பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது யூரோ கோப்பை 2020. நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளில் டென்மார்க்கும், இங்கிலாந்தும் வெல்ல அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் உறுதியாகிவிட்டன.
ஜூலை 6-ம் தேதி நள்ளிரவில் நடைபெற இருக்கும் முதல் அரையிறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோத, ஜூலை 7-ம் தேதி நள்ளிரவு நடைபெற இருக்கும் போட்டியில் இங்கிலாந்து - டென்மார்க் அணிகள் மோத இருக்கின்றன. இந்த இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற இருக்கின்றன.
பெனால்ட்டி ஷூட் அவுட் மூலம் சுவிட்சர்லாந்தை 3-1 என வென்று அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது ஸ்பெயின். பெல்ஜியத்தை 2-1 என வென்று இத்தாலி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
யூரோ கோப்பையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இத்தாலியும் - ஸ்பெயினும் நேருக்கு நேர் மோத உள்ளன. 2008-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பெனால்ட்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என வென்ற ஸ்பெயின், 2012 யூரோ கோப்பையில் இரண்டு முறை இத்தாலியுடன் மோதியது. லீக் போட்டியில் 1-1 என இத்தாலியுடன் டிரா செய்த ஸ்பெயின், இறுதிப்போட்டியில் மீண்டும் இத்தாலியுடன் மோதியது. இதில் ஸ்பெயின் 4-0 என வென்று யூரோ கோப்பையைக் கைப்பற்றியது. ஆனால் 2016 யூரோ கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் இத்தாலி, ஸ்பெயினை 2-0 என வென்று பதிலடி கொடுத்தது. இப்போது ஐந்தாவது முறையாக 2020 யூரோவில் மோத இருக்கும் ஸ்பெயின் - இத்தாலி அணிகளில் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்கிற பரபர சூழல் எழுந்திருக்கிறது.
ஜூலை 7-ம் தேதி நடைபெற இருக்கும் மற்றொரு அரையிறுதிப்போட்டியில் இந்தமுறை நிச்சயம் கோப்பை வெல்வோம் என்கிற நம்பிக்கையில் இருக்கும் இங்கிலாந்து, டென்மார்க்கை சந்திக்கிறது.
நேற்று நடைபெற்ற உக்ரேனுக்கு எதிரானப் போட்டியில் இங்கிலாந்து 4-0 என பெருவெற்றி பெற்றது. இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து இங்கிலாந்தின் ஆதிக்கத்தை தொடங்கிவைத்தார். ஹேரி மாகுவேர் 46 வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடிக்க, மீண்டும் கேப்டன் ஹேரி கேன் 50வது நிமிடத்தின் தனது இரண்டாவது கோலையும், இங்கிலாந்துக்கான மூன்றாவது கோலையும் அடித்தார். ஹெண்டர்சன் 63வது நிமிடத்தில் நான்காவது கோலை அடிக்க இங்கிலாந்து எந்த போட்டியும் இன்றி எளிதாக 4-0 என உக்ரேனை ஊதித்தள்ளியது.
இதற்கு முன்பாக நடைபெற்ற இன்னொரு காலிறுதிப்போட்டியில் டென்மார்க், செக் குடியரசுவுடன் மோதியது. இதில் டென்மார்க்கின் தாமஸ் டெலானி ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, காஸ்பர் டோல்பெர்க் 42வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து டென்மார்க்கை 2-0 என முன்னிலைப் பெற வைத்தார். அடிவாங்கிய செக் குடியரசு 49-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. செக்கின் பேட்ரிக் ஷிக் முதல் கோல் அடித்தார். ஆனால், அதன்பிறகு செக் வீரர்களின் கோல் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காததால் டென்மார்க் 2-1 என வென்றது.
லண்டன் வெம்ப்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, டென்மார்க் என இந்த நான்கு அணிகளில் மோதப் போகும் இரண்டு அணிகள் எது… உங்கள் ஆதரவு யாருக்கு என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்!
source https://sports.vikatan.com/football/england-beats-ukraine-and-qualifies-for-euro-2020-semi-finals
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக