Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

அங்கன்வாடி நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்?! -பழங்குடி மாணவர்களின் தொடக்கக் கல்வியை உறுதி செய்யுமா அரசு?

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வேளப்பாக்கம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடும்பங்கள் வசித்துவருகின்றன. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியில் வசித்துவருகிறார்கள். பழங்குடியினக் குழந்தைகள் அங்கிருந்து பள்ளிக்கூடத்துக்குச் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக இருந்ததால், மாவட்ட நிர்வாகத்திடம் அந்த மக்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே அங்கன்வாடி அமைத்துத் தருமாறு ஊராட்சி மன்றத்தின் மூலம் கோரிக்கை வைத்திருந்தனர். பழங்குடியின மக்களின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த மாவட்ட நிர்வாகம், மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித் திட்டத்துடன், சமூகநலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையுடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் மீஞ்சூர், சோழவரம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 45 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்ட தீர்மானித்தது.

அதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி ஊராக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 5,00,000 ரூபாய், மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் 2,00,000 ரூபாய் மற்றும் அந்தந்த ஊராட்சி அல்லது ஒன்றிய பொது நிதியிலிருந்து 3,19,000 ரூபாய் என தலா ஒவ்வோர் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கும் மொத்தம் 10,19,000 ரூபாய் நிதி மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டு 2020-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பழங்குடியின குழந்தைகளுக்காக அங்கன்வாடி அமைக்க ஒதுக்கப்பட்ட இடம்

அந்த வகையில் அனுப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வேளப்பாக்கம் பகுதியில் வசித்துவரும் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குழந்தைகளின் தொடக்கக் கல்வியை உறுதிசெய்யும் வகையில், அவர்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே அங்கன்வாடி மையம் அமைக்க மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் நிலம் ஒதுக்கப்பட்டு, நிதியும் வழங்கப்பட்டது. 13.04.2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் 03.12.2020 அன்று பணிகள் தொடங்கப்பட்டு 31.01.2021 தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மீஞ்சூர், அனுப்பம்பட்டு ஊராட்சியில் பழங்குடியினக் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அமைக்க நிதி மற்றும் இடம் ஒதுக்கப்பட்டு, கட்டட பணிகளுக்கான பொருள்களும் வந்துவிட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தகரக் கொட்டகை அமைத்து ஆக்கிரமித்திருப்பதாகவும், அது குறித்து பொன்னேரி தாசில்தார் மணிகண்டனிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அனுப்பம்பட்டு ஊராட்சி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கின்றனர்.

இது குறித்து விசாரிக்க அனுப்பம்பட்டு கிராமத்துக்குச் சென்றிருந்தோம். வேயப்பட்ட குடிசை வீடுகளுக்குள் கொரோனா ஊரடங்குகளால் வாழ்வாதாரம் இழந்து, ஒடுங்கி படுத்துக்கிடந்தவர்களை வெளியில் அழைத்து பேச்சுக் கொடுத்தோம். "இங்கே நாங்க ஒரு 200 பேரு வாழ்ந்துக்கிட்டு இருக்குறோம். கட்டை வெட்டிப் போடுறது, கட்டட வேலைக்குப் போகுறதுனு கிடைக்குற கூலி வேலைகளை செஞ்சுக்கிட்டு இருக்குறோம். ஒரு நாள் முழுக்க உழைச்சாலும் 300 ரூபா கிடைக்குறதே அதிகம். வருமானம் ஒண்ணும் பெருசா இல்லை. ஆனா, இந்த கொரோனா காலத்துல அதுவும் இல்லாம போயிடுச்சு. எங்கே போனாலும் வேலை கொடுக்க அச்சப்படுறாங்க. ரேஷன் அரிசியைச் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ்ந்துட்டு இருக்குறோம். எங்களுக்கு இங்கே இடம் கொடுத்து உதவின அரசாங்கம், எங்க புள்ளைங்க படிக்க இங்கேயே அங்கன்வாடி மையமும் அமைக்க இடமும் நிதியும் ஒதுக்கி உதவிச்சு.

பழங்குடியின மக்கள்

ஆனா, இங்கே அங்கன்வாடி அமைக்கக் கூடாதுனு ஜெய் சங்கர்னு ஒருத்தர் எங்கள மிரட்டிட்டு, அடாவடியா ராத்திரியோட ராத்திரியா தகர கொட்டா போட்டுட்டுப் போயிட்டாரு. அதை எடுக்கச் சொன்னா அவரோட ஆளுங்க எங்களை மிரட்டுறாங்க. புள்ளைங்க பள்ளிக்கூடம் போகாம வீட்டுலயேதான் கிடக்குங்க. இது சம்பந்தமா ஊராட்சித் தலைவரும், நாங்களும் சேர்ந்து பொன்னேரி தாசில்தார் மணிகண்டன்கிட்ட புகார் மனு கொடுத்தோம். போன ஜனவரி மாசமே முடிய வேண்டிய வேலை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. பி.டி.ஓ., தாசில்தார், ஆர்.டி.ஓ-னு எல்லார்கிட்டயும் மனு கொடுத்துட்டோம். ஆனா இதுவரைக்கும் யாரும் எந்த நடவடிக்கையுமே எடுக்கலை. இன்னும் கொஞ்ச நாள்ல பள்ளிக்கூடம் தொறந்துடுவாங்க. ஆனா, அதிகாரிங்க இங்கே அங்கன்வாடி கட்டடதுக்கு இன்னும் ஒரு செங்கல்கூட எடுத்துவெக்கலை" என்றார் ஒருவர் விரக்தியுடன்.

தொடர்ந்து இது தொடர்பாக அனுப்பம்பட்டு ஊராட்சித் தலைவி கிருஷ்ணவேணியிடம் பேசினோம். ``பழங்குடியினக் குழந்தைகளோட தொடக்கக் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாதுனு அவங்க இடத்துலயே அவங்களுக்குத் தனியா அங்கன்வாடி மையம் அமைச்சுக் கொடுக்க ஊராட்சி மன்றத்துல தீர்மானம் நிறைவேற்றினோம். அதேபோல, முன்னாள் மாவட்ட ஆட்சியரும் அங்கன்வாடி மையம் அமைக்க, போன வருஷம் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிச்சாரு. ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக நிதியோட, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமா கெடச்ச நிதியையும் சேர்த்து மொத்தம் 10,19,000 ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனா, கொரோனாவைக் காரணம் காட்டி அதிகாரிங்க போன வருஷமே ஆரம்பிக்காம தள்ளிப் போட்டுட்டாங்க. நடுவுல பலமுறை நாங்க கிராம அலுவலர் கிட்டயும், தாசில்தார்கிட்டயும் இது தொடர்பா முறையிட்டோம். அதுக்குப் பிறகு, சமீபத்துலதான் கட்டடப் பணிகளை தொடங்குறதுக்கு பொருள்கள் வந்து சேர்ந்துச்சு.

அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி கிருஷ்ணவேணி

ஆனா, கட்டுமானப் பணி தொடங்கவிருந்த நேரத்துல பொன்னேரி வேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்றவர், அந்த அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்றாரு. உடனே நாங்க இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளருக்குத் தகவல் தெரிவிச்சோம். அவங்களும் ஜெய்சங்கர்கிட்ட இது பழங்குடியின மக்கள் குழந்தைகளுக்காக அங்கன்வாடி அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம்னு எச்சரிச்சாங்க. ஆனா, அன்னைக்கு ராத்திரியே ஜெய்சங்கர் அவரோட ஆளுங்களோட வந்து எங்களை மிரட்டிட்டு தகர கொட்டகை போட்டுட்டுப் போயிட்டாரு. நாங்க, அடுத்த நாளே இது தொடர்பா பொன்னேரி தாசில்தார் மணிகண்டன்கிட்ட புகார் தெரிவிச்சோம்.

உடனடியா ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தாசில்தாரும் உறுதியா சொன்னாரு. அதனால, நாங்களும் நம்பிக்கையோட திரும்பினோம். ஆனா, இப்ப வரைக்கும் தாசில்தார் அந்த இடத்துக்கு வந்துகூட பார்க்கலை. பலமுறை இது தொடர்பா கிராம மக்கள் அவர்கிட்ட தொலைபேசி மூலமாகவும் கோரிக்கை வெச்சிருக்காங்க. ஆனா, அவரு எங்க கோரிக்கைக்கு செவி சாய்க்கவே இல்லை. அந்த ஆக்கிரமிப்பை அகற்றாததால அங்கன்வாடி கட்டுறதுக்கு பணி ஆணையுடன் அனுமதி பெற்றும், நிதி ஒதுக்கியும் இதுவரையிலும் பணிகள் தொடங்கப்படவில்லை. தாசில்தார்கிட்ட சொல்லிச் சொல்லி வெறுத்துப் போயிட்டோம். அதனால, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு நிலைமையை விளக்கிக் கூறி கோரிக்கை மனு கொடுத்திருக்கோம். அந்த இடத்துல ஆக்கிரமிப்பை அகற்றி கொடுத்துட்டா உடனடியா கட்டுமானப் பணிகளை தொடங்கிடுவோம்" என்றார்.

அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை தகரக் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகக் கூறப்படும் ஜெய்சங்கரிடம் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச முயன்றோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு தொடர்பாக விளக்கம் தரும்பட்சத்தில், அதை வெளியிடுவது குறித்து பரிசீலிப்போம்.

அதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற கிராம மக்களின் குற்றச்சாட்டசி பொன்னேரி தாசில்தார் மணிகண்டனிடம் முன்வைத்தோம்.

அங்கன்வாடி நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை

"கொரோனா பரவல் காரணமாகக் கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மக்கள் புகார் அளித்திருக்கின்றனர். அது தொடர்பாக வருவாய் ஆய்வாளருக்கு சர்வே எண் படி அந்த நிலத்தை அளந்து புகார் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பது தெரிந்துவிடும். எனவே, இன்னும் ஒரு வாரத்தில் அங்கன்வாடி கட்டுமானப் பணிகள் நிச்சயம் தொடங்கிவிடும்" என்று தாசில்தார் மணிகண்டன் நம்மிடம் உறுதியாகக் கூறினார்.

Also Read: தி.மலை: நீர்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு! - அகற்றச் சென்ற அரசு அதிகாரிகள்மீது தாக்குதல்



source https://www.vikatan.com/news/tamilnadu/encroachment-of-land-which-was-allotted-for-setting-up-anganwadi-for-tribal-children

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக