Ad

சனி, 3 ஜூலை, 2021

கள்ளக்குறிச்சி: `வழிப்பறி கொள்ளையில் சிக்கிய எஸ்.ஐ மகன்!’ - கைது செய்து நடவடிக்கை எடுத்த எஸ்.பி

சின்னசேலத்தை அடுத்த நமச்சிவாயபுரத்தில் இருக்கும் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி பெட்ரோல் போடுவதற்காக இரண்டு இளைஞர்கள் வந்தனர். அப்போது பணியில் இருந்த பிரகாஷ்ராஜ் என்பவர் பெட்ரோல் போடும் இயந்திரத்தின் பக்கம் திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் பிரகாஷ்ராஜின் தலையில் தாக்கினார்கள்.

அதனை சற்றும் எதிர்பாராத பிரகாஷ்ராஜ் அங்கேயே மயங்கி சரிந்தார். அதனை பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர்கள் அவரது பணப்பையில் இருந்த 72,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அதையடுத்து பிரகாஷ்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். எஸ்.பி ஜியாவுல் ஹக் அவர்களின் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலைமையிலான தனிப்படை ஒன்றும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் நேற்றுமுந்தினம் காலை 11 மணியளவில் கனியாமூர் சந்திப்பில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தனித்தனி வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பெட்ரோல் பங்க் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது இவர்கள்தான் என்று தெரியவந்தது. உடனே அலர்ட்டான காவல்துறையினர், அவர்களிடம் மேலும் விசாரணையை தொடர்ந்தனர்.

எஸ்.பி. ஜியாவுல் ஹக்

அப்போது அவர்கள் மூவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முகமது ரஷீத்(21), தியாகதுருகத்தை அடுத்த பிரிதிவிமங்கலத்தை சேர்ந்த பிரவின்குமார்(20), கள்ளக்குறிச்சியை சேர்ந்த நித்தீஷ்குமார்(19) என்பதும் தெரியவந்தது. அவர்கள் மூவரும் பட்டதாரி வாலிபர்கள் என்பதும், அதில் ஒருவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் என்பதும் தெரிய வந்தது.

அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி கள்ளக்குறிச்சியில் தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் செயின் பறிப்பு சம்பவத்திலும் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.

Also Read: `நள்ளிரவில் மாணவிக்கு மெசேஜ்... சிக்கிய பேராசிரியர்!'- ஆளுநர் எடுத்த அதிரடி நடவடிக்கை

பிடிபட்ட மூவரும் ’செலவுக்கு பணமில்லை. அதனால்தான் சம்பவத்தில் இறங்கினோம்’ என்று கூலாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். ``சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம். தவறு செய்தவர்கள் தண்டனையை பெற வேண்டும்’ என்று சிறப்பு உதவி ஆய்வாளரின் மகனை கைது செய்ய உத்தரவிட்ட எஸ்.பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/crime/police-officers-son-was-arrested-for-robbery-in-kallakurichi-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக