Ad

சனி, 28 ஆகஸ்ட், 2021

Covid Questions: ஒரு வருடத்திற்கும் மேலாக சானிட்டைசர் பயன்படுத்துகிறேன்; எனக்கு சரும பாதிப்பு வருமா?

கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு வருடத்திற்கும் மேலாக தினந்தோறும் சானிட்டைசர் பயன்படுத்துகிறேன்; இதனால் சரும பாதிப்புகள் ஏதேனும் வர வாய்ப்புள்ளதா? அடிக்கடி கைகளில் வறட்சி, சிவந்து போவது போன்று வருகிறது. எப்படிப் பாதுகாப்பது?

- மேகா (விகடன் இணையத்திலிருந்து)

சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``ஹேண்ட் சானிட்டைசர்களில் 70 சதவிகிதத்துக்கும் மேலாக ஆல்கஹால் இருக்கும். ஆல்கஹால் கலந்த சானிட்டைசரை தொடர்ந்து உபயோகிப்பதால் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கு எக்ஸீமா (Eczema) எனும் சருமப் பிரச்னை வரலாம். சரும வறட்சி ஏற்படலாம். சருமத்தில் எரிச்சல், சிவந்து போவது, நீர் வடிதல் போன்றவையும் வரலாம். சானிட்டைசர் உபயோகிப்பது மட்டுமன்றி, நிறைய பெண்கள் வீடுகளில் பாத்திரங்கள் தேய்க்கவும் துணி துவைக்கவும் டிடெர்ஜென்ட் உள்ளிட்டவற்றை உபயோகிக்கிறார்கள்.

Also Read: Covid Questions: டஸ்ட் அலர்ஜி, உணவு அலர்ஜி இருப்பதால் தடுப்பூசி போட பயமாக உள்ளது; என் பயம் சரியா?

அதற்காக தற்போதைய கொரோனா சூழலில் கைகளைச் சுத்தப்படுத்தாமல் இருப்பதும் ஆபத்தானது. அடிக்கடி கைகளைக் கழுவி, சுத்தமாக வைத்திருப்பதை இனி நம் அன்றாட பழக்கங்களில் ஒன்றாகப் பின்பற்றியே ஆக வேண்டும்.

சானிட்டைசருக்கு பதில் மைல்டான சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது சிறந்தது. லிக்யுட் சோப்பும் வெதுவெதுப்பான நீரும் உபயோகித்துக் கைகளைக் கழுவ வேண்டும். கைகளைக் கழுவியதும் மாயிஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் உள்ளவர்கள் கிளவுஸ் உபயோகிக்கலாம்.

Hand Sanitizer

Also Read: Covid Questions: கொரோனா குணமானது; ஆனால் தூக்கமின்மையால் அவதிப்படுகிறேன்; இதற்கு தீர்வுகள் உண்டா?

ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் கைகளுக்கு சானிட்டைசர் உபயோகிக்கக்கூடாது. வாசனை அதிகமில்லாத சோப் உபயோகிக்கலாம். இரவில் கைகளை சோப் போட்டுக் கழுவிவிட்டு, மீண்டும் மாயிஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். பெட்ரோலேட்டம் (petrolatum) உள்ள மாயிஸ்ச்சரைசர் சிறந்தது. இதற்கு மேல் கைகளுக்கு கிளவுஸ் போட்டுக் கொண்டு தூங்கலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/will-using-hand-sanitizer-for-a-prolonged-time-cause-any-skin-diseease

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக