புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகேயிருக்கும் வெள்ளாளர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதிகா. இவ,ர் தனது 5 வயது மகளுடன் மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்குக் கையில் பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்து எஸ்.பி நிஷா பார்த்திபனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், ``ஆவுடையார்கோவில் அருகே வெள்ளாளர் கிராமத்தில், எனது 5 வயது மகளுடன் தனியாக வசித்துவருகிறேன். கணவர் இறந்துவிட்டார். வருமானத்துக்கு வழியில்லை. குடும்பச் சூழல் காரணமாகவும், மகளைக் காப்பாற்றுவதற்காகவும் வேறு வழியின்றி ஆவுடையார்கோவில் மரக்கடை ஒன்றில் வேலை பார்த்துவந்தேன். கணவர் துணையின்றி தனியாக வசித்துவருவதை அறிந்த கடையின் உரிமையாளர், என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவ்வப்போது அவர் எனக்குp பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அங்கு வேலைக்குச் செல்வதையே நிறுத்திவிட்டேன். நீண்டநாள் வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில், அதை மறந்துவிட்டு, மற்றொரு வேலை தேடிச் சென்றேன்.
நான் விலகிச் சென்றாலும், என்னை விடாமல் பின்தொடர்ந்த அந்த மரக்கடை உரிமையாளர், தொடர்ந்து எனக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பதுடன், அவரது பேச்சுக்கு இணங்காவிட்டால் என்னையும், எனது மகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல்விடுக்கிறார்.
அறந்தாங்கி காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தும் இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நானும், என்னுடைய மகளும் பூச்சி மருந்து குடித்து இறப்பதைத் தவிர எந்த வழியும் இல்லை” என்று கண்ணீர்மல்க மனு கொடுத்தார்.
கையில் பூச்சி மருந்து பாட்டிலுடனும், 5 வயது மகளை அழைத்துக்கொண்டும் எஸ்.பி அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்தப் புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/crime/young-woman-who-lost-her-husband-complaint-to-sp-regarding-sexual-harassment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக