Ad

புதன், 7 ஜூலை, 2021

திலிப் குமாரின் சென்னை பாசமும், ஷூட்டிங் முடிந்தும் வெளியாகாமலிருக்கும் அவரின் பழைய திரைப்படமும்!

வயோதிகம் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக‌ மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட்டின் மூத்த நடிகர் திலிப் குமார் காலமானார். அவருக்கு வயது 98.

பாலிவுட்டின் முக்கிய கதாநாயகனாக இருந்தாலும் சென்னையுடன் எப்போதும் நெருங்கிய தொடர்பிலிருந்து வந்தவர் திலிப்.

தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களாகத் திகழ்ந்த ஜெமினி, ஏ.வி.எம். சாரதா ஸ்டூடியோக்களுடன் திலிப் குமாருக்கு நல்ல நட்பு இருந்தது.

திலிப் குமார்

தமிழ் சினிமா மற்றும் சென்னையுடன் திலிப் குமாருக்கு இருந்த அந்தத் தொடர்பு குறித்து கவிஞர் கண்ணதாசனின் சகோதரரும் திலிப் குமாரின் குடும்ப நண்பராகவும் இருந்த‌ ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினேன்.

"எங்க திரைப்படங்கள்ல (சாரதா ஸ்டூடியோ) அவரு நடிச்சதில்லை. ஆனா தனிப்பட்ட முறையில் என்னுடைய மாமனாருக்கு (ஏ.எல்.சீனிவாசன்) திலிப் குமார் ரொம்பவே நெருக்கமான‌ நண்பர். மாமா மும்பை போனா அவரை வீட்டுக்குச் சென்று சந்திக்காமல் திரும்ப‌ மாட்டார். அதேபோல அவர் சென்னைக்கு என்ன வேலையா வந்தாலும் கூட்டிட்டு வர ஏர்போர்ட்டுக்கு எங்களுடைய பிளைமவுத் கார்தான் போகும்.

ஷூட்டிங்னு சென்னைக்கு வந்தா அவருக்கு கன்னிமாரா ஹோட்டல்லதான் ரூம் போட்டிருப்பாங்க.

பத்து, பதினைந்து நாள் ஷூட் இருக்கும்கிறதால அவருடைய சமையல்காரங்களும் கூடவே வந்திடுவாங்க. கன்னிமாராவுல அவங்களுக்குன்னு தனி கிச்சன் ஒதுக்கித் தந்திடுவாங்க.

சினிமா தாண்டி சென்னையில பலர் அவருடன் நட்பு வட்டத்துல இருந்தாங்க. தி.நகர்ல என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறக்கப்பட்ட போது என்னுடைய மாமனார், அறிஞர் அண்ணா, எஸ்.எஸ்.வாசன், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் இவர்களுடன் திலிப்குமாரும் கலந்துகொண்டார்.

என்.எஸ்.கே சிலை திறப்பு விழாவில் திலிப் குமார்

மொத்தத்துல எங்களுக்கு நல்ல ஃபேமிலி ஃப்ரண்டா இருந்தது அவருடைய குடும்பம். மாமா இறந்தப்ப மனைவி சாய்ரா பானுவையும் கூட்டிகிட்டு எங்க வீட்டுக்கு வந்திருந்தார்.

இப்ப கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாம மருத்துவமனையில சேர்ந்திருக்கார்னு செய்தி கேள்விப்பட்டதுமே அவரைப் போய்ப் பார்க்கணும்னு தோணுச்சு. ஆனா கோவிட் சூழலால அது நடக்காமப் போயிடுச்சு" என்ற ஜெயந்தி கண்ணப்பன், இன்னொரு தகவலையும் கூறினார்.

ஆக் கா தரியா (Aag Ka Dariya) | திலிப் குமார், ரேகா

'மூன்று முடிச்சு', 'நினைத்தாலே இனிக்கும்', 'தப்புத் தாளங்கள்' முதலான தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களைத் தயாரித்த பிரேமாலயா ஆர்.வெங்கட்ராமன், திலிப்குமார், ரேகா ரெண்டு பேரையும் ஹீரோ, ஹீரோயினாக வெச்சு ஒரு படத்தை எடுத்தார். 'ஆக் கா தரியா'னு (Aag Ka Dariya) பேரு, தமிழ்ல நீரும் நெருப்பும்னு அர்த்தம். நேர்மையான கடற்படை அதிகாரியா அதுல நடித்திருப்பார். ஷூட்டிங் தமிழ்நாட்டுலயுமே சில இடங்கள்ல நடந்தது. படம் முழுக்கத் தயாராகிட்ட சூழல்ல வெளியிடறதுல சிக்கல் வந்து இன்னைக்கு வரை படம் வெளியாகவே இல்லை" என்கிற தகவல்தான் அது.



source https://cinema.vikatan.com/bollywood/bollywood-actor-dilip-kumars-chennai-memories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக