இந்த விருது மேடையில் UEFA President Award என்ற சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. 8 பேர் அந்த மேடையில் ஏறி விருதை வாங்கினார். ஆனால், இந்த விருதை வாங்கியது வீரர்களோ, பயிற்சியாளர்களோ அல்ல. மருத்துவர்கள். ஆம், கால்பந்து அரங்கில் மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். ஏன்?
இதற்கான காரணம் தெரிந்துகொள்ள இரண்டு மாதம் முன்செல்லவேண்டும். 12, ஜூன்... யூரோ 2020 கால்பந்து தொடர். டென்மார்க், ஃபின்லாந்து அணிகள் மோதிய போட்டி, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்றது. எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருக்க, ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது. அவே த்ரோவின்போது பந்தை வாங்கச் சென்ற டென்மார்க் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென கீழே விழுந்தார். யாரும் மோதாத நிலையில், அவர் கீழே விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அசைவற்றுக் கிடக்க, மருத்துவர்கள் விரைந்து களத்துதுக்குள் நுழைந்தனர். எரிக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அறியப்பட்டது.
மொத்த கால்பந்து உலகமும் உறைந்து போயிருந்தது. ஆட்டத்தைப் பார்க்கவந்த எரிக்சனின் மனைவி சப்ரினா களத்துக்குள் வந்து கதறி அழுகிறார். மொத்த கால்பந்து உலகமும் கண்ணீர் சிந்தத் தொடங்கியிருந்தது. நீண்ட நேரம் மருத்துவர்கள் எரிக்சனுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டே இருந்தார்கள். டென்மார்க் வீரர்கள் எரிக்சனைச் சுற்றி வட்டம் அமைத்து பாதுகாத்தனர். என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ரசிகர்கள் பதறிப்போயிருந்தனர்.
எரிக்சனுக்கு களத்திலேயே CPR, defibrillation கொடுத்து கண்விழிக்கவைத்துள்ளனர் களத்தில் இருந்த மருத்துவர்கள். நீண்ட நேரத்துக்குப் பிறகு ஸ்ட்ரெச்சர் மூலம் களத்திலிருந்து எரிக்சனை அழைத்துச் சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, மருத்துவமனையில் எரிக்சன் கண்விழித்துவிட்டதாகவும், உடல்நிலை ஓரளவு சீராகியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. சில மணி நேரம் ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் பதறவைத்தது அந்தச் சம்பவம்.
மிகவும் பரபரப்பான ஒரு சூழ்நிலையில் மிகவும் துரிதமாகச் செயல்பட்டவர்களை எல்லோரும் பாராட்டத் தொடங்கினார்கள். உடனடியாக மருத்துவர்களை களத்துக்குள் அழைத்த நடுவர் ஆன்டனி டெய்லர், சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், அரண் அமைத்த டென்மார்க் அணி என அனைவருக்கும் கால்பந்து ரசிகர்கள் மரியாதை செலுத்தினார்கள். அதிலும் குறிப்பாக, அந்த மருத்துவர்களைக் கொண்டாடினார்கள். அவர்கள் அன்று துரிதமாகச் செயல்பட்டதால்தான் ஒரு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதற்காகத்தான் UEFA அந்த மாபெரும் அரங்கில் அவர்களுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறது.
இவர்கள்தான் அந்த மரியாதைக்குறிய விருதுகளை வென்றவர்கள்.
On-site medical team
Mogens Kreutzfeldt (chief medical officer)
Frederik Flensted (stadium medical manager)
Anders Boesen (pitchside emergency doctor)
Peder Ersgaard (paramedic)
UEFA Venue Medical Officers
Jens Kleinefeld
Valentin Velikov
Danish national medical team
Morten Skjoldager (physio accompanying the team doctor)
Morten Boesen (team doctor)
Simon Kjær (Denmark national team captain)
களத்தில் இருந்த மருத்துவர்கள் நால்வர், UEFA வென்யூவில் இருந்த மருத்துவ அலுவலர்கள் இருவர்கள், டென்மார்க் அணியின் டீம் டாக்டர், பிசியோ உள்ளிட்டோர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். அதோடு, டென்மார்க் கேப்டன் சிமோன் கியாரும் இந்த விருது பெற்றார். அந்தத் தருணத்தில் இவரது செயல்பாடுகளும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
ஃபின்லாந்து பாக்ஸுக்கு அருகே எரிக்சன் விழ, டென்மார்க் பாக்சிலிருந்து ஓடோடி வந்தார் கியார். அப்படியே குப்புற விழுந்தவரை, சரியான முறையில் படுக்கவைத்து, அவரது சுவாசக்குழாயை நா தடுக்காமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்தார். உடனடியாக மருத்துவர்களை உள்ளே வரச் சொல்லி சைகை செய்தார். அதுமட்டுமல்லாமல், களத்துக்குள் வந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த எரிக்சனின் மனைவி சப்ரினாவுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார். மருத்துவர்கள் சிகிச்சை ஆரம்பித்தபோது, தன் அணி வீரர்களை ஒன்றிணைத்து எரிக்சனைப் பாதுகாத்து வட்டம் அமைத்தார். ஒரு கேப்டனாக, ஒரு தலைவனாக, என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தார் கியார். அவரோடு சேர்த்து மொத்தம் 9 பேர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.
கியார் இத்தாலியில் விளையாடிக்கொண்டிருப்பதால், அவரைத் தவிர்த்து மற்ற எட்டு பேரும் நேரில் சென்று விருதை வாங்கினார். ஒவ்வொருவருக்கும் அந்த விருதைக் கொடுத்த UEFA தலைவர் அலெக்சாண்டர் கேஃபரின், அவர்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை. தன் நன்றியை உரக்கத் தெரிவித்தார். அவர்கள் விருது பெற்றதும், அவையில் இருந்த ஒவ்வொரு அணியின் பிரதிநிதிகளுமே எழுந்து நின்று கால்பந்து உலகின் நன்றியைத் தெரிவித்தனர்.
"நாங்கள் எங்கள் கடமையைச் செய்யவேண்டும் என்ற நோக்கில் களத்துக்குள் அதிவேகமாக நுழைந்தோம். நாங்கள் என்ன செய்யவேண்டுமோ, என்ன கற்பிக்கப்பட்டோமோ, எதில் கற்றுத்தேர்ந்தோமோ அதைத்தான் செய்தோம். எல்லோருக்கும் எங்களின் பணி என்ன என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. அந்தத் தருணத்தில் நாங்கள் எமோஷனல் ஆகவில்லை. ஆனால், களத்திலிருந்து வெளியேறியதும் எல்லோரையும் போல் எமோஷனாகிவிட்டோம்" என்றார் கோபன்ஹேகனின் யூரோ தலைமை மருத்துவ அலுவலர் மோகன்ஸ் குரூட்ஸ்ஃபெல்ட்.
டென்மார்க் கேப்டன் கியார் கூறுகையில், "இது எங்கள் வாழ்வில் எப்போதும் நிலைத்திருக்கும். எனக்கு எரிக்சனை பல ஆண்டுகளாகத் தெரியும். அவருக்கு ஒரு அருமையான குடும்பம் இருக்கிறது. நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் சந்தோஷமாகவும் அவர் குடும்பம் நன்றாகவும் இருக்கும் வரை எனக்கு மகிழ்ச்சி" என்று உருக்கமாகப் பேசினார்.
இப்போது எரிக்சன் நல்லபடியாக குணமடைந்து வருகிறார். அதற்குக் காரணம் இவர்கள்தான். அன்று இந்த மருத்துவர்கள் களத்திற்குள் நுழைந்தபோது பதற்றப்பட்ட கால்பந்து உலகம், நேற்று அவர்கள் மேடை ஏறியபோது நெகிழ்ந்து போயிருக்கிறது.
source https://sports.vikatan.com/football/uefa-honoured-medical-staff-who-treated-christian-eriksen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக