சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்த ஆப்கானிஸ்தான், அண்மையில் படைகளை திரும்ப பெறும் அமெரிக்காவின் முடிவால், தாலிபன்களின் கைக்கு சென்றிருக்கிறது. தாலிபன்களின் கடந்தகால ஆட்சியில் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை எண்ணி அஞ்சி நடுங்கி, அங்கிருந்து வெளியேறி அகதிகளாய் மற்ற நாடுகளில் தஞ்சம் பிழைக்கத் தீவிரம் காட்டி வருகின்றனர் ஆப்கன் மக்கள். முன்னதாக, ஆப்கன் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றுவதற்கு முன்பாகவே அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் பிற அரசு உயரதிகாரிகள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு அந்நாட்டிலிருந்து வெளியேறி விட்டனர்.
அந்த வகையில் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஜெர்மனியில் உணவு டெலிவரி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆப்கனின் முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சையத் அகமத் என்பவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால், சையத் அகமத் தாலிபன்களுக்கு அஞ்சி ராஜினாமா செய்து விட்டு ஆப்கனிலிருந்து வெளியேறவில்லை. மாறாக, 2018-ல் ஆப்கன் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தனியாருக்கு ஆதரவாக இருப்பதாகக் குற்றம் சாட்டி விட்டு, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெர்மனிக்குக் குடி பெயர்ந்தவர் சையத் அகமத்.
50 வயதான சையத் அகமத் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். டெலிகாம் துறை நிபுணரான சையத் 2016 முதல் 2018 வரை ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். 2018-ல் ஆப்கன் அரசின் செயல்பாடுகள் பிடிக்காமல் பதவி விலகினார். பின்னர், ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு உள்நாட்டுப் போர் தீவிரமடையத் தொடங்கியதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேறி ஜெர்மனியில் குடியேறினார்.
Also Read: வீடு வீடாகப் பெண்களைத் தேடும் தாலிபன்கள்... ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?!
டெலிகாம் துறையில் பல ஆண்டுக் கால அனுபவம் கொண்ட சையத் அகமத், ஆப்கானிஸ்தானிலிருந்து ஜெர்மனியின் லீப்ஜிக் நகருக்குச் சென்ற பின்னர், தன் துறை சார்ந்த வேலைகளுக்கு முயற்சி செய்திருக்கிறார். ஆனால், கொரோனா நோய்த்தொற்றின் கோரத் தாண்டவத்தால் ஏறி இறங்கிய இடங்களிலெல்லாம் நெருக்கடிக் கால நேரத்தைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்ட சையத் அகமத், கையில் கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கிறார்.
அதன்படி, ஆப்கன் முன்னாள் அமைச்சரான சையத் அகமத் தற்போது லீப்ஜிக் நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் உணவு டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சையத் அகமத் லீப்ஜிக் நகரின் வீதிகளில் ஆரஞ்ச் நிற உடையை அணிந்து கொண்டு உணவு பண்டங்களுடன் விறுவிறுப்பாகச் சைக்கிளில் பறந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதையடுத்து, ஜெர்மனியின் பிரபல லீப்ஸிகர் வோல்க்ஸீயுடங் செய்தி நிறுவனம் சையத்தை தேடிக் கண்டு பிடித்து அவர் குறித்து தங்கள் பத்திரிகையில், ``உணவு டெலிவரி பணியில் ஆப்கன் முன்னாள் அமைச்சர்!!'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
அதற்குப் பின்னர், சையத் 'டாக் ஆஃப் ஜெர்மனியாக' மாறினார். இது குறித்து சையத் அகமத் கூறுகையில், "முன்னாள் அமைச்சர் என்பதைத் தாண்டி எனக்கு டெலிகாம் துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது. லண்டன் உள்ளிட்ட பெரு நகரங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், ஜெர்மனியில் என் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இங்கு வந்தேன்.
ஆனால், கொரோனா காரணமாக எங்கும் வேலை கிடைக்கவில்லை. இருப்பினும், நான் தேடும் வேலை கிடைக்கும் வரையில், கிடைக்கும் வேலைகளைச் செய்யலாம் என்று யோசித்தேன். தற்போது, பிரபல உணவு விநியோக நிறுவனமான லைஃபெராண்டோவில் பணியாற்றி வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தில் சிறு பகுதியைச் சேர்த்து வைத்து, அதில் ஜெர்மன் மொழி பயின்று வருகிறேன். டெலிகாம் துறையில் நல்ல வேலை கிடைக்கும் வரை இந்த நல்ல வேலையை நிச்சயம் தொடர்வேன்.
Also Read: `இருக்கிறாரா; இல்லையா?' - மர்மங்களுக்கு மத்தியில் உச்சபட்ச தாலிபன் தலைவர் - யார் இந்த ஹிபத்துல்லா?!
வேலை செய்யாமல் இருப்பது தான் அவமானமே தவிர, எந்த வேலையும் அவமானமில்லை என்பதால் இந்த பணியை மன நிறைவுடன் செய்து வருகிறேன். நான் தற்போது எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். ஆப்கனை கைப்பற்றியிருக்கும் தாலிபன்கள் கடந்தகால தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிற்க வேண்டாம். தொடர்ந்து ஆப்கனுக்கு பொருளாதார ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தங்கள் ஆதரவை நல்க வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/news/international/ex-afghanistan-minister-syed-ahmad-sadat-now-works-as-a-food-delivery-guy-in-germany
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக