவு உலகில் சாதித்தது ஏராளம். Masterchef Australia Season 4-ன் வெற்றியாளர் Andy Allen இன்று அதே ஷோவின் நடுவர்கள் மூவரில் ஒருவர். Masterchef US Season 3-ன் வெற்றியாளர் Christine Ha பார்வைத் திறன் அற்றவர். இன்று அவர் ஒரு பிரபல chef, ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மற்றும் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளை நடத்துபவர். அவர் செய்த apple pie -ஐ Gordon Ramsey ருசி பார்க்கும் வீடியோவை YouTube-ல் பாருங்கள், உணவு என்பதின் ஐம்புல இலக்கணம் புரியும்.
வீட்டிலிருந்து நடத்தும் கேட்டரிங் முதல், பிரபல ரெஸ்டாரண்டுகளின் chef வரை என்று எலிமினேட் ஆனவர்கள் சாதித்ததைப் பட்டியல் போட தனியாய் ஒரு கட்டுரை எழுதவேண்டும். Masterchef என்பது ஒரு சாதாரண ஷோவோ ஒரு சமையல் கலை வகுப்போ அல்ல ஷோ முடிந்ததும் மறுபடியும் நம் வீட்டு சமையலறையில் நுழைந்து நம் அன்றாட சமையலைத் தொடர்வதற்கு. இந்தக் கூடத்தினுள் நுழைந்ததனாலேயே திறக்கக் காத்திருக்கும் கதவுகளும் விரியப்போகும் வாசல்களும் ஏராளம் என்பதை போட்டியாளர்கள் உணர்கிறார்களா என்று தெரியவில்லை.
ஏதோ தொலைக்காட்சியில் வந்தோம், சென்றோம் என்று பத்தோடு பதினொன்றாக இதையும் நினைப்பது போல் தான் தெரிகிறது. வீட்டு சமையலறைகளில் அவரவர் குடும்பத்தினருக்கென்று மட்டும் சமைத்துக் கொண்டிருந்த சமையல் ஆர்வலர்கள் வெளியுலகின் ப்ரொபஷனல் உணவு உலகில் நின்று நிலைக்கத் தேவையானத் திறன்களை அடையாளம் கண்டு, வளர்த்தெடுத்துத் தயார்படுத்தி, புடம் போட்டு, வெளியேற்றும் இடம் Masterchef கூடம். இதை போட்டியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 'எனக்கு எல்லாம் தெரியும்' என்பது போன்ற மனநிலையும், சிரித்து விளையாடி ஏதோ கொஞ்சம் சமைத்து என்பது போன்ற செய்கையும் தான் பெரும்பாலானோரிடம் இதுவரை பார்க்க முடிகிறது. வரும் வாரங்களில் எப்படியோ?
ஆனால் ஒன்று நிச்சயமய்யா - அவர்கள் சமைக்கும் உணவுகள் அனைத்தும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ரகம். சுவைத்துப் பார்க்க நம்மால் முடியாவிட்டாலும், நடுவர்களுக்குப் ப்ரெசென்ட் செய்யும் உணவுகளைப் பார்க்கும் போதேத் தெரிகிறது அவர்களின் நளபாகம். ஒவ்வொருவரும் சமைக்கும் உணவுகள் மட்டுமின்றி அவைகளுக்கு அவர்கள் வைக்கும் பெயர்களும் ... அடேங்கப்பா ... எல்லோருக்கும் திருஷ்டி சுற்றிப் போடவேண்டும்!
Leaving the best for last - விஜய் சேதுபதி. முதல் வாரத்தில் அவருடைய தடுமாற்றமும் புதிதாய் இருக்கும் unscripted reality ஷோவின் பழக்கமின்மையும் அவரிடம் அப்பட்டமாய்த் தெரிந்தன. ஆனால் விஜய் சேதுபதி அல்லவா - மூன்றாவது வாரத்திலேயே தேர்ந்த host ஆகிவிட்டார். சமைக்கும் போது போட்டியாளர்களிடம் பேச்சுக் கொடுப்பதும், காளான் வெட்டிக் கொடுப்பதும் (இது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதென்று இதற்குள் அவருக்கு சொல்லியிருப்பார்கள்), பாதி சமையலிலேயே ருசி பார்ப்பதும், எந்த உணவிற்கும் முடிந்தவரை எதிர்மறை வார்த்தைகள் சொல்லாமல் உண்டு / குடித்து இரசிப்பதும், வெளியேறும் போட்டியாளர்களுக்கு இருக்கும் வலியையும் ஏமாற்றத்தையும் மறக்கச் செய்யும்படி அவர்களைத் தன் அன்பிலும் நேசத்திலும் தோய்த்து அனுப்புவதும் ... அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிவிட்டார் விசே. நடுவர்களின் விமர்சனங்கள் போட்டியாளர்களைக் காயப்படுத்திவிடாமல் sugarcoat செய்து மறுவிநியோகம் செய்யும் போது மட்டும், 'சிற்பிகளை செதுக்க விடுங்களேன், விசே', என்று சொல்லத் தோன்றுகிறது. நடுவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணீரும், வியர்வையும், இரத்தமும் சிந்தி சேகரித்த அனுபவங்களையும் கற்ற பாடங்களையும் போட்டியாளர்களுக்குக் கற்றுத் தர அவர்களுக்கு இருக்கும் அவகாசம் இந்த ஒரு ஷோ மட்டுமே. உளி சற்று ஓங்கி விழத்தான் செய்யும். தன் சுய நலனுக்கான விமர்சனங்களைத் தாங்க முடியாதவர்களா என்ன தமிழர்கள்?
ஒரே ஒரு வேண்டுகோள் விஜய் சேதுபதியின் காஸ்ட்யூமருக்கு - தயவுசெய்து அவரின் உடலுக்கு உகந்த, மேனியை உறுத்தாத துணிகளில் அணிவதற்கு இலகுவான ஆடைகளை அவருக்கு வடிவமையுங்கள். His discomfort is palpable. அவர் ஏற்றிருப்பது ஏதோ ஒரு திரைப்படத்தின் ஏதோ ஒரு கதாபாத்திரம் அல்ல. He is The விஜய் சேதுபதி, as himself. அவருடைய பர்சனாலிட்டிக்கு ஏற்ற ப்ரொபஷனல் ஸ்டைலில் நியூட்ரல் வண்ணங்களில் அவரின் உடற்கட்டிற்கு ஏற்றாற்போல் அவருக்கென்று ஒரு ட்ரேட்மார்க் லுக் உருவாக்கி வாரந்தோறும் உலவவிடுங்கள் - (Masterchef Australia பழைய நடுவர்களின் ஒருவரான Matt Preston-ன் க்ராவட் (cravat) அவருடைய ப்ரத்யேக ஸ்டைல்) - பார்த்து ரசிக்க நாங்கள் ரெடி.
இந்த சீசனைப் பார்த்துவிட்டு அடுத்த சீசன்களில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் + டிப். OTT தளங்களில் அல்லது YouTube-ல் கிடைக்கும் அத்தனை Masterchef ஷோக்களையும் ஒன்று விடாமல் பாருங்கள். ஷோவின் மகத்துவம் மட்டுமல்ல அந்தப் போட்டியின் வழிமுறைகளும் பிடிபடும், சமையல் டெக்னீக்குகளும் புரிபடும். இத்தனை ஷோக்கள் வந்தபோதும் Masterchef Australia -வுக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது பார்வையாளர்கள் மனதில். அதற்கான முதன்மையான காரணம் அதன் பங்கேற்பாளர்கள். ஆடிஷன் தொடங்கி ஃபைனல் வரை அவர்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவிப்பதும், தொய்ந்த நேரத்தில் தூக்கி நிறுத்துவதும், அடுத்தவர் வெற்றியில் உண்மையாய் மகிழ்வதும், முதல் வாரம் தொடங்கி இறுதி வாரம் வரை அவர்களிடையே நிலவும் அன்யோன்யமும் நட்பும் தான். Masterchef ஷோவின் பங்கேற்பாளர்களுக்குப் போட்டி சக பங்கேற்பாளர்கள் அல்ல - அவரவர் சமையல் திறமையும் மனதின் திடமும் தான். Masterchef-ல் பங்கேற்க வாய்ப்பு கிடைப்பவர்கள் இதை மனதில் இருத்திக் கொண்டு சென்றால் வெள்ளை ஏப்ரனும் வெற்றியும் நிச்சயம்.
தமிழர்களுக்கு ஒரு விஷயம் பிடித்துப் போகக் கொஞ்ச காலம் எடுக்கும். எதையும் அவ்வளவு எளிதில் அண்ட விட மாட்டோம். ஆனால் இதயத்தில் ஒரு முறை ஏற்றிவிட்டால் ஏற்றியதைக் கீழே இறக்கியும் விடமாட்டோம். ‘Masterchef தமிழ்’ அப்படி இறங்காத இடம் ஒன்றைப் பிடிக்கட்டும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில்!
எந்த ஷோவும் பார்த்து அனுபவித்து இரசிப்பதற்குத் தான், அது எப்பேர்ப்பட்ட போட்டியாக இருந்தாலும். Masterchef தமிழும் அனுபவித்து இரசிப்பதற்கான ஷோதான். So, எஞ்சாய் எஞ்சாமி ... !
-கா. தாஸ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-master-chef
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக