மதுரையில் சட்டவிரோதமாக ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி, குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளை மீட்டு, சமூக ஆர்வலர் என்ற பெயரில் மதுரை மாவட்ட நிர்வாகத்தில் செல்வாக்கு பெற்ற காப்பக நிர்வாகியை காவல்துறையினர் தற்போது தேடிவருகின்றனர்.
மதுரை அருகே சேக்கிப்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மனநலம் பாதித்த இளம்பெண், கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் கஷ்டப்பட்டுவந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசாருதீன், நான்கு மாதங்களுக்கு முன்பு மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் சிவக்குமார் நடத்திவரும் `இதயம் ஆதரவற்றோர்’ காப்பகத்தில் சேர்த்திருக்கிறார்.
இந்தநிலையில், ஐஸ்வர்யாவின் ஒரு வயதேயான ஆண் குழந்தைக்குக் கடந்த 13-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக காப்பக நிர்வாகி, சேர்த்துவிட்ட அசாரூதீனுக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்ததாகவும், தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி அதற்கான ஆவணங்கள், புதைக்கப்பட்ட படத்தையும் அசாருதீனுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அனுப்பிய ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதால், தல்லாகுளம் காவல் நிலையத்தில் அசாரூதீன் புகார் செய்தார். உடனே விரைந்து செயல்பட்ட காவல்துறையினருடன், மாவட்ட குழந்தைகள்நல அலுவலர்கள், சமூக நலத்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினார்கள். தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ரசீது எண் போலியானதாக இருந்ததும், அதே எண்ணில் ஏற்கெனவே கடந்த மே மாதம் 75 வயது நிரம்பிய முதியவர் எரிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தத்தனேரி மயான ஊழியர்கள் மற்றும் நரிமேடு நகர்ப்புற மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போலியான ஆவணங்களை உருவாக்கி குழந்தையைப் புதைத்ததுபோல ஆவணங்களை உருவாக்கியது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து போலியான ஆவணங்களைத் தயாரித்ததாக தத்தனேரி மின்மயான சுகாதார ஆய்வாளர், நரிமேடு நகர்ப்புற மருத்துவமனை அலுவலர் தரப்பில் தொண்டு நிறுவனம் மீது புகார்கள் அளிக்கப்பட்டன.
மேலும், தத்தனேரி மயானத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன் விசாரணை நடத்தியபோது, இரு நாள்களுக்கு முன்பு மதுரை இராசாசி மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளங்குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் இந்தக் குழந்தையை அடக்கம் செய்ததாகக் காட்டியிருந்தது தெரியவந்தது.
காப்பகத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் இதேபோல் 2 வயது பெண் குழந்தையைச் சில நாள்களுக்கு முன்பு காப்பக நிர்வாகி சிவக்குமார் தூக்கிச் சென்றதாகவும், அதன் பிறகுக் குழந்தையை திருப்பித் தரவில்லை என்றும் அங்கு தங்கியிருந்த மற்றொரு பெண் கூறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து காப்பகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆண் குழந்தையை இஸ்மாயில்புரத்தில் வசிக்கும் கண்ணன் தம்பதியிடம் 5 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தையை கருப்பாயூரணி சாதிக் தம்பதியிடமும் விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட அந்த காப்பகம் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் அரசுக் காப்ப்கங்களுக்கு மாற்றப்பட்டார்கள். தலைமறைவாகியுள்ள காப்பக நிர்வாகி சிவக்குமாரை காவல்துறை தேடிவருகிறது.
புகாருக்குள்ளாகியிருக்கும் சிவக்குமார், கலெக்டர் அலுவலகம், காவல்துறை அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குடன் இருந்திருக்கிறார். அதனால் இவருக்கு நன்கொடைகள் அதிகம் கிடைத்துள்ளது. ஆனாலும், அனுமதியில்லாமல் காப்பகம் நடத்த சமூகநலத்துறையினர் எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வியை மதுரை மக்கள் எழுப்பியுள்ளார்கள்.
சிவக்குமாரைப் பிடித்து விசாரிக்கும்போதுதான் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள். மதுரையில் சில காலம் இல்லாமல் இருந்த குழந்தைகள் விற்பனை விவகாரம் மக்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/children-sold-with-the-help-of-fake-documents-from-home
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக