Ad

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

திருச்சி ஹேங்அவுட்: இமயமலை கடந்துவரும் வரித்தலை வாத்து... பரவசமூட்டும் கரைவெட்டி பறவைகள் சரணாலயம்!

மனிதனின் மனசை இலகுவாக்குவதில் மரங்களும், பறவைகளும் முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அது மிகையாகாது. கடல் போல் காட்சியளிக்கும் ஏரி, எட்டிய தூரம்வரை கண்ணை விட்டு அகலாத தண்ணீர், கரைகளுக்கு பாதுகாப்பாக உயர்ந்து நிற்கும் மரங்கள், ஏரிக்கு நடுவே கூட்டமாக வட்டமிடும் பறவைகள் என பரவசங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் உள்ளடக்கி அனைவரின் மனங்களையும் கொள்ளையடிக்கிறது கரைவெட்டி பறவைகள் சரணாலயம். எந்தவித மன அழுத்தம் இருந்தாலும் இங்கு விசிட் அடித்தால் அதை நீக்கி புத்துணர்ச்சி ஏற்படுத்த ஏற்ற இடமாகக் கரைவெட்டி திகழ்கிறது.

கரைவெட்டி ஏரி
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரைவெட்டி கிராமத்தையொட்டி 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரி, கடல் போல் காட்சியளிக்கிறது. கரைவெட்டி கிராமத்தில் இருப்பதால் கரைவெட்டி ஏரி என்றே அழைத்து வந்தனர்.

ஏரியின் கரைகளை சுற்றிலும் மகோகனி, புங்கன், வேம்பு, வாகை, நாவல், மகிழம் எனப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. ஏரிக்கு நடுவே மண் திட்டுக்கள், அதில் பறவைகள் வசிப்பதற்கான ஏற்ற வகையிலான மரங்கள் என அழகுற காட்சியளிக்கின்றன.

Also Read: திருச்சி ஊர்ப்பெருமை: குங்குமப்பூ, பாதாம், முந்திரி, பிஸ்தா... தித்திக்கும் பாம்பே பாதாம் பால்!

பல நாட்டு பறவைகளின் வசிப்பிடமாக கரைவெட்டி திகழ்ந்ததால் 1998-ல் இதனை 'கரைவெட்டி பறவைகள் சராணலயமாக' அறிவித்தது தமிழக அரசு. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய சரணாலயங்களில் ஒன்றாக தற்போது இது திகழ்கிறது. அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதற்கான ஏற்ற சீசன் உள்ளது.

அதே நேரத்தில் அனைத்து மாதங்களிலும் இங்கேயே வசிப்பதற்காக நம் நாட்டு பறவைகளும் முகாமிட்டிருப்பதாக வனத்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மரங்கள் சூழ்ந்திருக்கும் பறவைகள் சரணாலயம்

திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் கீழப்பழுவூர் வழியாகவும், திருச்சியிலிருந்து லால்குடி, புள்ளம்பாடி வழியாகவும் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கரைவெட்டி பறவைகள் சராணாலயத்தை அடையலாம். வரும் வழியிலேயே சாலையின் இரு புறமும் வயல்வெளிகள், ஆங்காங்கே ஓடும் ஓடைகள் என ரம்மியமான சூழல்கள் நம்மை இழுத்து செல்கின்றன. சரணாலயத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என மூன்று பகுதிகளிலும் நுழைவாயில்கள் இருந்தாலும் வடக்கு பகுதியே பிரதான நுழைவுவாயிலாகச் செயல்படுகிறது.

உள்ளே நுழைந்ததுமே ஒரு விதமான அமைதி நம்மைக் கவ்விக் கொள்கிறது. நம்மை வரவேற்பதுபோல் அசைந்து மரங்களிலிருந்து வெளியேறும் சுத்தமான காற்று ஆரத்தழுவி ஆனந்தத்தை வரவழைக்கிறது. வலதுபுறத்தில் பறவைகள் பற்றிய செயல் விளக்கக்கூடம் அமைந்துள்ளது. அதனுள் செயற்கையான மரம், பறவைகளின் கூடுகள், பறவைகளின் பொம்மைகள் என அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனுள் சரணாலயத்துக்குள் சங்கமிக்கும் பறவைகளின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தாற்போல் செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா போன்றவை அமைந்துள்ளன.

சுற்றுலாப்பயணிகள்

பறவைகளை எளிதாகக் காண்பதற்காகவும், அழகு சூழந்த பகுதியை ரசிப்பதற்காகவும் மூன்று இடங்களில் பார்வையாளர்கள் மாடம் அமைத்துள்ளனர். அதேபோல் ஏரியின் கரைகளில் சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்கான குடில்களும் உள்ளன. வனத்துறை ஏற்பாட்டில் பறவைகளை அருகில் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் பைனாகுலர் கொடுக்கப்படுகிறது. ஏரியின் கரையில் நின்றபடி பைனாகுலரில் பார்த்தால் பறவைகள் ஒன்றுக்கொன்று கொஞ்சி மகிழ்வதை ரசிக்கலாம். அப்போது நாமும் குழந்தையாக மாறுவது நிச்சயம். கூட்டமாக வட்டமிட்டு பறந்தப்படி பறவைகள் நடத்தும் அணிவகுப்பு கண்ணுக்கு விருந்தாக அமையும்.

Also Read: திருச்சி ருசி: "அரசியல், சினிமா பிரபலங்களுக்கு மீன் சாப்பாடு நம்ம கடையிலதான்!"- அசத்தும் விஜய் மெஸ்

கஜகஸ்தான், மங்கோலியா, சைபீரியா, இலங்கை, நேபால், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் பறவைகள் தங்கள் கூடாரமான கரைவெட்டியை வந்தடைகின்றன.

வரித்தலை வாத்து என்ற பறவை இமயமலையை கடந்து, அங்கிருந்து சில ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் இந்தக் கரைவெட்டி சரணாலயத்தை வந்தடைகிறது. இதேபோல் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் தொலைவிலிருந்து ஆப்செண்ட் ஆகாமல் தங்களுக்கான வேடாந்தாங்கலை பலவிதமான பறவைகள் வந்தடைவது பெரும் ஆச்சர்யம் என்கிறார்கள். வரித்தலை வாத்து, ஊசித்தலை வாத்து, நாமத்தலை வாத்து, பூனைப்பருந்து, பாம்பு கொத்தி, கழுகு போன்ற பல வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

கரைவெட்டி ஏரியில் பறவைகள்

சீசன் நேரத்தில் ஒரு நாளைக்கு 200 சுற்றுலா பயணிகள்வரை இங்கு வந்து செல்கிறார்கள். மற்ற நாள்களில் சராசரியாக 100 பேர்வரை வருவதாக வனத்துறை ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. பார்வையாளர் மாடம் ஒன்றும், உட்காரும் இருக்கைகள் சிலதும் சேதமடைந்திருப்பதை பார்க்கும்போது, பராமரிப்பில் வனத்துறை மெத்தனம் காட்டுவதை உணர முடிகிறது.

சரியான குடிநீர் வசதி, நொறுக்குத் தீனி சாப்பிடுவதற்கான சிற்றுண்டி உள்ளிட்ட கடைகள் இல்லை என்பதும் குறை. கரைகளில் தொலைநோக்கு கருவி அமைக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

நல்ல காற்று, இயற்கையான சூழல், பரந்து விரிந்த வயல்கள் என அந்த ரம்மியமான சூழல் நமக்குள் புதிவித எனர்ஜியை நிச்சயம் பாய்ச்சும். ஒரு முறை விசிட் அடித்து, அந்த உணர்வை அனுபவித்துதான் பாருங்களேன்!


source https://www.vikatan.com/lifestyle/travel/trichy-hangout-spot-ariyalur-karaivetti-bird-sanctuary-specialties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக