Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

தேவேந்திர ஜஜாரியா | ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்தியாவின் 20 வருட ஆச்சர்யம்!

கால ஓட்டத்தில் கரைந்து அப்படியே கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போம். இப்போது 2004-ம் ஆண்டுக்கு வந்திருக்கிறோம். ஒலிம்பிக்ஸின் சொந்த ஊரான ஏதேன்ஸில் மீண்டும் ஒரு ஒலிம்பிக்ஸ். பிரமாண்டத்தின் உச்சமாக நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கியிருக்கிறது. 

இந்தியர் ஒருவர் ஈட்டி எறிதலில் கலக்குகிறார் என்கிற செய்தி காதை எட்டுகிறது. அடித்து பிடித்து ஈட்டி எறிதல் நடைபெறும் பக்கமாக கேலரியில் ஒரு இடத்தை பிடித்து அமர்கிறோம். தேவேந்திர ஜஜாரியா எனும் பெயர் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்படுகிறது. இடது கை அற்ற அந்த மனிதர் வலக்கையில் ஈட்டியை ஏந்தி தடதடவென ஓட ஆரம்பிக்கிறார். ஈட்டி பாய்கிறது. சில நொடிகளிலேயே முடிவு தெரிகிறது. ஜஜாரியாவின் முகத்தில் அப்படியொரு ஆராவாரம். காரணம், அவர் வீசிய ஈட்டி 62.15 மீட்டருக்கு பாய்ந்திருந்தது. அதுதான் உலக சாதனை. உலக சாதனைக்கு தங்கம் இல்லாவிட்டால் எப்படி? ஜஜாரியாவே தங்கம் வென்றார்.

ஜஜாரியா போடியத்தில் ஏறுகிறார். இந்திய தேசியக்கொடி உச்சத்தில் பறக்கிறது. ஒலிம்பிக் அரங்கில் அதிகம் கேட்டிராத இந்திய தேசிய கீதம் ஒலிக்க ஒரு நிமிடம் புல்லரித்து போய் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆர்ப்பரிப்பில் பூரித்துக் கொண்டிருந்த ஜஜாரியாவிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கிவிட வேண்டும் என மனம் தள்ளாடுகிறது. ஆனால், அந்த வெற்றிக்களிப்புமிக்க தருணத்தை அணு அணுவாக அனுபவித்துக் கொண்டுருக்கும் ஜஜாரியாவை தொந்தரவு செய்யவும் தோன்றவில்லை.

மீண்டும் கால ஓட்டத்தில் ஒரு நெடிய பயணம். இப்போதைய டெஸ்டினேஷன் ரியோ டி ஜெனிரோ. 2016 பாராலிம்பிக்ஸ் நடைபெற்று கொண்டிருக்கிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக சீக்கிரமாகவே வந்துவிட்டதால் ஆசுவாசமாக கேலரியில் அமர்ந்திருந்தோம். ஈட்டி எறிதல் போட்டிகள் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்படுகிறது. மைதானம் மொத்தத்தயும் ஒரு விசாலமான பார்வையில் கண்களுக்குள் அடக்கினோம். ஒரு மூலையில் இடது கையற்ற வீரர் ஒருவர் நிற்கிறார். தேவந்திர ஜஜாரியாவை போன்றே அந்த வீரரும் இருக்கிறார். கண்களை துடைத்துக் கொண்டு ஃபோகஸ் செய்து மீண்டும் பார்க்கிறோம். அது தேவேந்திர ஜஜாரியாவேதான்.

12 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஜஜாரியாவை ஒலிம்பிக்ஸ் மைதானத்தில் பார்க்கிறோம். ஆச்சர்யத்திலிருந்து விலகுவதற்குள்ளாகவே ஜஜாரியாவின் கைகள் ஈட்டி ஏந்தின. ஏதேன்ஸில் ஓடியதை போலவே தடதடவென ஓடி வருகிறார். ஏதேன்ஸில் வீசியதை போலவே தீர்க்கமாக ஈட்டியை வீசுகிறார். ஏதேன்ஸில் பாய்ந்ததை போலவே ரியோவிலும் ஜஜாரியா வீசிய ஈட்டி எந்த சிதறலும் இல்லாமல் பாய்கிறது. சில நொடிகள் காத்திருக்க முடிவு அறிவிக்கப்படுகிறது. முடிவு ஆச்சர்யத்தின் உச்சம். ஏதேன்ஸை போன்றே இங்கும் ஒரு உலக சாதனை. இங்கும் ஒரு தங்கப்பதக்கம் ஜஜாரியாவை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கிறது. ஆச்சர்யம், புல்லரிப்பு, ஆனந்த கண்ணீர் அத்தனையும் ஒரு சேர பீறிட்டு வருகிறது.

ஏதேன்ஸிலிருந்து ரியோவிற்கு நாம் வேண்டுமானால் சொடக்கு போடும் நேரத்தில் கால ஓட்டத்தில் பயணித்திருக்கலாம். ஆனால், ஜஜாரியாவுக்கு அப்படியில்லை. இடைப்பட்ட 12 வருடங்களின் ஒவ்வொரு நொடியும் காத்திருப்பின் ரணங்களை முழுமையாக உணர்த்தியவை.

2004 ஏதேன்ஸ் பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றபோது ஜஜாரியாவுக்கு வயது 23. தொடர்ந்து பாராலிம்பிக்கில் சாதிப்பார் என நினைக்கும் போது ஒலிம்பிக் அமைப்பின் ஒரு முடிவு பேரிடியாக விழுகிறது. F46 பிரிவு ஈட்டி எறிதல் போட்டிகள் பாராலிம்பிக்கிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. 12 ஆண்டுகள் கழித்து ரியோ ஒலிம்பிக்கிலேயே மீண்டும் F46 ஈட்டி எறிதல் போட்டிகள் அறிமுகமாகின. 'வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு...' என தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் போல கம்பேக் கொடுத்த ஜஜாரியா இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.

40 வயதாகும் தேவேந்திர ஜஜாரியா ராஜஸ்தானை சேர்ந்தவர். எளிமையான விவசாய குடும்ப பின்னணியை கொண்டவர். சிறு வயதில் எல்லா குழந்தைகளை போலவுமே இயல்பான உடலமைப்புடனேயே காணப்பட்டார். ஒரு முறை நண்பர்களுடன் விளையாடும் போது மரத்தில் ஏறியிருக்கிறார். அப்போது தவறுதலாக அந்த மரத்தின் வழியே சென்ற மின்கம்பியில் கை வைத்துவிட துடிதுடித்து கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மின் கம்பியில் பட்டிருந்த இடது கை மிகப்பெரிய பாதிப்பை அடைந்திருந்ததால் முழங்கைக்கு கீழே மொத்தமாக அகற்றப்படுகிறது. இத்தனை நாளும் இயல்பான சிறுவனாக ஓடி ஆடிக்கொண்டிருந்தவரை அய்யோ பாவமென ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்.

''ஓடும்போது என்னால ரன்னிங்கை ஃபீல் பண்ண முடியல. நான் தோத்தாலும் பரவாயில்லைனு எல்லாரும் சொல்றாங்க'' என 'தில் பெச்சேரா' படத்தில் கால் அகற்றப்பட்ட சுஷாந்த் சிங் மனம் வெதும்பி ஒரு வசனம் பேசியிருப்பார்.

ஆம், உடல் பாதிப்பு கொடுக்கும் வலியை விட பரிதாபம், கருணை என்ற பெயரில் ஒதுக்கப்படுவது பெரும் வலியை கொடுக்கும். அது ஜஜாரியாவுக்கும் அரங்கேறியது. சிலர் அக்கறையோடு ஒதுக்கினார்கள். சிலர் பரிதாபமாக ஒதுக்கினார்கள். சிலர் கேளியாக ஒதுக்கினார்கள். எப்படியோ எல்லா இடத்திலும் ஒதுக்கினார்கள். பெற்றோரிடம் சொல்லி கதறி அழுகிறார். அப்போது அவருக்கு சரியாக வழிகாட்டியது அவருடைய அம்மாவே.

தேவேந்திர ஜஜாரியா

என ஊக்கம் கொடுக்கிறார். அப்பா ஆதரவுக்கரம் நீட்டுகிறார். தாயின் ஊக்கமும் தந்தையின் உதவியும் வாழ்வின் நேர்மறை பக்கங்களை ஜஜாரியாவிற்கு திறந்தது. பத்தாம் வகுப்பிலிருந்து ஈட்டி எறிதலில் பயிற்சிகளை தொடங்குகிறார். முன்னாள் தடகள வீரரான ஆர்.டி.சிங் ஜஜாரியாவுக்கு முழுமையாக ஊக்கமளித்து செதுக்குகிறார். ''சாம்பியனா வா'' என அம்மா சொன்ன ஒற்றை வார்த்தை மட்டுமே அவருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸிற்கு தகுதிப்பெற்றார். வழியனுப்ப கூட யாரும் வரவில்லை. குடும்பத்தினர் மட்டும் வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தனர். தேவேந்திர ஜஜாரியாவாக ஏதேன்ஸிற்கு பறந்தவர் தேசத்தின் மகனாக நாடு திரும்பினார்.

2008-ல் அபினவ் பிந்த்ரா வென்ற தங்கமே தனிநபர் பிரிவில் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் தங்கம் என வரலாறு கூறும். ஆனால், பாராலிம்பிக்ஸையும் சேர்த்து பார்த்தால் அபினவ் பிந்த்ராவுக்கு இந்த வரிசையில் மூன்றாவது இடமே கிடைக்கும். 1972 பாராலிம்பிக்ஸில் முரளிகாந்த் பெட்கர் தங்கம் வென்றிருந்தார். அதன்பிறகு, தேவேந்திர ஜஜாரியாவே இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார். இவர்களுக்கு பிறகுதான் அபினவ் பிந்த்ரா.

தேவேந்திர ஜஜாரியா
2004 ஒலிம்பிக்கில் 62.15 மீட்டருக்கு ஈட்டியை வீசி உலக சாதனை வைத்திருந்தார் ஜஜாரியா. 2016 ஒலிம்பிக்கில் F46 ஈட்டி எறிதலில் ஜஜாரியா 63.97 மீட்டருக்கு வீசி தன்னுடைய உலக சாதனையைத்தானே முறியடித்து தங்கம் வென்றிருந்தார்.

இடையில் ஒலிம்பிக் இல்லைதான். ஆனாலும் வேறு பல தொடர்கள் நடந்திருக்கவே செய்தது. அப்படியிருந்தும் யாராலும் ஜஜாரியாவின் ரெக்கார்டை உடைக்க முடியவில்லை.

பேரிடர் காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார், தந்தை இழந்திருந்தார். போதிய பயிற்சிகளில் ஈடு செய்ய முடியாமல் தடுமாறியிருந்தார். ஆனாலும், அவருடைய பெர்ஃபார்மென்ஸில் எந்த குறையுமே இல்லை.

டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனைப்படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 64.35மீட்டர் தூரம் ஈட்டியை வீசியபோதும், இலங்கை வீரரான ஹெராத் முடியன்சலா ஆச்சர்யம் அளித்தார். இலங்கை வீரர் ஹெராத் 67.79மீட்டர் தூரம் வீசி புதிய சாதனைப்படைத்ததோடு தங்கப்பதக்கமும் வென்றார். இதனால் ஜஜாரியாவுக்கு இந்தமுறை வெள்ளியே கிடைத்தது. இதேப்போட்டியில் இந்தியாவின் மற்றொரு வீரரான சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதன்மூலம் டோக்கியோ பாரலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை 7 பதக்கங்களை வென்றிருக்கிறது.



source https://sports.vikatan.com/olympics/devendra-jhajharia-create-history-by-win-a-hat-trick-medal-on-paralympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக