Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

``உடல்களை நதிகளில் வீசி எறியவில்லை" கொரோனா விமர்சனங்களுக்குக் காட்டமாக பதிலளித்த பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை முப்பதாயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா குறித்து கருத்து தெரிவித்த கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் கேரள அரசு மக்களைக் கொலை செய்வதாகக் கடுமையாக சாடியிருந்தார். மேலும், "கேரளத்தில் 31,445 கொரோனா தொற்று பதிவான அன்று, நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் வெறும் 5,031 தொற்று எண்ணிக்கை மட்டுமே பதிவாகியுள்ளது. கேரளாவைவிட எட்டு மடங்கு பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 19 தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கேரளம் நம்பர் ஒன் என கோடிகளை செலவுசெய்து விளம்பரம் செய்கிறது கேரள அரசு. ஆனால், பினராயி விஜயன் கொரோனாவில் கேரளத்தை நம்பர் ஒன் ஆக்கிவிட்டார்" என சுரேந்திரன் கூறியிருந்தார்.

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். கே.சுரேந்திரனின் குற்றச்சாட்டுக்கு பினராயி விஜயன் பதிலடி கொடுத்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "நாட்டில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் கேரளத்தில் மரணத்தை குறைக்க முடிந்தது.

ஆக்ஸிஜன் இல்லாமல், சிகிச்சைக்கான வசதிகள் இல்லாமல் மக்கள் நோயாளிகளுடன் தெருக்களில் அலையும் நிலை கேரளத்தில் ஒருவருக்கு கூட ஏற்படவில்லை. உறவினர்களின் உடல்களை தகனம் செய்ய சுடுகாடுகளில் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிகள் நம் மாநிலத்தில் காணும் நிலை ஏற்படவில்லை. வேறு வழியில்லாமல் கொரோனாவில் இறந்தவர்களின் உடல்களை நதிகளில் வீசி எறியவில்லை.

Also Read: மக்கள் தொகையில் சரி பாதி பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி; அசத்தும் கேரளா!

கொரோனா விமர்சனங்களுக்கு பதிலளித்த பினராயி விஜயன்

எவ்வளவு தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இந்த உண்மைகள் மக்கள் முன்னால் உள்ளன. இது மக்கள் உணர்ந்த அனுபவமாகும். மக்களின் ஒருங்கிணைந்த போராட்டம் இது. அந்த வித்தியாசத்தை உலகம் கண்டு அறிந்திருந்தது" என்றார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலையின்போது நதிகளில் உடல்கள் மிதந்து வந்த சம்பவங்கள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு விவகாரம் மற்றும் சில மாநிலங்களில் கொரோனாவில் இறந்தவர்கள் உடல்களைத் தகனம் செய்ய நீண்ட வரிசையில் நின்றிருந்த விஷயங்களைச் சுட்டிக்காட்டி பினராயி விஜயன் சூடாக பதிலளித்திருப்பது கேரள அரசியலில் தகிப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/india/kerala-chief-minister-pinarayi-vijayans-statement-on-covid-cases-in-kerala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக