Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

CUCET 2021: மத்திய பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு - ஒரு முழுமையான வழிகாட்டல்!

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ், இந்தியாவில் அசாம், ஆந்திரப்பிரதேசம், குஜராத், அரியானா, ஜம்மு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தெற்குப் பீகார் மற்றும் தமிழ்நாடு என்று 12 மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு தலைப்புகளிலான இளநிலை, முதுநிலை, ஒருங்கிணைந்த முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில் 2021-2022-ம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (Central Universities Common Entrance Test – CUCET 2021) அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

படிப்புகள்

இந்தியாவிலிருக்கும் 12 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகள் (UG), முதுநிலைப் பட்டப்படிப்புகள் (PG), ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் (Integrated PG), ஒருங்கிணைந்த கல்வியியல் பட்டப்படிப்பு (Integrated B.Ed), ஒருங்கிணைந்த முதுநிலைப்பட்டம் மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு (Integrated PG with B.Ed), ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு (Integrated LLB), பட்டயப்படிப்பு (Diploma), முதுநிலைப் பட்டயப்படிப்பு (P.G.Diploma) என்று பல்வேறு பட்டப்படிப்புகளாக மொத்தம் 371 படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

படிப்புகள்

இப்படிப்புகளில் இளநிலைத் தொழிற்படிப்பு (B.Voc), இளநிலைத் தொழில்நுட்பம் (B.Tech), இளநிலைச் சட்டம் (LLB) போன்ற படிப்புகளும், முதுநிலைத் தொழில்நுட்பம் (M.Tech), முதுநிலைச் சட்டம் (LLM), முதுநிலை உடற்கல்வி மற்றும் விளையாட்டுகள் (M.P.Ed.,), முதுநிலை மருந்தியல் (M.Pharm), முதுநிலை நூலகத் தகவல் மற்றும் அறிவியல் (M.Lib.I.Sci) போன்ற சிறப்புப் படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

ஊடகங்களுக்கான எழுத்துகள் மற்றும் எண்ணிமத் தகவல் தொடர்புகள் (Media Writing and Digital Communications), பிராமி மற்றும் சர்தா இந்திய எழுத்துருக்கள் (Indian Scripts – Brahmi and Sharda), இந்திய மருளியல் எண்ணங்கள் (Indian Mystical thoughts), வெளிநாட்டு இந்தியருக்கான சட்டங்கள் (NRI Laws) உள்ளிட்ட பல்வேறு முதுநிலைப் பட்டயப் படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகப் படிப்புகள்

திருவாரூரில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நான்காண்டு கால அளவிலான இளநிலை இசைப்படிப்பு (BPA (Music)) – 17 இடங்கள், மூன்றாண்டு கால அளவிலான இளநிலை அறிவியல் (நெசவுத்தொழில்) (B.Sc., Textiles) – 100 இடங்கள், நான்காண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த கணிதம் பாடத்திற்கான கல்வியியல் பட்டப்படிப்பு (B.Sc., B.Ed.,) – 55 இடங்கள் என்று இருக்கின்றன.

ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகளாக (Integrated M.Sc) வேதியியல் (Chemistry) – 33 இடங்கள், வாழ்வியல் அறிவியல் (Life Sciences) – 33 இடங்கள், கணிதம் (Mathematics) – 33 இடங்கள், இயற்பியல் (Physics) – 33 இடங்கள், பொருளாதாரம் (Economics) – 33 இடங்கள் என்றிருக்கின்றன. வேதியியல் ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் (Chemical Laboratory Technician) எனும் முதுநிலைப் பட்டயப்படிப்பில் 9 இடங்கள் இருக்கின்றன.

கணிதம் (Mathematics)

முதுநிலைப் பட்டப்படிப்புகளில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (M.Lib.I.Sc) – 17 இடங்கள், வணிகவியல் (M.Com) – 44 இடங்கள், முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகளாக (M.Sc.) செயல்பாட்டு உளவியல் (Applied Psychology) – 22 இடங்கள், வேதியியல் – 18 இடங்கள், கணினி அறிவியல் – 22 இடங்கள், நோய்த்தொற்று அறிவியல் மற்றும் பொதுநலம் (Epidemiology & Public Health) – 17 இடங்கள், புவியியல் (Geography) – 33 இடங்கள், நிலவியல் (Geology) – 20 இடங்கள், தோட்டக்கலை (Horticulture) – 20 இடங்கள், நுண்ணுயிரியல் (Microbiology) – 33 இடங்கள், புள்ளியியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் ((Statistics & Applied Mathematics)) – 20 இடங்கள் இருக்கின்றன. முதுநிலைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பாக (M.Tech) பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (Materials Science & Technology) – 33 இடங்கள் இருக்கின்றன.

முதுநிலை கலைப்பட்டப்படிப்புகளாக (M.A) செம்மொழித் தமிழ்ப் படிப்புகள் (Classical Tamil Studies) – 22 இடங்கள், பொருளாதாரம் – 22 இடங்கள், ஆங்கிலம் - 22 இடங்கள், இந்தி – 22 இடங்கள், வரலாறு – 22 இடங்கள், மக்கள் தகவல் தொடர்பியல் – 22 இடங்கள் இருக்கின்றன.

முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புகளாக (MBA) வணிக மேலாண்மை – 44 இடங்கள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை – 20 இடங்கள் இருக்கின்றன. இதே போன்று, முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பில் ஆடை மேலாண்மை ((Apparel Management), சிறுவணிக மேலாண்மை ((Retail Management) மற்றும் நெசவுத்தொழில் மேலாண்மை (Textile Management) என்று 150 இடங்கள் இருக்கின்றன. இவைகளைத் தவிர்த்து, முதுநிலை சமூகவியல் பணிகள் பட்டப்படிப்பு (MSW) – 22 இடங்கள், பெருநிறுவன நிருவாகம் மற்றும் தொழிற்துறைக்கான நீதித்துறை எனும் தலைப்பிலான முதுநிலை சட்டப்படிப்பு (LLM) – 20 இடங்கள் என்று இருக்கின்றன.

இளநிலை அறிவியல் (நெசவுத்தொழில்) பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புகளில் ஆடை மேலாண்மை ((Apparel Management), சிறுவணிக மேலாண்மை ((Retail Management) மற்றும் நெசவுத்தொழில் மேலாண்மை (Textile Management) படிப்புகள் கோயம்புத்தூரிலுள்ள சர்தார் வல்லபாய் நெசவுத்தொழில் மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்தில் (Sardar Vallabhbhai Patel International School of Textile Management - SVPISTM) நடத்தப்பெறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நுழைவுத் தேர்வு | CUCET 2021

நுழைவுத் தேர்வுக்கான தகுதிகள்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் இளநிலைச் சட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் பொதுப்பிரிவினர் 50% மதிப்பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 45% மதிப்பெண்களுக்குக் குறைவின்றி பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்புகள், மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகள் போன்றவைகளுக்குத் தொடர்புடைய பாடங்களின் இளநிலைப் பட்டத்தில் பொதுப்பிரிவினர் 55% மதிப்பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 50% மதிப்பெண்களுக்குக் குறைவின்றிப் பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு மத்திய பல்கலைக்கழகத்திலும் இடம் பெற்றிருக்கும் படிப்புகள் மற்றும் அதற்கான கல்வித்தகுதிகள் போன்ற தகவல்கள், https://cucet.nta.nic.in எனும் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும் தகவல் குறிப்பேட்டில் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மத்திய பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்திற்குச் சென்றும் பார்வையிடலாம்.

விண்ணப்பம்

தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) நடத்தும் இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cucet.nta.nic.in எனும் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணைய வழியிலான விண்ணப்பமானது, விண்ணப்பப் பதிவு, விண்ணப்பம் நிரப்புதல், படங்கள் மற்றும் ஆவணங்கள் பதிவேற்றுதல், இணைய வழியில் பணம் செலுத்துதல் என்று நான்கு படிநிலைகளைக் கொண்டிருக்கிறது.

பொது மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்கள் ரூ 800/-, எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ 350/- என்று விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியில் (Online Payment) மட்டும் செலுத்த வேண்டும். மேற்காணும் இணையதளத்தில் 1-9-2021 இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணத்தை 2-9-2021 இரவு 11.50 மணி வரை செலுத்த முடியும்.

விண்ணப்பம் | Application Form

தேர்வு நாள்

இத்தேர்வுகளுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, நாகர்கோவில், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் எனும் ஒன்பது இடங்கள் உட்பட இந்தியா முழுவதும் 152 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பப் படிவத்தில் நான்கு தேர்வு மையங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். அதிலிருந்து தேர்வு எழுதுவதற்கான ஒரு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த நுழைவுத்தேர்வுகள் 15-9-2021, 16-9-2021, 23-9-2021 மற்றும் 24-9-2021 ஆகிய நான்கு நாள்களில் நடைபெற இருக்கின்றன. விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்கள், நுழைவுத்தேர்வு நாளுக்கு முன்பாக, மேற்காணும் இணையதளத்திலிருந்து அனுமதி அட்டையினைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அனுமதி அட்டையில் தேர்வு மையம், தேர்வு நாள், நேரம் போன்ற அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

Also Read: தமிழ்நாடு அரசின் இளங்கலை – காட்சிக்கலைப் பட்டப்படிப்புகள்... கட்டண விபரமும் விண்ணப்ப விதிமுறைகளும்!

கணினி வழித் தேர்வு

கணினி வழித் தேர்வாக (Computer Based Test) நடத்தப் பெறும் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்குக்கான நுழைவுத்தேர்வானது கொள்குறி வினாக்கள் (Multiple Choice Questions) முறையினை அடிப்படையாகக் கொண்டது. UI-QP-01 எனும் பிரிவிற்கு பகுதி அ (Part-A) - ஆங்கிலம், பொதுஅறிவு, எண் திறன் (25 கேள்விகள்), பகுதி ஆ (Part-B) – இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் என்று நான்கு பாடங்களில், ஒவ்வொரு பாடத்திற்கும் 25 கேள்விகள் வீதம் 100 கேள்விகள் இருக்கும். UI-QP-02 எனும் பிரிவிற்கு எண் திறன் / தரவு விளக்கம், பகுப்பாய்வுத்திறன், பகுத்தறிதல், பொதுத்திறன் மற்றும் பொது அறிவு (Numerical Aptitude / Data Interpretation, Analytical Skills, Reasoning, General Aptitude & General Knowledge) தொடர்புடைய 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் கணினி வழித் தேர்வாகவே (Computer Based Test) நடத்தப் பெறும் இந்த நுழைவுத்தேர்வும் கொள்குறி வினாக்கள் (Multiple Choice Questions) முறையினை அடிப்படையாகக் கொண்டது. PG-QP- 01 to 37, 39, and 41 –to- 58 ஆகிய பிரிவிற்கு பகுதி அ (Part-A) - ஆங்கிலம், பொது அறிவு, எண் திறன் (25 கேள்விகள்), பகுதி ஆ (Part-B) – தொடர்புடைய பாடங்களில் 75 கேள்விகள் என்று 100 கேள்விகள் இருக்கும்.

ஆன்லைன் தேர்வு | Online Exam

PG-QP-38 பிரிவிற்கு ஆங்கிலம்/வாய்மொழித்திறன், கணிதம்/அளவுத்திறன், தரவு விளக்கம் மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிதல் (English/Verbal Ability, Maths / Quantitative Ability, Data Interpretation and Logical Reasoning) என்று 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். PG-QP-40 பிரிவிற்கு ஆங்கிலம், பொது அறிவு, கணினி அடிப்படைகள், பொதுத்திறன் மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிதல் (English, General Knowledge, Computer Basics, General Aptitude, and Logical Reasoning) என்று 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

இரண்டு மணி நேர கால அளவிலான இந்தக் கணினி வழித் தேர்வுக்குரிய கேள்வித்தாள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வு எழுதத் தேர்வு மையங்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.

Also Read: CAT 2021: மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு... விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு முடிவுகள்

நுழைவுத்தேர்வு நடைபெற்று முடிந்த பின்பு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நுழைவுத் தேர்வுக்கான விடைகள் மேற்காணும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த விடைகள் குறித்த ஆட்சேபணைகள் எதுவும் இருந்தால், ஆட்சேபணைக் கட்டணமாக ரூ.200/- இணைய வழியில் செலுத்தி முறையீடு செய்யலாம். ஆட்சேபணைகளுக்கு, துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று இறுதியான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பிறகு, நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த நுழைவுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டே மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

Helpline

கூடுதல் தகவல்கள்

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு 011- 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு அசாம் - 9476897510, 9401847943 ஆந்திரப்பிரதேசம் - 9640884806, 7598413970, குஜராத் – 079 - 23977446, அரியானா – 9212884894, ஜம்மு - 8082197957, 9796665505, 8178118948, ஜார்கண்ட் – 7070630510, கர்நாடகா – 9972191661, 9242355484, கேரளா - 0467 - 2309467, 0467 – 2309460, பஞ்சாப் - 9464269330, இராஜஸ்தான் – 7014588311, தெற்கு பீகார் - 0631-2229514, 2229518, தமிழ்நாடு - 04366 - 277337 எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் அலைபேசி / தொலைபேசி எண்களில் அலுவலக நாள்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

cucet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.


source https://www.vikatan.com/news/education/complete-guidance-for-applying-to-cucet-2021-and-joining-the-central-universities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக