Ad

ஞாயிறு, 4 ஜூலை, 2021

மந்தனா, மித்தாலி பொறுப்பான ஆட்டம், ஸ்நே கேமியோ... இங்கிலாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றிபெற்ற இந்தியா!

தொடரை ஏற்கெனவே இங்கிலாந்து வென்று விட்டாலும், ஆறுதல் வெற்றிக்காக மூன்றாவது போட்டியில் முனைப்போடு களமிறங்கியது இந்தியா. மழையின் காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கியதால் இருபக்கமும் 47 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது‌. டாஸை இந்தியா வென்று, பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இரண்டு போட்டியிலும், டாஸைத் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு, இப்போட்டியில் இது நல்ல துவக்கமாக அமைந்தது. இரு அணிகளுமே மாற்றமின்றி இறங்கின.

வின்ஃபீல்டும், பீமௌண்டும் ஓப்பனர்களாகத் தொடங்கினர். முதல் ஓவரை மெய்டனாக கோஸ்வாமி ஆரம்பிக்க, இரண்டாவது ஓவரிலேயே பீமௌண்டை எல்பிடபிள்யூவில் வெளியேற்றி அமர்க்களமாக நாளைத் தொடங்கி வைத்தார் ஷிகா பாண்டே. பயப்பட மாட்டோம் என முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கினார் நைட். இதன்பிறகு சில ஓவர்கள் இந்தியப் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. பவர்பிளே ஓவர்களை கபளீகரம் செய்து, அவர்களது ரன்குவிப்புக்கு முட்டுக்கட்டை போட, இது வேலைக்காகாது என சிக்கிய ஷிகா பாண்டேயின் ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசி பதிலடி கொடுத்தார் வின்ஃபீல்ட். இந்நிலையில், ஸ்நே ராணா வின்ஃபீல்டை வீழ்த்தி அதிரடி காட்டினார். ஸ்வீப் ஷாட் ஆட முயன்று டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேற ஸிவர் உள்ளே வந்தார். இக்கூட்டணி கொஞ்ச நேரம் நீடித்தது. நைட்டை தனது சுழலில் சிக்க வைத்த ஹர்மன்ப்ரீத், 49 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்திருந்த பார்ட்னர்ஷிப்பை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தார். இது நிலைத்திருக்கும் பட்சத்தில் அது இந்தியாவுக்கு எதிரானதாக முடிவடைந்திருக்கும்.

ENGvIND | Women's Cricket

அடுத்ததாக இணைந்த ஸிவர் - ஜோன்ஸ் கூட்டணி, கொஞ்ச நேரம் ஆட்டம் காட்டியது. ஐம்பது ரன்களை நெருங்கிய இவர்களது பார்ட்னர்ஷிப்புக்கு தீப்தி முடிவுரை எழுதினார். இந்தத் தருணத்தில்தான் போட்டியை தங்கள் பக்கம் திருப்பியது இந்தியா. பின்னர், தீப்தி தனது இன்னொரு விக்கெட்டாக ஸிவரைத் தூக்கியதும் மொத்தமாக இந்தியாவின் பக்கம் போட்டி திரும்பியது. டீப் மிட் விக்கெட்டில் நின்றிருந்த மந்தனா நம்பவே முடியாத ஒரு அற்புதக் கேட்சால், 49 ரன்களில் இருந்த ஸிவரை வெளியேற்ற, பௌலிங், ஃபீல்டிங் என இரண்டுமே, ஒரே கோட்டில் பயணிக்க, சரியான நோக்கத்தோடு முன்னேறியது இந்திய அணி. ஒன்பது ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், வெறும் 164 ரன்களை மட்டுமே சேர்த்திருந்ததால் பின்வரிசை வீராங்கனைகள் அடித்து ஆட முற்பட, அதுவே விரைவான விக்கெட்டுகளுக்கும் வழிவகுத்தது.

38-வது ஓவருக்குப்பின் ஆரம்பித்த இந்தியப் பெண்களின் விக்கெட் வேட்டை விளையாட்டு, இறுதி ஓவரின் இறுதிப் பந்தில் ஸாரா கிளன்னை ரன் அவுட் ஆக்கிய வரை தொடர்ந்தது. கடந்த இரண்டு போட்டிகளுக்கும் சேர்த்தே இங்கிலாந்தின் ஏழு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்த இந்திய அணி, இப்போட்டியில், பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தது. தீப்தி ஷர்மா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தாலும், மற்றபடி இவர் அவர் என இன்றி வீசிய அத்தனை பௌலர்களும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி சமபங்காற்றி இருந்தனர். இங்கிலாந்தும் அவ்வளவு எளிதாகப் பணிந்து விடவில்லை. குறிப்பாக கேட் கிராஸ், தீப்தி வீசிய இறுதி ஓவரில், பேக் டு பேக் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். ஒரு கட்டத்தில், 200ஐ எட்டுமா என்றிருந்த ஸ்கோரை, 219-க்குக் கொண்டு வந்து நிறுத்தியது இங்கிலாந்து.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் சுலப இலக்கை எதிர்கொண்டு இறங்கிய இந்தியாவின் கடந்த இரண்டு போட்டிகளின் கதை தெரியுமென்பதால், கொஞ்சம் கிலியோடே, தொடர்ந்து பார்த்தனர் இந்திய ரசிகர்கள். மந்தனாவும் ஷஃபாலியும் ஓப்பனிங் இறங்கினர். 3.0 ரன்ரேட்டோடு, கொஞ்சம் மந்தமாகத் தொடங்கிய இன்னிங்ஸை மந்தனா, பிரண்ட் பந்தில் அடித்த முன்று பவுண்டரிகளோடு முடுக்கிவிட்டார். எதிர்முனையில், ஷஃபாலி, வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் அமைதி மோடுக்கு மாறி இருந்தார்.
ENGvIND | Women's Cricket

ஒன்பது ஓவர்களிலேயே, அணியின் ஸ்கோரை 46-க்குக் கொண்டு போய் வெற்றிக்கான அடித்தளத்தை பலமாகவே அமைத்துக் கொடுத்த இக்கூட்டணியை, ஷஃபாலியின் விக்கெட்டை வீழ்த்தி கிராஸ் முறித்தார். அடுத்ததாகக் களமிறங்கிய ரோட்ரிக்ஸ், கடந்த போட்டியைப் போலவே, இப்போட்டியிலும், ஒற்றை இலக்கோடு வெளியேற, மறுபடியும் அணியின் நங்கூரம் மித்தாலி ராஜ் உள்ளே வந்தார். ஐந்து ஓவர்கள் ஆயுட்காலம் கொண்ட இக்கூட்டணி, 15 ரன்களை மட்டுமே சேர்த்ததோடு, முடிவுக்கு வந்தது. ஹர்மன்ப்ரீத், உள்ளே வந்தார்.

தொடக்கத்தில் வழக்கம் போல மிக நிதானமாகவே தொடங்கினார் மித்தாலி. அந்நிலையில், ஸிவரின் ஓவரின் இரண்டாவது பந்தை அவரின் தலைக்கு மேலேயே பறக்கவிட்டு அடித்த பவுண்டரி மூலமாக சர்வதேசக் கிரிக்கெட்டில் எல்லா ஃபார்மட்டுக்கும் சேர்த்து, அதிக ரன்களைச் சேர்த்த வீராங்கனை என்னும் சாதனையை நிகழ்த்தினார் மித்தாலி. முன்னதாக, 10273 ரன்களோடு, இங்கிலாந்தின் சார்லோட் செய்திருந்த சாதனையை, இங்கிலாந்து மண்ணிலேயே முறியடித்து, இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார் மித்தாலி‌.

மித்தாலி - ஹர்மன்ப்ரீத்துக்கு இடையேயான இந்தக் கூட்டணி, மிகவும் பொறுப்பாக ரன்களைச் சேர்த்தது. 12 ஓவர்களில், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியிருந்தனர் இவர்கள். இந்த இடைவெளியில்தான் மித்தாலி தனது ஸ்ட்ரைக் ரேட்டையும் சற்றே உயர்த்தி இருந்தார். இறுதியாக, கேப்டன் நைட் வீசிய பந்தை ஹர்மன்ப்ரீத் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயல, எல்பிடபிள்யூவில் அவுட் கொடுக்கப்பட்டது. உண்மையில், ரிப்ளேயில் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றிருந்ததும், அதனைக் கணிக்காது ஒரு விக்கெட்டை இந்தியா வீணாக்கியிருந்ததும் தெளிவானது. ரிவ்யூ பயன்படுத்தப்பட்டு, ஹர்மன்ப்ரீத் நின்றிருந்தால் வெற்றி இந்தியாவுக்கு மிகச் சுலபமாக வசப்பட்டிருக்கும்.

எனினும், அடுத்து வந்த தீப்தி ஷர்மாவும், இந்தியாவை வெற்றிப் பாதையில் சரியாகக் கொண்டு போனார். பந்துகள் சில வீணடிக்கப்பட்டாலும் அவ்வப்போது வரும் பவுண்டரிகள், ரன் ரேட்டை படுத்துவிடாமல் பார்த்துக் கொண்டன. 60 பந்துகள் 70 ரன்கள் தேவை என்ற கணக்கில் போட்டி நகர்ந்த போது, தீப்தியின் விக்கெட்டை இந்தியா பறிகொடுக்க, மித்தாலியும் ஸ்நே ராணாவும் நின்று முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை. 68 பந்துகளில், மித்தாலி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஹாட்ரிக்காக மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளார் மித்தாலி. அவரது ஸ்ட்ரைக்ரேட் தொடர்ந்து கண்டனத்துக்கு உள்ளானாலும், இந்த நிலைப்புத்தன்மைதான் அவரை 22 ஆண்டுகளைக் கடந்தும் அணியில் வைத்துள்ளது‌.

Also Read: மீண்டும் அரை சதம் அடித்தார் மித்தாலி ராஜ்... ஆனால், இந்தியாவின் தோல்வி ஏன்?!

ENGvIND | Women's Cricket

அரைசதம் கடந்த பின்பு மித்தாலி தனது வேகத்தைக் கூட்ட, ஸ்நே ராணாவும் தன் பங்கிற்கு, 'ரன் எ பால்' என்ற கணக்கில், ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார். தேவைப்படும் ரன்களின் ரேட்டும் 6ஐ சுற்றியே வட்டமிட, போட்டி கொஞ்சம் டென்ஷனை ஏற்றுவதாகவே இருந்தது. இங்கிலாந்து வீராங்கனைகளும், பெரிய ஷாட்டுக்குச் செல்ல விடாமல், டைட்டாகவே பந்துகளை வீசிக் கொண்டிருந்தனர். கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் ஸ்நே அடித்த பந்து காற்றைக் கிழித்து கேட் கிராஸின் கைகளைத் தொட்டு, தரையை முத்தமிட்டு பவுண்டரி லைனைத் தாண்டி, ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது‌. ஆனாலும், எக்கில்ஸ்டோன் வீசிய அந்த ஓவரின் கடைசிப் பந்து ஸ்டம்பை சிதறச் செய்து ஸ்நே ராணாவை வெளியேற்றியது‌.

Also Read: Sneh Rana : தந்தைக்காக, தாய்நாட்டுக்காக ஒரு எமோஷனல் இன்னிங்ஸ்... யார் இந்த ஸ்நே ராணா?

6 பந்துகள், 6 ரன்கள் என்னும் நிலையில் கோஸ்வாமி இறங்க அனுபவம் மிகுந்த பிரண்டைக் கொண்டு தொடர்ந்தார் நைட். முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் சேர, மித்தாலி ஆன் ஸ்ட்ரைக்கில் வர, சரி ஒரு இருக்கைநுனி போட்டியாகத்தான் இது இருக்கப் போகிறதென்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஆச்சர்யம் அளிக்கும் வகையில், குட் லெந்த்தில் அவுட்சைட் தி ஆஃப் ஸ்டெம்ப்பில் வீசப்பட்ட பந்தை பவுண்டரியாக்கி வின்னிங் ஷாட்டோடு அணியை வெல்ல வைத்தார் மித்தாலி.

Mithali Raj | ENGvIND | Women's Cricket

பௌலிங், ஃபீல்டிங் என இரண்டிலுமே இந்தியா அசத்த, மந்தனா, மித்தாலியின் பொறுப்பான ஆட்டத்தோடு, ஸ்நே கடைசி நிமிடம் கைகொடுத்ததும் சேர்ந்து, இந்தியாவுக்கு வெற்றியைப் பரிசளித்துள்ளது. 'பேக் டு த வின்னிங் வேய்ஸ்' என 2-1 என முடித்துள்ளது இந்தியா. மித்தாலி ராஜ் ஆட்டநாயகியாகவும், எக்கில்ஸ்டோன் தொடர் நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மூன்று போட்டிகளை உடைய இந்த இரு அணிகளுக்குமான டி20 தொடர், அடுத்த வாரம் தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்து, ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்தியா, டி20 தொடரையாவது கைப்பற்ற வேண்டுமென்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.


source https://sports.vikatan.com/cricket/india-women-won-the-third-odi-against-the-england-women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக