Ad

வியாழன், 1 ஜூலை, 2021

`பிரகாஷ் ராஜை எதிர்த்துப் போட்டியா?' - தெலுங்கு நடிகர் சங்க களேபரம்; தன் முடிவை சொல்லும் ஜீவிதா

நடிகர் சங்கம் என்றாலே பஞ்சாயத்துதான் போல. அதிரடி சண்டைக் காட்சிகளுக்குப் பெயர்போன தெலுங்கு சினிமாவில், நடிகர் சங்கத் தேர்தல் ஏற்பாடுகளால் பரபரப்பு கூடியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, தெலுங்கு நடிகர் சங்கத்தில் தொடர் புகார்களும் மோதலுமாக முக்கிய நிர்வாகிகள் பலரும் எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர். அந்தச் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார்.

கணவர், மகளுடன் ஜீவிதா

`கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடாது' என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிரகாஷ்ராஜ் அணியை எதிர்த்து, பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவும், பா.ஜ.க-வைச் சேர்ந்த மூத்த நடிகர் நரசிம்மராஜ் ஆகியோரும் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில், பொதுச் செயலாளராகத் தேர்வான நடிகை ஜீவிதா, இம்முறை தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியானது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, பரபரப்பு கூடியிருப்பதுடன், விவாதங்களுக்கும் வித்திட்டுள்ளனர். டோலிவுட் சினிமாவில் நடக்கும் தேர்தல் சர்ச்சைகள், மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிஜை ஜீவிதாவிடம் பேசினோம்.

``சில வருஷங்களுக்கு முன்பு பல நடிகர்கள்மீதும் நடிகை ஶ்ரீரெட்டி பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாங்க. அப்போ என் கணவர்மீதும் என்மீதும் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வெச்சாங்க. கொதிப்படைஞ்சு, அவங்க மேல கேஸ் போட்டதுடன், இதுதொடர்பா மீடியா தரப்புல விரிவான விளக்கமும் கொடுத்தேன். இந்த விவகாரத்துல ஶ்ரீரெட்டிமீது, நடிகர் சிவாஜி ராஜா தலைமையிலான அப்போதைய நடிகர் சங்கம் உரிய முறையில நடவடிக்கை எடுக்கத் தவறிடுச்சு. நடிகர்களுக்கு ஒரு பிரச்னைனா, அவங்களுக்குப் பக்கபலமா இருக்க வேண்டிய நடிகர் சங்கம் இப்படி மெளனமா இருக்கிறது சரியில்லைனு கோபப்பட்டேன்.

குடும்பத்தினருடன் ஜீவிதா

இந்த நிலையில, 2019-ல் நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடந்துச்சு. `நீங்களும் உங்க கணவரும் தேர்தல்ல போட்டியிடணும். சக கலைஞர்களுக்காக ஆக்கபூர்வமா செயல்படலாம்னு நடிகர் நரேஷ் எங்களை வலியுறுத்தினார். தலைவர் பொறுப்புக்கு அவர் போட்டியிட்ட அணி சார்பா, நாங்க போட்டியிட்டோம். நரேஷ் தலைவராகவும், நான் பொதுச் செயலாளராகவும், என் கணவர் நிர்வாகத் துணைத் தலைவராகவும் தேர்வானோம். சிவாஜி ராஜா தலைமையிலான எதிரணியைச் சேர்ந்தவங்க சிலரும், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்குத் தேர்வானாங்க. ரெண்டு அணியினருக்கும் இடையே தேர்தல் பிரசார நேரத்துல ஆரம்பிச்ச மோதல் போக்கு, தேர்தல் முடிஞ்ச பிறகும் தொடர்ந்துச்சு.

பிரச்னைகளைச் சரிசெஞ்சு, எல்லோரும் ஒண்ணா இணைஞ்சு வேலை செய்யலாம்னு நானும் என் கணவரும் எல்லோர் சார்பாகவும் வலியுறுத்தினோம். எல்லாக் கலைஞர்களையும் கூப்பிட்டு பொதுக்குழுவை நடத்தலாம்னு சொன்னோம். அதுக்கு நரேஷ் சம்மதிக்கல. எதிரணியினர் ஆக்கபூர்வமா பேசுறதைவிடவும், தொடர்ந்து நரேஷ் மேல குற்றம் சுமத்துறதுலேயே முனைப்பு காட்டுறாங்க.

குடும்பத்தினருடன் ஜீவிதா

நடிகர் சங்கத்தின் சார்பில் வருடாந்தர டைரி வெளியிடும் நிகழ்ச்சியில, சங்கத்தினர் ஒத்துமையா செயல்படுறதா மூத்த கலைஞர்கள் பலரும் புகழ்ந்து பேசினாங்க. அதுல, `மோதல் போக்கைத் தீர்த்து வைக்காம, எல்லோரும் இணைஞ்சு வேலை செய்றதா புகழ்ந்து பேசுறது எப்படி நியாயம்?'னு என் கணவர் ஆதங்கத்துடன் பேசினார். `பொது மேடையில இப்படிப் பேசுறது சரியில்லை'னு என் கணவர்மீது பலரும் கோபப்பட்டாங்க. கணவர் சார்பா நான் மன்னிப்பு கேட்டதுடன், என் கணவர் பேசினதுல எந்தத் தப்பும் இல்லைனு மேடையிலயே அழுத்தமா சொன்னேன்.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, கோபத்துல என் கணவர் தன்னோட பதவியை உடனடியா ராஜினாமா செஞ்சார். ஆனா, நான் தொடர்ந்து பொறுப்பில் இருந்ததுடன், ரெண்டு தரப்புக்கும் பொதுவான நபரா செயல்பட்டேன். தனிப்பட்ட முறையில வாட்ஸ்அப் குரூப் ஒண்ணு ஆரம்பிச்சு, எல்லா உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று என்னால இயன்ற சங்கப் பணிகளைச் செய்துட்டு இருக்கேன்" என்றவர், தற்போதைய தேர்தல் பரபரப்பு குறித்துப் பேசினார்.

jeevitha with husband

``தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு, வரும் செப்டம்பர்ல தேர்தல் நடத்தப்படணும். கொரோனா சூழல் இன்னும் இருக்குறதால, மாநில அரசின் அனுமதி கிடைகும்பட்சத்துல நிச்சயமா தேர்தல் நடத்தப்படலாம். இந்த நிலையில, நரேஷ் தலைமையிலான தற்போதைய சங்கத்தின் செயல்பாடுகள் பத்தி அதிருப்தி தெரிவிச்சு நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்துல பேட்டி கொடுத்தார். உடனடியா தேர்தல் தேதி அறிவிக்கப்படணும்னு கூறியவர், இந்த முறை சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு தான் போட்டியிடுறதாவும் கூறினார். அதுக்குப் பிறகுதான் தேர்தல் பத்தின பரபரப்பு கூடியது. சில தினங்களுக்கு முன்பு அவர் மறுபடியும் பத்திரிகையாளர் களைச் சந்திச்சார். அதுல கலந்துகிட்ட நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபு, `அண்ணனின் ஆதரவு பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணிக்குக் கிடைக்கும்'னு சொன்னார். அதை சிரஞ்சீவி சார் இன்னும் அதிகாரபூர்வமா அறிவிக்கல.

இந்த நிலையில, நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவும் தேர்தல்ல தனி அணியா போட்டியிடப்போறதா சொல்லியிருக்கார். இன்னும் ஒருசிலர் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடுவதாகச் சொல்றாங்க. என்னோட நிலைப்பாட்டைப் பத்தி பலரும் கேட்டுகிட்டே இருக்காங்க. ரெண்டு அல்லது அதுக்கு மேற்பட்ட அணியினர் தனித்தனியா போட்டியிடும் பட்சத்துல, வழக்கம்போல போட்டியிடும் எல்லாத் தரப்புல இருந்தும் பல்வேறு பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவாங்க.

கணவருடன் ஜீவிதா

Also Read: `சாவித்ரி பயோபிக்குக்கு நடந்தது எனக்கும் நடந்துடக்கூடாது!' - கொதிக்கும் நடிகை ஜமுனா

மறுபடியும் ஒரு தரப்பு மேல இன்னொரு தரப்பினர் குற்றம் சொல்றதுதான் மறுபடியும் நடக்கும். இதனால என்ன பயன்? எல்லோரும் சினிமா நண்பர்கள்தான். தேர்தல், நடிகர் சங்கக் கூட்டங்களுக்குப் பிறகு, சினிமா வேலைகள்ல இணைஞ்சுதானே வேலை செய்வோம். அதனால, எதுக்கு நமக்குள்ள சண்டையும் போட்டியும்? போட்டியின்றி நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படணும் என்பதுதான் என் நிலைப்பாடு.

அப்படி நடக்காம ரெண்டு அணியினர் தனித்தனியே தேர்தலைச் சந்திக்கும் பட்சத்துல, யாரையும் தாக்கியோ காயப்படுத்தியோ பேச நான் விரும்பல. எந்த அணிக்கும் சேராத சுயேச்சையா ஏதாச்சும் ஒரு முக்கிய பொறுப்புக்குத் தனி நபரா போட்டியிடப்போறேன். என்மேல் நம்பிக்கையுள்ளவங்க, எனக்கு ஓட்டு போடட்டும். ஒருவேளை நான் வெற்றி பெறும் பட்சத்துல, எல்லோருடனும் இணைஞ்சு வேலை செய்யத் தயாரா இருக்கேன். என் முடிவை வரவேற்று நம்பிக்கை கொடுக்கிறார் என் கணவர். என்னோட இந்த நிலைப்பாட்டை வேறு விதமா மாத்தி, நான் தனி அணியா தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடப்போறேன்னு வதந்தியைப் பரப்புறாங்க" என்று சிரித்தபடியே கூறும் ஜீவிதா, 1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.

கணவருடன் ஜீவிதா

Also Read: `என்னோட தாழ்வு மனப்பான்மை போக ஜீவிதாதான் காரணம்!'' - நடிகர் டாக்டர் ராஜசேகர் #AangalaiPurindhuKolvom

பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரைத் திருமணம் செய்து கொண்டவர், 30 ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டவில்லை. பர்சனல் விஷயங்கள் குறித்துப் பகிர்பவர், ``குடும்பத்துக்குத்தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். வீட்டு வேலைகள், கணவரின் சினிமா வேலைகள் மற்றும் மகள்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்றதுனு இல்லத்தரசியா சந்தோஷமா வேலை செஞ்சேன். கூடவே, சினிமா தயாரிப்பு வேலைகளும் இருந்துச்சு. நேரமின்மையால, நிறைய வாய்ப்புகள் வந்தும் 30 வருஷத்துக்கு மேல சினிமாவுல நடிக்கல. அதேசமயம், இந்தத் துறையில ஓர் அங்கமா இப்ப வரைக்கும் இருக்கேன். `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் தெலுங்குப் பதிப்புல இப்போ நான்தான் தொகுப்பாளர். இத்தனை வருஷங்களுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியின் மூலமா ஆன் ஸ்கிரீன்ல வேலை செய்யுறேன். மகள்கள், கணவருடன் சேர்ந்து குடும்பமா ஒரு படத்துல நடிக்கும் எண்ணம் இருக்கு. சரியான சந்தர்ப்பம் அமைஞ்சா, நிச்சயமா ரீ-என்ட்ரி கொடுப்பேன்" என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/jeevitha-rajasekhar-speaks-about-her-decision-on-telugu-cinema-association-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக