Ad

புதன், 7 ஜூலை, 2021

`திருக்குறள் - கலைஞர் உரை’ - திருவாரூரில் முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்த சிறார்கள்

தமிழக முதலமைச்சராக மு,க.ஸ்டாலின் பதவியேற்றப் பிறகு, நேற்று முதல் முறையாக, தனது சொந்த ஊரான திருவாரூருக்கு வருகைப் புரிந்தார். இதனால் திருவாரூர் மக்கள், குறிப்பாக திமுக தொண்டர்கள் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டார்கள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பலரும் புத்தகங்களை பரிசளித்தனர். பல மணிநேரம் காத்திருந்திருந்து சிறுவர்கள் அளித்த புத்தகம் முதல்வரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த காலங்களில் முதலமைச்சராக பதவியேற்றவுடன் திருவாரூரில் உள்ள தனது தாய் அஞ்சுகம் அம்மாளின் சமாதிக்கு மரியாதை செலுத்திவிட்டு, திருக்குவளையில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு செல்வது வழக்கம். முதலமைச்சர் ஸ்டாலினும் தனது தந்தையின் வழக்கத்தை கடைப்பிடிப்பார் என திருவாரூர் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலினின் திருவாரூர் பயணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை உள்பட குடும்ப சகிதமாக, நேற்று இரவு 8.30 மணியளவில் காட்டூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மாளின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

காட்டூர் முழுவதும் திமுக தொண்டர்கள் நிறைந்திருந்தார்கள். கொரோனா காரணமாக, அஞ்சுகம் அம்மாவின் சமாதிக்குள், வேறு யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. திமுக முக்கிய பிரமுகர்களும் கூட அனுமதிக்கப்படவில்லை. அஞ்சுகம் அம்மாளின் சமாதிக்கு மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிய ஸ்டாலின், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காட்டூரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பவித்திரமாணிக்கம் என்ற ஊரின் சாலையோரத்தில் இரு மாணவர்கள், ஒரு புத்தகத்தோடு நீண்டநேரமாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

இதனை கவனித்த முதல்வர் ஸ்டாலின், தனது காரை நிறுத்த சொல்லி அந்த சிறுவர்களிடம் பேசினார். அப்போது அந்த மாணவர்கள் அளித்த புத்தகம் முதல்வர் ஸ்டாலினை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திருக்குறள் - கலைஞர் உரை என்ற புத்தகத்தை அளித்த அந்த மாணவி சுபஸ்ரீ பதின்னொன்றாம் வகுப்பும், அவரின் சகோதரன் ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள். பவித்திரமாணிக்கம் பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான மக்கள் நிறைந்திருந்த நிலையிலும் கூட, இந்த இரு மாணவர்களும் புத்தகத்தோடு நிற்பதை கவனித்து, முதல்வர் ஸ்டாலின் தனது காரை நிறுத்தி இவர்களிடம் புத்தகம் பெற்று வாழ்த்து தெரிவித்தது இப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தனது தந்தை எழுதிய திருக்குறள் உரை புத்தகத்தை, தனது சொந்த ஊரில் அதுவும் இரு சிறுவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டது முதல்வர் ஸ்டாலினை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரவு 9.30 மணியளவில் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் முதல்வர் ஸ்டாலின். அங்கு காவல்துறையின ர் கடும் கட்டுப்பாடுகள் விதித்தருந்த போதிலும், ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் கூடியிருந்தார்கள். கொரோனா எச்சரிக்கை காரணமாக சாலையின் ஓரத்தில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதியில் இருந்து மட்டுமே பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பார்க்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.



source https://www.vikatan.com/news/tamilnadu/student-gifted-book-to-stalin-which-was-written-by-karunanithi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக