Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

` மனைவியைத் தேடிச்சென்ற நபர்; கொள்ளையன் என வாகனத்தில் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட கொடூரம்!'

மத்தியப்பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று, சரமாரியாகத் தாக்கப்பட்டு ஆடைகள் கிழிந்த நிலையில் நபர் ஒருவர் நான்கு சக்கர லோடு வாகனம் ஒன்றின் பின்னால் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெகு தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீமுச் மாவட்டத்தின் ரத்தங்கர் காவல்நிலையத்தில் கோவிந்த் பீல் என்ற நபர் அந்த வீடியோ தொடர்பாகப் புகார் ஒன்றினை அளித்தார். வீடியோவில் ஈவு இரக்கமின்றி வாகனத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட நபர் தனது நண்பர் என்றும், சாலை விபத்து ஒன்றின்போது ஏற்பட்ட மோதலில் எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்கி வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க கோவிந்த் போலீஸாரிடம் நடந்ததை விவரித்திருக்கிறார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட ரத்தங்கர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கோவிந்திடமும், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் சங்கோலி பகுதி மக்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சாலை விபத்தில் ஏற்பட்ட மோதலில் லோடு வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று கொலைசெய்யப்பட்ட நபர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கால்களில் கயிற்றைக் கட்டி லோடு வாகனத்தில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று சித்ரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காகச் சம்பவத்தை போலீஸார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் 6 பேரைக் கைது செய்திருக்கின்றனர்.

Also Read: `முதுகில் கீறிவிட்டு காலை வெட்ட முயன்றனர்!' - போலீஸை எதிர்த்த பழங்குடியின இளைஞருக்கு நேர்ந்த துயரம்

கொலைசெய்யப்பட்ட கன்ஹையாலா பீல்

சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நீமுச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூரஜா குமார் வர்மா, "நீமுச் மாவட்டம், பந்தா கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான கன்ஹையாலா பீல் என்பவர் தனது நண்பர் கோவிந்த் பீலுடன் சேர்ந்து, வீட்டிலிருந்து வெளியேறிய தனது மனைவியைத் தேடி இருசக்கர வாகனத்தில் நீமுச்-சங்கோலி சாலைக்கு சென்றிருக்கின்றனர். அங்கு கன்ஹையாலா தனது மனைவியை எதிர்நோக்கி கையில் கற்களை வைத்து கொண்டு காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்த் திசையில் வந்த பால் வியாபாரி சித்தர்மால் குர்ஜார் என்பவர் கன்ஹையாலா மற்றும் அவரது நண்பர் கோவிந்த் இருவரையும் நெடுஞ்சாலை கொள்ளையர்கள் எனக் கருதி நிலைதடுமாறி வாகனத்தை அவர்கள் மேல் மோதி கீழே சாய்த்திருக்கிறார். அதில், சித்தர்மால் தனது வாகனத்தில் கொண்டு வந்த பால் மொத்தமாகச் சாலையில் சிந்தியிருக்கிறது. அதையடுத்து, ஆத்திரமடைந்த சித்தர்மால், கன்ஹையாலா மற்றும் கோவிந்த் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.

மேலும், உடனடியாக தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, அவர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்திருக்கிறார். அவர்களைக் கண்டதும் கன்ஹையாலாவின் நண்பர் கோவிந்த் அங்கிருந்து தப்பியோடிடவே, கன்ஹையாலா மட்டும் அவர்களிடம் சிக்கியிருக்கிறார். அவரை பால் வியாபாரி மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் பலமாகத் தாக்கியிருக்கின்றனர். அவ்வழியே சென்ற தனது நண்பர் ஒருவரின் லோடு வாகனத்தில் கன்ஹையாலாவின் கால்களைக் கட்டி, பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனத்தை இயக்கியிருக்கிறார். அதில், உடலில் சிராய்ப்பு ஏற்பட்டு கன்ஹையாலா வலியில் அலறி துடித்திருக்கிறார். அதை சித்தர்மாலின் நண்பர்கள் தங்கள் மொபைலில் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். பின்னர், கன்ஹையாலா மயக்கமடைந்து விட ரத்த காயங்களுடன் அவரை சாலையிலேயே போட்டு விட்டு, அருகிலிருந்தவர்களிடம் கொள்ளையன் என்று கூறி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்ட பொதுமக்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், வெள்ளிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அதைத் தொடர்ந்து, உயிரிழந்த கன்ஹையாலாவின் நண்பர் கோவிந்த் அளித்த புகாரின் அடிப்படையில், கன்ஹையாலாவை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்த 8 பேர் மீது இந்தியத் தண்டனை சட்டம் 302 மற்றும் எஸ்.சி/எஸ்.டி தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு அவர்களில் 6 பேரைக் கைது செய்திருக்கிறோம்" என்றார்.

Also Read: மும்பை: மகளின் கராத்தே பெல்ட்; நீட் தேர்வுக்குப் படிக்கச் சொன்ன தாய்க்கு நேர்ந்த கொடூரம்!

பழங்குடியின நபரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பட்டான் கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி சித்தர்மால் தலைமறைவாகி விட்ட நிலையில், கைது செய்யப்பட்டிருக்கும் அவரது கூட்டாளிகள் போலீஸாரின் விசாரணையில், தாங்கள் கன்ஹையாலா மற்றும் அவரது நண்பர் கோவிந்த் இருவரையும் நெடுஞ்சாலை கொள்ளையர்கள் என்று தவறாக நினைத்துத் தாக்கியதாகக் கூறியிருக்கின்றனர். தொடர்ந்து, போலீஸார் சித்தர்மால் மற்றும் கூட்டாளிகள் கொலைக்குப் பயன்படுத்திய லோடு வாகனம், கயிறு உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, "இது போன்ற காட்டுமிராண்டித்தனத்தை மத்தியப்பிரதேசத்தில் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/tribal-man-tortured-and-tied-to-a-vehicle-and-dragged-by-truck-dies-in-madhya-pradesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக