Ad

சனி, 28 ஆகஸ்ட், 2021

``தினமும் 10,000 ஆடு மாடுங்க வரை இங்க வரும்!" - 50 ஆண்டுகளாக கால்நடைகளின் தாகம் தணிக்கும் விவசாயி

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. மழையை மட்டுமே நம்பியுள்ள இந்த மானாவாரி விவசாயத்தை மேற்கொண்டு வரும் விவசாயிகள், ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மழைபெய்யாமல் மானாவாரி விவசாயம் கைவிட்டாலும், கால்நடைகள் வளர்ப்பில் கணிசமான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். வானம் பார்த்த பூமியில் கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் தண்ணீர் எளிதில் கிடைத்துவிடும்.

வரப்பில் பாயும் தண்ணீர்

Also Read: `23 வருஷமா இவங்கதான் என் உலகம்!' - நகைகளை விற்று தெரு நாய்களுகளுக்கு உணவளித்து வரும் விஜயலட்சுமி

ஆனால், கோடைக் காலங்களில் தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிது. அதனால், கோடைக்காலம் தொடங்கியதும் பெரும்பாலும் கால்நடைகளை விற்பனை செய்துவிடுவார்கள். ஆனால், கோவில்பட்டி கருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20-க்கு மேற்பட்ட கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை. கருப்பூரைச் சேர்ந்த 80 வயதான முதியவர் சித்தவன்தான் அதற்கு காரணம். 80 வயது என்று கூறப்பட்டாலும் இளைஞரைப் போல கிராமத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் சித்தவன்.

50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிணற்றிலிருந்து தினமும் மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து தன் நிலத்தில் ஒரு பகுதியில் தேக்கி வைத்து கால்நடைகளின் தாகத்துக்கு வழங்கி வருகிறார். விவசாயி சித்தனிடம் பேசினோம். ``இந்தப் பகுதி முழுக்கவே மானாவாரி விவசாயம்தான். விவசாயம்தான் என்னோட பூர்வீகத் தொழில். 30 வருஷத்துக்கு முன்னால என்னோட இறவை நிலத்துல விவசாயப் பணிகளைப் பார்த்துக்கிட்டு இருந்தப்போ ஒரு நாள் மதிய நேரத்துல பத்துப் பதினைஞ்சு ஆட்டுக்குட்டிங்க நிலத்துல தேங்கிக் கிடந்த சிறிதளவுத் தண்ணீரைக் குடிக்க ஆவலா வந்துச்சு.

நிலத்தில் சித்தவன்

தாகத்தோட தண்ணிய குடிச்சுட்டு துள்ளி குதிச்சு ஓடினதைப் பார்த்தப்போ மனசுக்கு சந்தோஷமாவும் நிறைவாவும் இருந்துச்சு. அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் கால்நடைகளின் தாகம் தீர கிணத்துல காலையில மோட்டர் போட்டு தண்ணிய தேக்கி வச்சிருவேன். ஆடு, மாடுங்க எந்தப் பகுதியில மேய்ச்சலுக்குப் போனாலும் மத்தியானம் உச்சிப் பொழுதுல இங்க வந்துடும்.

இப்போதான் மின் மோட்டர் பயன்பாட்டுல இருக்கு. அன்னைக்கெல்லாம் ஆயில் இன்ஜின் மோட்டார்தான். இருந்தாலும், கால்நடைகளின் தாகத்தைப் போக்குறதுக்காக, டீசல் வாங்கி ஊற்றித் தினமும் கிணற்றில் இருந்து நிலத்துல தண்ணிய தேக்கி வைச்சுருவேன். ஆரம்பத்துல ரெண்டு, மூணு கிராமத்தைச் சேர்ந்த ஆடு, மாடுகள்தான் தண்ணி குடிக்க வந்துச்சு.

தண்ணீர் பருகும் ஆடுகள்

போகப் போக தோமலைப்பட்டி, வடமலாபுரம், கோட்டூர், உப்பத்தூர் எனச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் தினம் தங்களது கால்நடைகளைத் தண்ணீர் குடிப்பதற்காக இங்கே அழைச்சுட்டு வர ஆரம்பிச்சாங்க. தினமும் மதியம் 12 மணியில இருந்து 3 மணி வரைக்கும் இங்க கால்நடைகளின் கூட்டத்தைப் பார்க்க முடியும். எதோ நம்மளால முடிஞ்சது” எனச் சிரிக்கிறார் வெள்ளந்தியாக.

ஆடுகளை வளர்த்து வரும் தோமலைப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ``கண்மாய்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தாலும், கோடைக்காலங்கள்ல கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைப்பது ரொம்ப சிரமம். ஆனா, சித்தவன் ஐயா நிலத்தில் எப்போதும் கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகளும் தண்ணீருக்காக சித்தவன் ஐயா நிலத்தை நம்பிதான் இருக்குது.

தண்ணீர் பருகும் ஆடுகள்

Also Read: பசுவுக்கு கிராம மக்களுடன் சேர்ந்து வளைகாப்பு; விவசாயி சொல்லும் நெகிழ்ச்சி காரணம்!

தினமும் 10,000 ஆடு, மாடுகள் வரை தண்ணி குடிச்சுட்டுப் போகுதுங்க. கால்நடைகளுக்குத் தண்ணீர் தருவதை ஒரு நாளும் அவர் நிறுத்தியது கிடையாது. தோட்டத்துல அவர் இல்லாவிட்டாலும், பம்பு செட் பக்கத்துல ஒரு இடத்துல சாவியை வச்சுட்டுப் போவார். பம்பு செட் ரூமைத் திறந்து நாங்களே மோட்டர் போட்டு தண்ணீரை தேக்கிக்குவோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.



source https://www.vikatan.com/news/agriculture/thoothukudi-farmer-quenches-animals-thirst-by-giving-water-daily-for-50-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக