சென்னை பாடி கலைவாணர் நகர் மதுரை வீரன் தெருவைச் சேர்ந்தவர் அச்சுதன். இவரின் மனைவி மனோபாரதி (37). இந்தத் தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகளும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மனோபாரதி, எஸ்.பி.ஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். ஆனால் அச்சுதன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். மேலும் அவர் மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் 2.7.2021-ம் தேதி மதியம் மனோபாரதிக்கும் அச்சுதனுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அச்சுதன் மதுபோதையில் இருந்திருக்கிறார். ஆத்திரமடைந்த அச்சுதன், வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து வந்து மனோபாரதியின் தலையில் தாக்கியிருக்கிறார். அதில் காயமடைந்த மனோபாரதி மயங்கி விழுந்தார். அதைப்பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மனோபாரதியை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோபாரதி உயிரிழந்தார்.
Also Read: செங்கல்பட்டு: ஆபாச இணையதளங்களுக்கு அடிமை! - சிறுமி கொடூரக் கொலை வழக்கில் சிக்கிய சிறுவன்
இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் மனோபாரதியின் அம்மா புகாரளித்தார். அதன்பேரில் கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் அச்சுதனைக் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அச்சுதனும் மனோபாரதியும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். மனோபாரதி, வங்கியில் வேலை பார்த்து குடும்பத்தைக் கவனித்து வந்தார். ஆனால் மதுபழக்கத்துக்கு அடிமையான பிறகு அச்சுதன் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
மனோபாரதியின் சகோதரி காவல்துறையில் பணியாற்றி வருகிறார். அதனால் வீட்டில் அச்சுதன், தகராறில் ஈடுபடும்போது அவரை மிரட்டுவதற்காக வரதட்சணைக் கேட்பதாகக் கூறி சிறையில் தள்ளிவிடுவேன் என மனோபாரதியின் குடும்பத்தினர் கூறி வந்திருக்கின்றனர். அது, அச்சுதனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. அதனால்தான் மனோபாரதியை சுத்தியலால் அடித்துக் கொன்றதாக அச்சுதன், விசாரணையின்போது தெரிவித்தார்" என்றார். வங்கி அதிகாரியான மனைவியை அவரின் கணவரே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/in-chennai-wife-murdered-by-her-drunken-husband
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக