Ad

வியாழன், 25 ஜூன், 2020

ஆண்டாளை வழிபட இன்று உகந்த பூரம்! -சிவனடியாரைப் போற்றிய அமர்நீதி நாயனார் குருபூஜை

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. அது அந்த நட்சத்திர நாளில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளைச் சொல்வதாக இருக்கும். அப்படி பூரம் என்றதும் நம் மனதில் தோன்றுவன ஆண்டாள் மற்றும் அமர்நீதி நாயனார் வழிபாடே. பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். எனவேதான் ‘பூரத்தில் பிறந்தவன் (புருஷன்) புவனத்தை ஆள்வான்’ என்று ஜோதிட வாக்கு ஒன்று உண்டு. இத்தனை சிறப்புமிக்க பூர நட்சத்திரத்தின் பெருமைகளில் தலையாயது ஆண்டாள் நாச்சியார் அவதாரம்.

ஆண்டாள்

ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூரத்தில் அவதரித்தார். ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருவிழாவாகக் கொண்டாடப்படும். பிற பூர நட்சத்திர நாள்களிலும் ஆண்டாள் வழிபாடு சகல ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு பூர நட்சத்திர நாளிலும் ஆண்டாள் பாடியருளிய திருப்பாவைப் பாடல்களைப் பாடி பகவான் விஷ்ணுவைப் போற்றுவதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம். குறிப்பாக பூர நட்சத்திர தினத்தில் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினங்கள் வரும். அவர்கள் சந்திராஷ்டமத்தின் பாதிப்புகள் நீங்க திருப்பாவைப் பாடல்களைப் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

ஆனிப் பூரத்தின் மற்றுமொரு சிறப்பு அமர்நீதியார் குருபூஜை. செல்வச் செழிப்போடு வாழ்ந்த அமர்நீதியார் சிவனடியார்களுக்கு உணவும் உடையும் வழங்கிவந்தார். இவரது தன்னலமற்ற பக்தியைக் கண்ட சிவபெருமான் அவரோடு திருவிளையாடல் புரிய விரும்பினார். கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிவனடியாராக அவர்முன் தோன்றினார். அமர்நீதியார், அவரை வணங்கி உணவு ஏற்க அமர்நீதியார் வேண்டவும், நீராடி வருவதாகவும் மழைவருவதுபோல இருப்பதால் தன் கைவசம் இருந்த மற்றுமொரு கோவணத்தை அமர்நீதியாரிடமும் தந்துபோனார்.

பூர நட்சத்திரம்

அதைப் பத்திரப்படுத்திவைத்தார் அமர்நீதியார். சொன்னதுபோலவே மழை வந்தது. சிவனடியார் நனைந்தபடியே வந்தார். தனது கோவணத்தைத் தருமாறு வேண்டினார். அமர்நீதியார் சென்று கோவணத்தைப் பத்திரப்படுத்திய இடத்துக்குச் சென்று தேடியபோது அதைக் காணவில்லை. மாயமாக மறைந்திருந்தது. அந்தக் கோவணத்துக்கு மாற்றாக ஒரு கோவணத்தைக் கொண்டுவந்து தந்தார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த சிவனடியார், தன் கைவசமிருந்த மற்றுமொரு கோவணத்தைக் கொடுத்து அதன் எடைக்கு நிகரான கோவணத்தைத் தருமாறு கூறினார். அமர்நீதியார் தன் கைவசமிருந்த உடைகளை தராசின் ஒரு தட்டிலும் அடியாரின் கோவணத்தை மற்றுமொரு தட்டிலும் வைத்தார். ஆனாலும் அடியாரின் ஆடை இருந்த தராசுத் தட்டு கீழே இறங்கியது.

Also Read: மணமேடை ஏறிய மகள்.. கூந்தலைத் தானமாகக் கேட்ட சிவனடியார்! - மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை!

அமர்நீதியார் தன் கைவசமிருந்த பொன், பொருள் செல்வங்களையெல்லாம் அதில் வைத்தும் தராசு சமனாகவில்லை. தன் மனைவி மக்களையும் அந்தத் தட்டில் ஏற்றினார். அப்போதும் அது சமனாகவில்லை. அப்போது அமர்நீதியாருக்குப் பெரும் ஞானம் தோன்றியது. வந்திருப்பவர் சாதாரணமானவர் இல்லை என்றும் அவரே சகலமும் என்பதை உணர்ந்தார். மேலும் இந்த உலகில் எதுவும் சிவனடியாரின் கால் தூசிக்குப் பெறுமானமானதல்ல என்பதையும் உணர்ந்தார்.

சிவனுக்கு சமம் அவன் திருநீறே என்பதைக் குறிக்கும்வகையில், “இதுநாள் வரையிலும் திருவெண்ணீற்றில் உண்மையான பக்தியுடன் இதுவரை பிழையின்றி நாம் வாழ்ந்தோம் என்றால் இந்தத் தட்டு சமமாகட்டும்” என்று சொல்லித் தானே அந்தத் தட்டில் ஏறி நின்றார் அமர்நீதியார். அப்போது தராசு சமமானது. இந்த அற்புதத்தைக் கண்டுகொண்டிருந்த மக்களும் சிலிர்த்தனர். அப்போது அடியார் உருவம் மாறி சிவபெருமான் உமையம்மையோடு திருக்காட்சி அருளினார்.

அமர்நீதியார்

அப்படி சிவனடியார்களும் சிவனும் ஒருவரே என்னும் பேருண்மையை உலகுக்கு உணர்த்தும் பெருவாழ்வு வாழ்ந்த அமர்நீதியார் சிவனடி சேர்ந்த தினம் ஆனிப் பூரம். இந்த நாளில் அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளில் அனைவரும் சிவபெருமானை நினைத்து வணங்கி திருத்தொண்டர் புராணத்தில் ஒரு சில பாடல்களையாவது பாராயணம் செய்ய நம் துன்பங்கள் நீங்கி நன்மைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.

இன்று பூரநட்சத்திரம் காலை 11.56 மணிக்குத் தொடங்கி நாளை காலை 10.33 வரை நீடிக்கிறது. எனவே இந்த நாளில் சிவ விஷ்ணு வழிபாடு செய்வது மிகவும் நன்மையைப் பயக்கும்.



source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-aani-pooram-day-to-worship-andal-and-amar-neethiyar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக