Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

`12.30 மணிக்கு கொலை முயற்சி; 2.30 மணிக்கு கொலை!’ - அடுத்தடுத்த குற்றங்களை அரங்கேற்றிய கும்பல்

தூத்துக்குடி தெர்மல்நகரைச் சேர்ந்தவர் ராமநாதன் என்ற ரமேஷ். இவர், கடந்த 26-ம் தேதி பூபால்ராயர்புரத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அங்கு சிலர் மதுபோதயில் நடனம் ஆடியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ரமேஷின் நண்பர் ஒருவர் நடனமாடிய சிலரை அடித்துள்ளார். இதுகுறித்து வடபாகம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. தன் நண்பர்களை அடித்தவர்களை அடையாளம் காட்டும்படி 3வது மைல் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி, முத்துப்பாண்டி உள்ளிட்ட சிலர் ரமேஷின் வீட்டிற்கு நேரில் சென்று மிரட்டியுள்ளனர்.

ரமேஷ் கொலை செய்யப்பட்ட மொட்டை மாடி

ஆனால், ரமேஷ் அடித்தவரைக் காட்டிக் கொடுக்க மறுத்துள்ளார். “அடிச்சவன் யாருன்னு சொல்லாட்டா, நீ உயிரோட இருக்க முடியாது” என அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால், மீண்டும் அவர்கள் இரவில் வீட்டிற்கு வந்து தகராறு செய்ய வந்தாலும் வருவார்கள் என நினைத்த ரமேஷ், முருகேசன்நகரில் உள்ள தனது நெருங்கிய நண்பரான டேவிட்டின் வீட்டிற்குச் சென்று மொட்டை மாடியில் இரவில் தூங்கியுள்ளார். இதை தெரிந்துகொண்ட ராஜபாண்டி, அவரின் நண்பர்களான முத்துப்பாண்டி, மூர்த்தி என்ற மீரான், பரத் விக்னேஷ்குமார் மற்றும் இளஞ்சிறார் ஆகியோர் 29-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு வந்து டேவிட் வீட்டின் மாடிக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ரமேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர்.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் கொலை நடைபெற்ற முருகேசன்நகரில் உள்ள டேவிட்டின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, ரமேஷை கொலை செய்த ராஜபாண்டி, அவரது நண்பர்களான முத்துப்பாண்டி, மூர்த்தி என்ற மீரான், பரத் விக்னேஷ்குமார் மற்றும் இளஞ்சிறார் ஆகியோரை கைது செய்தனர். அத்துடன், ரமேஷ் தங்கியிருக்கும் இடம் டேவிட் சொல்லாமல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் டேவிட்டிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர், ’வீட்டிற்குள் தூங்கினேன். மாடியில் படுத்திருந்த ரமேஷ் கொலை செய்யப்பட்டது காலையிலதான் தெரியும்’ என்றார். ஆனால், இரவில் ரமேஷூடன் மாடிக்குச் சென்றதும், கொலை செய்யப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக கீழே இறங்கி வீட்டின் வாசலுக்கு வந்து போன் செய்ததும், அந்த கும்பலுக்காக காத்திருந்ததும் அப்பகுதி சி.சி.டிவியில் பதிவாகி இருந்தது.

கைது செய்யப்பட்ட 6 பேர்

போலீஸார், தன் பாணியில் விசாரிக்க, ’ரமேஷ் இருக்கும் இடத்தை சொல்லாவிட்டால், என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள். அதனால் நான்தான் சொன்னேன்’ என ஒத்துக் கொண்டார்.

அந்த விசாரணையில் ரமேஷை கொலை செய்ய வருவதற்கு முன்னதாக, நள்ளிரவு 12.30 மணிக்கு முன்விரோதத்தால் சுரேஷ் என்பவரை கொலை செய்யத் திட்டமிட்டு, அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. இதில் வெட்டுக் காயங்களுடன் சுரேஷ் தப்பியோடினார். சுரேஷ், தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read: 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்ட தாய்!-பெற்ற குழந்தை கொலை வழக்கில் நடந்தது என்ன?

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய ராகுல் என்பவரின் மனைவியை கிண்டல் செய்தற்காகத்தான் சுரேஷை தன் நண்பர் ராஜபாண்டி உள்ளிட்ட சிலரின் உதவியால், அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ராகுல், பிரான்சிஸ், செல்வகுரு ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த 2 வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியான ராஜபாண்டி மீது கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஒரு அரிவாள், ஒரு கத்தி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களின் பின்னணியில் பெரிய காரணங்கள் எதுவுமில்லை என்றாலும், அனைவருமே கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கஞ்சா போதை மட்டுமே இக்குற்றங்களுக்குக் காரணமாகியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/gang-arrested-for-2-consecutive-offenses-in-thoothukudi-on-the-same-day-at-2-hours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக