Ad

சனி, 28 ஆகஸ்ட், 2021

புதுக்கோட்டை: கட்சித் தாவிய தலைவி; கொந்தளித்த அதிமுக, திமுக! -மாவட்ட ஊராட்சியில் நடப்பது என்ன?

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் இயல்பு கூட்டம் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை மாவட்ட திட்டப்பிரிவு அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார்.

மாவட்ட ஊராட்சியைப் பொறுத்தவரை திமுக 11 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும், அதிமுக 8 இடங்களையும், தமாக 1 இடத்தையும் பிடித்தது. திமுக கூட்டணிக்கு 13 இடங்கள் இருந்தும், காங்கிரஸ், திமுகவில் ஒரு உறுப்பினர் என 3 பேர் மறைமுகத் தேர்தலில் மாற்றி வாக்கு போட்டதால், அதிமுக மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக உறுப்பினர் ஜெயலெட்சுமி மாவட்ட ஊராட்சித் தலைவரானார்.

அதிமுக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து மாவட்ட ஊராட்சியைக் குறுக்கு வழியில் பிடித்துவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்தது. இதற்கிடையே அதிமுகவிலிருந்து பதவியைப் பிடித்த ஜெயலெட்சுமி கடந்த வாரம் திமுகவில் இணைந்துவிட்டார். தமாக உறுப்பினர் இறந்துபோனதால், அதிமுக எண்ணிக்கை 7ஆகிப் போனது. இதற்கிடையே தான் மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அதிமுக உறுப்பினர்கள் 7 பேர் கலந்துகொண்டனர். திமுக உறுப்பினர்கள் வராத நிலையில், ஜெயலெட்சுமி தனி அறையில் அமர்ந்திருந்தார்.

Also Read: சென்னை: `உள்ளாட்சி தேர்தல் பகை?’ - வெட்டி கொல்லப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்

அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர்கள் ஜெயலெட்சுமி தலைவராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பதவியை ராஜினாமா செய்யக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர்கள், அதிமுக தயவில் தலைவர் பதவி வாங்கிவிட்டு, அதிமுக-வுக்குத் துரோகம் செய்ததை ஒருபோதும் மன்னிக்கமுடியாது. அதிமுக உறுப்பினர்களின் தயவால் பெற்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தி தலைவராகப் பதவியேற்கட்டும் என்று தலைவர் ஜெயலெட்சுமிக்கு எதிராகத் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, ஜெயலெட்சுமி திமுகவில் இணைந்தாலும், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவரையே தலைவராகத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியே திமுக கூட்டத்தைப் புறக்கணித்தாகக் கூறப்படுகிறது. அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகக் குறைவான நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்பட்சத்தில், மாவட்ட ஊராட்சியைத் திமுக கைப்பற்றவே அதிக வாய்ப்பிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/aiadmk-members-against-the-district-panchayat-chief

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக