Ad

வியாழன், 1 ஜூலை, 2021

கரூர்: `ஆடுகளை கொன்னு, என் ஆத்திரத்தை தீர்த்துக்கிட்டேன்!’ - முன்விரோதத்தில் உறவினரின் வெறிச்செயல்

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக, தனது எதிரிக்குச் சொந்தமான 4 ஆடுகளை கொன்று கல் குவாரி குட்டையில் வீசிய ஆசாமியின் செயல், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கிருஷ்ணராயபுரம்

Also Read: `அண்ணனைக் கோத்துவிட்டார்கள்!’ - கரூரில் விதிமுறைகளை மீறிக் கடைகள் திறப்பு சர்ச்சை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள கீழடை மாணிக்கப்புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அதோடு, சுப்பிரமணி தனக்குச் சொந்தமான 15 க்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடுகளை தினமும் அப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகில் பகல் முழுவதும் மேய்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். பின்னர், மாலையில் ஆடுகளை ஓட்டிவந்து பட்டியில் அடைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், சுப்பிரமணி வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைக்கும் போது, நான்கு ஆடுகள் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரேனும் ஆடுகளை திருடிக்கொண்டு சென்றுவிட்டார்களா என்ற பதைபதைப்புடன் ஆடுகள் மேய்ந்த கல்குவாரிக்கு ஓடிச்சென்றுள்ளார். அப்போது கல்குவாரி பகுதியில் தேடிப் பார்த்தபோது, கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் அவருக்குச் சொந்தமான அந்த நான்கு வெள்ளாடுகளும் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்ததும் அதிர்ந்துபோனார். உடனே, ஆடுகளின் உடல்களை மீட்ட சுப்பிரமணி, இதற்கு காரணமானவர்கள் யார் என விசாரித்துள்ளார்.

மாயனூர் காவல் நிலையம்

அப்போது, இவரது உறவினரான பெருமாள் என்பவர் கல்குவாரி பகுதியில் வந்து சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மாயனூர் காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகார் அளித்தார். இதையடுத்து, மாயனூர் காவல் நிலைய போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பெருமாள் தான் முன்விரோதம் காணமாக சுப்பிரமணியின் ஆடுகளை கொன்று கல்குவாரியில் வீசியது தெரிய வந்தது. அதோடு, `எனக்கும், சுப்பிரமணியனுக்கும் ஆகாது. ஏக குடைச்சல் கொடுத்தான். அவனை எதாவது செய்ய எனக்கு தைரியம் இல்லை. அதனால்தான், அவன் வளர்த்து வந்த ஆடுகளை கொன்னு, என்னோட ஆத்திரத்தை தீர்த்துக்கிட்டேன்' என்று காவல்துறையினரிடம் கூறி, அதிர வைத்துள்ளார். இதையடுத்து, மாயனூர் காவல் நிலைய போலீஸார் பெருமாளை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அவர் வளர்த்து வந்த ஆடுகளை பெருமாள் கொடூரமாக கொலை செய்த விவகாரம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/karur-man-killed-four-goats-in-family-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக