Ad

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

AKS - 7 | சென்னைக்கு வந்ததும் காயத்ரியின் மாற்றங்களை வரவேற்கலாம்தான்… ஆனால்?

கல்லூரி வரை வீட்டிலிருந்தே சென்றுவரும் பெண்களுக்கு திடீரென 21 - 22 வயதுக்கு மேல் வேறு ஊரில் வேலைக்கு செல்லும் சுதந்திரம் வெளி உலகைக் காண மிகப்பெரிய வாசலை திறந்து வைக்கிறது. இதில் அவர்களுக்கு நல்ல விஷயங்களும் நடக்கலாம், ஆபத்துகளும் வரலாம். ஆனாலும் இந்த வெளியுலக அனுபவம் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பு அவசியம்.

தஞ்சையில் கிராமத்தில் வளர்ந்த, எல்லாவற்றுக்கும் தன் வீட்டினரை சார்ந்திருக்கும் காயத்ரியும், தேனி போன்ற நகரத்தில் அன்பான நடுத்தரக் குடும்பத்திலிருந்து பாண்டியனும், பெங்களூருவின் மெட்ரோ வாழ்க்கைமுறையில் அதீத சுதந்திரமும், தனிமையுமாக வாழ்ந்த சிவாவும் ஒரே நாளில் சென்னைக்கு வருகிறார்கள்.

கூட்டுக் குடும்பத்தில் எல்லோருடைய கருத்துக்கும் மதிப்பளித்து, எல்லோருக்கும் பணிந்து போகப் பழக்கப்பட்ட காயத்ரியும், தன்னுடைய நலன், வசதி என்று தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் சிவாவும் டாக்ஸியில் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழலில் சந்திக்கிறார்கள்.

AKS - 7 - ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரிக்கு ஒரே டாக்சியில் முன் அறிமுகமில்லாத ஆண்களுடன் பயணம் செய்வது ஆரம்பத்தில் அசௌகரியமாக இருந்தாலும் புனிதா புக் செய்ததால் வேறு வழியின்றி காரில் ஏறிக்கொள்கிறாள். சிவா அருகிலிருக்கும் காயத்ரியின் மேல் கால்படுவது போல் கால் மேல் கால் போட்டு உட்காருகிறான். காயத்ரிக்கு அது தொந்தரவாக இருக்கிறது என்று அவனிடம் சொல்லும்போது அவன் கோபப்டுகிறான். தூங்கிக்கொண்டிருந்த அவன் நண்பன் பரத் தலையிட்டு சண்டையை சமாதானம் செய்கிறான்.

பொது இடங்களில் சத்தமாக பேசுபவர்கள், நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்பவர்கள் எல்லாம் கிராமத்துக்காரர்கள் என்பது போல் திரைப்படங்களில் நகைச்சுவைக்காக காட்சி அமைக்கிறார்கள். நிஜத்தில் கிராமத்துக்காரர்கள் நகரத்துக்கு வரும்போது நகரத்தின் பிரமாண்டத்தையும், படித்த மக்களையும் பார்த்து பயந்து பணிவாக நடந்து கொள்கிறார்கள்.

ஆனால், பொது இடங்கள் மற்றும் பயணங்களில் உடன் பயணிப்பவர்கள் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய இஷ்டப்படி தங்கள் உரிமைக்கு மீறி இடத்தை எடுத்துக்கொள்வது, பொது இடங்களில் புகைப்பிடிப்பது போன்ற காரியங்களை மற்றவர்களை பற்றி எந்த அக்கறையும், நாகரீகமும் இன்றி செய்பவர்கள் பெரும்பாலும் நகரத்தை சேர்ந்த படித்தவர்களாக இருக்கிறார்கள்.

புகைப்பிடிக்க ஆசைப்படும் சிவா சிகரெட்டை எடுத்ததும் மருத்துவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடச் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனால், உடனடியாக அதை நிறுத்த முடியாததால் சிகரெட்டை மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். காயத்ரி கோபப்பட்டு அவனிடம் பேசிவிட்டு, ஓட்டுநரிடம் அவன் சிகரெட் பிடிக்கிறான் என்று புகார் சொல்கிறாள்.

புதிதாக பெரு நகரத்துக்கு வரும் இளம்பெண்கள் காயத்ரியை போல தைரியமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றாலும் அவசரப்பட்டு ஒன்றை தவறாக புரிந்துகொண்டு முடிவு எடுப்பவர்களாகவும் பல சமயங்களில் இருந்து விடுகிறார்கள்.

AKS - 7 - ஆதலினால் காதல் செய்வீர்

ஆணும், பெண்ணும் ஒரே டாக்ஸியில் அல்லது பெண்கள் தனியாக டாக்ஸியில் செல்வதே இன்னும் அதிசயமாக பார்த்துக் கொண்டிருக்கும் கிராமங்களும், சிறுநகரங்களும் இருக்கின்றன. அங்கிருந்து வரும் பெண்கள் அறிமுகமில்லாத ஆண்களுடன் செல்லும்போது அதீத எச்சரிக்கை உணர்வுக்கு உள்ளாகிறார்கள். அதனால் பல சமயங்களில் ஆண்கள் தவறாக நடக்கக்கூடும் என்று இவர்களாக கற்பனை செய்துகொண்டு அவர்கள் தவறு செய்வதற்கு முன்னமே புகாரோ, தண்டனையோ கொடுத்துவிடுகிறார்கள்.

ஊரில் எல்லாவற்றுக்கும் பயந்து பணிந்து போகும் காயத்ரி, சென்னை வந்ததும், எல்லோரிடமும் சகஜமாக பேசுவது, கோபப்படுவது, தனியாக கால் டாக்ஸியில் வீட்டுக்கு செல்வது போன்ற உடனடி மாற்றங்களை காண மகிழ்ச்சியாக இருக்கின்றது.

காயத்ரி ஓட்டுனரிடம் சிவா புகைப் பிடிப்பதாக புகார் சொன்னதும், சிவா கோபத்தில் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி விடுகிறான். பாதி வழியில் காரிலிருந்து இறங்கிய சிவாவிடம் ஏன் இறங்கி விட்டாய் என பரத் கேட்கிறான். ‘’அந்த பெண்ணை அடித்தே இருப்பேன், ஆனால் டாக்டர் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் என்ன தோன்றுகிறதோ அதற்கு Opposite ஆக நடந்துகொள்ளச் சொன்னது நினைவு வந்ததால் இறங்கிவிட்டேன்'’ என சிவா சொல்வான். சிவா டாக்டர் சொல்வதை பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறான் என்று பரத் மகிழ்ச்சியடைகிறான்.

மருத்துவரின் ஞாபகம் வந்ததால் சிகரெட்டை புகைக்காமல் முகர்ந்து பார்த்து வைத்து விடுவதும், காயத்ரி மேல் கோபம் வந்ததும் காரை விட்டு இறங்கி விடுவதும் சிவா சிறிது சிறிதாக ஒரு மாற்றத்தை நோக்கி நகர்கிறான் என்று நம்பிக்கை வருகிறது. சிவாவை போல சிறுவயதில் இருந்து குடும்ப சூழ்நிலையால் தனிமையில் வளர்பவர்களுக்கு கொஞ்சம் கவுன்சிலிங்கும், அன்பும் கிடைத்தால் யாரும் கோபத்தை விட்டு மாறத் தொடங்குவார்கள். அவர்கள் முழுமையாக மாறும்வரை உடனிருந்து பக்குவமாக பேச பரத்தை போன்றவர்கள் வேண்டும். அப்படியான உறவுகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. பரத்தின் அக்கறையும், சிவாவின் மாற்றமும் பாசிட்டிவ் எண்ணத்தை அளிக்கிறது.

AKS - 7 - ஆதலினால் காதல் செய்வீர்

வீட்டுக்கு வரும் காயத்ரி, அவ்வளவு பெரிய வீட்டின் பிரமாண்டம், தனி பெட்ரூம், மெத்தை எல்லாவற்றையும் கண்டு குதூகலமாகி, கண்ணாடியில் பார்த்து ’சிட்டி கேர்ள்’ ஆகிவிட்டதாக மகிழ்ச்சியில் தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள்.

இந்த உணர்வு சென்னை போன்ற பெருநகரத்தை பார்த்து மட்டும் வந்தது அல்ல. கட்டுப்பாடுகள் நிறைந்த இடத்திலிருந்து வெளியேறி, வெளி உலகத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், குறைவான காலமே ஆனாலும் தனக்கு தேவையானவற்றை தானே பார்த்துக்கொள்ளும் மிகச்சிறிய சுதந்திரத்தின் மகிழ்ச்சி அது.

பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு சிந்தித்து முடிவெடுக்க உதவுகிறது. மேலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் பலவிதமான மக்களை பார்த்து பழகும் வாய்ப்புப் பெற்றவர்கள். இவர்கள் வீட்டில் உள்ளவர்களை மிக எளிதாக அனுசரித்து போகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பெண்களின் வருமானம் ஈட்டுதல், அவர்களது சுதந்திரம் முதலியவை சமூகத்துக்கு பிரச்சனையாக இருப்பதால், வேலைக்கு செல்லும் பெண்கள் குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டார்கள் எனும் பிம்பம் போலியாக கட்டமைக்கப்படுகிறது

AKS - 7 - ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரியும் சிவாவும் வீட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள். காயத்ரியின் அறைக்குள் தவறுதலாக வந்துவிட்ட சிவாவை பார்த்து பயந்து செக்யூரிட்டியை அழைக்கிறாள் காயத்ரி. பரத் அவர்களை சமாதானப்படுத்தி சிவாவை வேறு அறைக்கு அழைத்து செல்கிறான். சிவா அறையை விட்டு வெளியேறியதும் காயத்ரி வேகமாக கதவை அடைக்கிறாள்.

அவர்கள் ஆண்கள் என்பதாலேயே அவர்களுடன் இருக்க அஞ்சுவது போல அவள் கதவை சாத்தும் வேகம் இருக்கிறது. அறிமுகமில்லாத எந்த ஆணாக இருந்தாலும் அவர்களை உடனடியாக சந்தேகம் கொள்ளலாம், அவர்களை சந்தேகப்படுகிறோம் என்பதை அவர்களிடமே காட்டிக் கொள்ளலாம் என்கிற உரிமையை பெண்கள் எளிதாக ஆண்களிடம் எடுத்துக் கொள்கிறார்கள். இது ஆண்களை காயப்படுத்தலாம் என்கிற விஷயத்தை பெண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எல்லா ஆண்களும் ஒன்று என்று பொதுமைப்படுத்த தேவையில்லை.

’’ஒரு ஆணை கண்டதும் அல்லது அவனிடம் உரையாடும்போது அடிக்கடி உடையை சரி செய்துகொள்வது, அந்த ஆணின் கண்ணியத்தை நேரடியாக அவமானப்படுத்தும் செயல்’’ என்று பள்ளியில் அடிக்கடி உடையை சரி செய்துகொள்ளும் பழக்கம் பதின்வயதில் தொடங்கியபோது எங்கள் வகுப்பாசிரியை சொல்வார்.

காயத்ரி முகத்தில் அறைந்தாற்போல் கதவை மூடிக்கொள்வது சிவாவை காயப்படுத்துகிறது. பரத் அவனை சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறான். மேலோட்டமாக பார்த்தால் பெண்பிள்ளை அப்படித்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் பார்க்கும் ஆண்களை எல்லாம் அவ்வாறு சந்தேகப்படத் தேவை இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

வெகு நேரமாக கேன்டீனில் பாண்டியனுக்காக காத்திருக்கும் கவிதாவை கேன்டீன் ஊழியர் விசாரிக்கிறார். உடனே தப்பிப்பதற்காக புனிதாவின் பெயரை சொல்லிவிடுகிறாள் கவிதா. அதை பக்கத்து இருக்கையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் புனிதா, எழுந்து வந்து பேசுகிறாள். அவளது பெயரை பயன்படுத்தியதற்காக புனிதாவுக்கு லேசாக கோபம் வருவதற்குள் அங்கு வரும் பாண்டியன், கவிதாவை அறிமுகப்படுத்தி வைக்கிறான். மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். பாண்டியன் கவிதாவுக்கு ஊட்டி விடுவதும், பாண்டியன் நீர் அருந்திய கிளாஸில் கவிதா நீர் அருந்துவதையும் பார்க்கும் புனிதா ஆச்சரியப்பட்டு, “நீங்கள் இருவரும் லவ்வர்ஸா?” எனக் கேட்கிறாள். பாண்டியன் திருதிருவென்று முழிக்கும் அதே சமயம், கவிதா குறும்பாக சிரிப்பதோடு முடிகிறது ஏழாவது எபிசோட் முடிவடைகிறது. அவர்கள் காதலர்களாக இருக்கக்கூடும் எனும் ஊகத்தில் கொஞ்சம் குழப்பத்தை ஊற்றியிருக்கிறது இன்றைய எபிசோட்!

காத்திருப்போம்!


source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinaal-kaadhal-seiveer-digital-series-episode-7-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக