Ad

புதன், 7 ஜூலை, 2021

Sara's: குழந்தையைப் பெற்றுக்கொள்வதா, கருவைக் கலைப்பதா... பெண் உரிமையை விவாதிக்கும் மலையாள சினிமா!

“மகப்பேறு பெரும் பேறு அல்ல பெரும் அக்கப்போர்” என்று நினைப்பவர் சாரா (அன்னா பென்). கனவிலும் கூட கர்ப்பமாவதை விரும்பாத, குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லுவதால் பள்ளி பருவத்திலேயே காதலில் பிரேக்கப்பைச் சந்தித்தவள். அருமையான கிரைம் திரில்லர் திரைப்படமொன்றை இயக்க வேண்டும் என்ற கனவை சுமந்து திரிபவள். தன்னைப் போன்று குழந்தை வேண்டாம் என சொல்லும் ஒருவனையே மணக்க வேண்டும் என்று இருப்பவள். அவளைப் போன்றே குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் ஜீவனுடன் (சன்னி வெயின்) காதல் வயப்படுகிறாள். சில பல அப்சர்வேஷன்களுக்குப் பின் கொஞ்சம் தாமதமாக திருமணம் செய்து கொள்ளலாம் என காதலர்கள் நினைக்க, குடும்பத்தின் அழுத்தம் காரணமாக உடனடியாக திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணமாகி விட்டால் நமக்குள் எல்லாமே மாறிவிடும் என அஞ்சும் சாராவிடம், "நமக்குள் எதுவுமே மாறாது... நீ உன் கனவைத் துரத்து" என சொல்லி திருமண பந்தத்திற்குள் அழைத்துப்போகிறான் ஜீவன்.

Sara's

தனது வேலையில் ஜீவன் முன்னேற, சாராவோ திரைப்படம் இயக்கும் கனவை நிறைவேற்ற அலைகிறாள். ‘பெண்ணான உன்னால் இது முடியுமா?’ என்றும், ‘பெண் என்ற காரணத்தால் உன் திறமையைத் தாண்டி உன்னிடம் என் எதிர்பார்ப்பு இதுதான்’ என்றும் சொல்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள். இவையனைத்தையும் தாண்டி ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பு தர முன்வருகிறார். அந்த நேரத்தில் சாரா கர்ப்பமாக, குடும்பமோ குதூகலிக்கிறது. குழந்தை வேண்டாம் என நினைத்த ஜீவன் மனம் மாறி இப்போது இக்குழந்தை வேண்டும் எனச் சொல்கிறார். சாராவோ கனவுத் திரைப்படத்தை இயக்கக் கிடைத்த வாய்ப்பை கை நழுவ விடத் தயாராக இல்லை. சாரா தனது கனவுக்காக தன் கருவைக் கலைத்தாளா அல்லது தன் குழந்தைக்காக தன் கனவைத் தொலைத்தாளா என்பதை ஏறக்குறைய 2 மணி நேரப்படமாகக் கொடுத்திருக்கிறார் 'ஒம் சாந்தி ஓஷானா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஜூட் ஆன்டனி ஜோசப்!

படத்திற்கு பலமாக பல விஷயங்கள் உள்ளன. அவற்றுள் பிரதானமாக நடிகர்கள் தேர்வைச் சொல்லலாம். கனவுகளைச் சுமப்பதோடு அவற்றை விடாது விரட்டும் பெண்ணாக அனா பென். பள்ளிப் பிராயம் தொடங்கி ''திருமணமான பின்னும் கூட குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன். அதுக்கு யாரு ஓகே சொல்றானோ அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்'' என்பதில் தெளிவாக இருக்கும் பாத்திரத்தைத் திறம்பட செய்திருக்கிறார். எதிர்பாரா கர்ப்பம் ஏற்படுத்தும் குழப்பங்களைக் கையாளத் தடுமாறும் தருணங்களில் முதிர்ச்சியான பெர்ஃபார்மென்ஸ் மோலே.

அன்னாவின் கனவைத் துரத்த உடன் நிற்கும் சக ஜீவனாக சன்னி வெய்ன். குழந்தை வேண்டாமென சொன்னவர் சமூக அழுத்தங்களால் பின்பு குழந்தை வேண்டுமென மனம் மாறி தவிப்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.
Sara's

‘உனக்கு என்ன தோணுதோ அதைப்பண்ணு’ எனச் சொல்லும் அப்பா கதாபாத்திரத்தில அன்னா பென்னின் நிஜ அப்பாவான பென்னி நாராயம்பலம் அன்னாவின் பாத்திரத்திற்கான பெரும் பலம். ''உன்னை பார்த்துக்கத்தானே நான் இங்கே வந்து இருக்கேன்... நீ வெளியே சுத்துனா என்ன அர்த்தம்?’' என ஆதங்கத்தை வெளிப்படுத்தும் மாமியாராக மல்லிகா சுகுமாரன். திருமணத்திற்கு பின்பு குழந்தைகளுக்காக நடிப்பைத் துறந்த நடிகை, ‘ நான் பர்மிஷன் கொடுத்தும் அவள் சோம்பேறித்தனப்பட்டு நடிக்காமல் வீட்டிலேயே இருக்கா’ எனச் சொல்லும் நடிகையின் கணவர், அத்துடன் சில காட்சிகளே வந்து போனாலும் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கும் சித்திக் என திரையில் தோன்றும் ஒவ்வொருவரும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.

மேலே சொன்னது போல் படத்தின் இரண்டாவது பெரும் பலம் இசை. பின்னணி இசையாகட்டும் பாடல்களாகட்டும் இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் தன் இசையின் மூலம் காட்சிகளின் கனத்தைக் கூட்டியிருக்கிறார். போலவே ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியும் தன் பங்குக்கு கதைக்குத் தேவையான அழகியலை தனது ஃபிரேம்களின் மூலம் சேர்த்திருக்கிறார்.

சுற்றமும் நட்பும் சமூகமும் திருமணமான தம்பதிகளின் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளும் அழுத்தங்களும் தம்பதிகளின் மனதில் ஏற்படுத்தும் சஞ்சலங்களையும் மாற்றங்களையும் தடுமாற்றங்களை திறம்பட கையாண்டுள்ளது அக்ஷய் ஹரீஷ்ஷின் திரைக்கதை.

படத்தின் குறை எனச் சொல்ல வேண்டும் என்றால் படத்தின் நீளமும், அடுத்தடுத்த காட்சிகளை எளிதாக யூகிக்க வைக்கும் படியான திரைக்கதையும்தான். கூடவே தன் உடல் சார்ந்த எந்தவொரு முடிவையும் எடுக்கும் முழு உரிமை சாராவைச் சார்ந்ததுதான் என்றாலும், குழந்தை வேண்டுமென நினைக்கும் ஜீவனின் உணர்வுகளை சாரா சிறிதும் பொருட்படுத்தாமல் கடப்பது சிறு உறுத்தல்.

Sara's

தன் மாமியாரிடம் சாரா, "உங்கள் ஆயுளில் பாதியை உங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்காக தானே செலவழித்தீர்கள். ஆனால், இன்று அவர்கள் உங்களோடு இல்லையே?" எனக் கேட்கும் கேள்வி முகத்தில் அறையும் உண்மை. பெண்ணாய் பிறந்ததன் பயனே தாய்மை அடைவதுதான் எனப் போதிக்கப்படும் நம் சமூகத்தில், ஒரு பெண் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வது, உருவான கர்ப்பத்தை கலைப்பதா அல்லது அதைப் பிரசவிப்பதா உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும் பொறுப்பும் உரிமையும் அந்தப் பெண்ணைச் சார்ந்ததே என்ற கருத்தை பொது வெளியில் உரக்கப் பேசும் 'சாரா'ஸ்' திரைப்படத்தை வரவேற்கலாம்.



source https://cinema.vikatan.com/movie-review/amazon-prime-video-release-anna-ben-starrer-saras-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக