Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

மனப்பாடமாக 1,330 குறள்; 30 அடியில் திருவள்ளுவர் ஓவியம்; 12 வயது மாணவி சாதனை!

நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் சிவராம் கலைக்கூடம் சார்பாக அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 7-ம் வகுப்பு மாணவி லக்‌ஷணா திருவள்ளுவர் உருவப் படத்தை வரைந்து சாதனை படைத்தார். 13 அடி அகலமும் 30 உயரமும் கொண்டதாக அவர் வரைந்த ஓவியம், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஓவியம் வரைவது பற்றிய அறிவிப்பு

Also Read: தினம் ஒரு திருக்குறள், தினம் ஓர் ஓவியம்... இன்ஸ்டாகிராமில் இயலின் இனிய முயற்சி! #SheInspires

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்‌ஷணா, அங்குள்ள ஸ்ரீநிகேதன் பாடசாலையில் ஏழாம் வகுப்புப் படித்து வருகிறார். விடுமுறைக்கு பாளையங்கோட்டையில் உள்ள தன் பாட்டி ராமலட்சுமி காளியப்பன் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாட்டி வீட்டிலேயே தங்கிவிட்டார்.

ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டதுடன், பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன. அதனால் மாணவி லக்‌ஷணா, பாட்டி வீட்டில் தங்கியிருந்து ஆன்லைன் வகுப்புகளில் படித்துள்ளார். அப்போது நெல்லையில் உள்ள சிவராம் கலைக்கூடத்தில் சேர்ந்து ஓவியம் வரைவதற்குப் பயிற்சி எடுத்துள்ளார்.

ஓவியம் வரையும் மாணவி லக்‌ஷணா

ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்டதும் தன் பெற்றோர் செந்தில்குமார், சாந்தியுடன் கன்னியாகுமரி கடற்கரைக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள திருவள்ளுவரின் சிலையும், அதன் பிரமாண்டமும் அவரை ஈர்த்துள்ளது. அதனால் அது போல ஓர் ஓவியத்தை வரைய வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்.

சிறுமி லக்‌ஷணாவின் தாய் சாந்தி, ஓய்வு நேரங்களில் அவருக்குத் திருக்குறள் கற்றுக் கொடுத்திருக்கிறார். தினமும் சில திருக்குறள்களை அவரை மனப்பாடம் செய்ய வைத்ததால் சில நாள்களிலேயே 1,330 திருக்குறளையும் மனப்பாடமாகச் சொல்லும் அளவுக்குக் கற்றுக் கொண்டிருக்கிறார். அதனால் திருவள்ளுவர் படத்தை வரையும்போது திருக்குறளையும் சொல்லிக் கொண்டே வரைய வேண்டும் எனப் பயிற்சி எடுத்துள்ளார்.

30 அடி உயர திருவள்ளுவர் ஓவியம்

Also Read: `தலைகீழாவும் திருக்குறள் சொல்வேன்!' - 31 வழிகளில் குறள் சொல்லி அசத்தும் `திருக்குறள்’ எல்லப்பன்

ஓவிய ஆசிரியரான கணேசன், திருவள்ளுவர் ஓவியம் வரைவதற்கு சிறுமிக்குப் சிறப்புப் பயிற்சி அளித்துள்ளார். அதனால் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 13 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்ட திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தார் லக்‌ஷணா. ஓவியம் வரையும்போதே, 1,330 திருக்குறளையும் அதன் வரிசைப்படி ஒவ்வோர் அதிகாரத்தின் பெயரையும் கூறி திருக்குறளையும் சொல்லியபடி வரைந்து முடித்தார்.

சிறுமி லக்‌ஷணாவின் இந்தச் சாதனையை `இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் `கலாம் புக் ஆஃப் அவார்ட்ஸ்' ஆகியவற்றில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்தார்.

ஓவியத்தை வரைந்த சிறுமி லக்‌ஷணா கூறுகையில், ``கன்னியாகுமரிக்கு அம்மாவுடன் சென்றபோது அங்கிருந்த திருவள்ளுவரின் சிலையைப் பார்த்து வியந்தேன்.

திருவள்ளுவர் ஓவியம்

குமரிக் கடலோரத்தில் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை ஓவியமாக வரைய வேண்டும் என்பது அப்போதே என் மனதில் தோன்றியது. இது பற்றி ஓவிய ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் சொன்னபோது அவர்களும் ஒத்துழைப்புக் கொடுத்ததால் என்னால் வரைந்து முடிக்க முடிந்தது. நான் வரைந்துள்ள திருவள்ளுவர் ஓவியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/thiruvallur-lakshana-drew-30-ft-thiruvalluvar-portrait-and-recites-1330-thirukkural

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக