கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் சந்தை பகுதியை சேர்ந்தவர் செலின்குமார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலையில் அவரது வீட்டில் காம்பவுண்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா சுமோ கார் மற்றும் பைக் ஆகியவை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த செலின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குழித்துறை தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் பைக் மற்றும் கார் முற்றிலும் எரிந்துவிட்டது. செலின்குமார் இதுகுறித்து அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பரிசோதனை செய்ததில், இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதும், செலின்குமாரின் வீட்டில் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவைத் திசை திருப்பி வைத்ததும் பதிவாகியுள்ளது.
பின்னர் நேற்று அதிகாலை 2.40 மணி அளவில் கார் மற்றும் பைக் மீது பெட்ரோல் உற்றி தீ வைத்து எரித்துள்ளது தெரியவந்தது. எஸ்.எஸ்.ஐ செலின் குமார் வீட்டில் மர்ம நபர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். அவரது வீட்டில் வளர்த்து வந்த நாயை கடந்த மே 28-ம் தேதி நள்ளிரவு சிக்கன் பீசில் விஷம் வைத்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகுதான் சி.சி.டி.வி கேமரா வைத்துள்ளார்.
அந்த சி.சி.டி.வி கேமராவை திருப்பி வைத்துவிட்டு காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தனக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் இல்லை என்றும், வழக்கு விசாரணை சம்பந்தமாக பாதிக்கப்பட்ட குற்றவாளிகள் யாராவது இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என எஸ்.எஸ்.ஐ தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து அருமனை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ-யின் வீட்டுக்குச் சென்று தீ எரிந்த கார் மற்றும் பைக்கை எஸ்.பி பத்ரி நாராயணன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், "கார் எரிப்பு வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே விசாரணை விரைவாக நடைபெற்று வருகிறது" என்றார்.
source https://www.vikatan.com/news/crime/mysterious-persons-burnt-the-car-and-bike-of-kaliyakkavilai-ssi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக