Ad

சனி, 3 ஜூலை, 2021

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா... யெச்சூரி, டி.ராஜா வாழ்த்தியது தவறா?

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுமூகமான உறவு நிலவியது. பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றுவந்தார். அங்கு நடைபெற்ற உச்சிமாநாட்டில் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்றனர். அதையடுத்து, 2019-ம் ஆண்டு ஷி ஜின்பிங் மகாபலிபுரம் வந்துசென்றார். அதன் பிறகு, இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அது, இந்திய - சீன உறவில் விரிசலை ஏற்படுத்தியது. 'டிக்டாக்' செயலிக்குத் தடை உள்பட சீனாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.

மோடியும் ஷி ஜின்பிங்கும்

இத்தகைய சூழலில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிகழ்ச்சி ஜூலை 1-ம் தேதி சீனாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் சீன அதிபருமான ஷி ஜின்பிங் உரையாற்றினார். அப்போது, “தேசிய இறையாண்மையையும் நிலத்தையும் பாதுகாக்க சீன மக்கள் கொண்டுள்ள உறுதியையும் அசாத்திய திறனையும் யாரும் குறைவாக மதிப்பிடக்கூடாது. எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் எங்களை ஒடுக்கவோ, அடக்கவோ சீன மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி யாராவது ஒடுக்கவோ அடக்கவோ முயன்றால் சீனப் பெருஞ்சுவற்றில் அவர்களை அடித்துநொறுக்குவோம்” என்றார் ஷி ஜின்பிங்.

உற்சாகத்துடன் நடைபெற்ற அந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்கள், பள்ளிக் குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு இந்தியாவின் முக்கியக் கட்சிகளான பா.ஜ.க-வோ, காங்கிரஸ் கட்சியோ வாழ்த்துச் செய்தி அனுப்பவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்களால் அரசியல் ரீதியாக இரு நாடுகளிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் அதற்கு காரணம். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு பா.ஜ.க வாழ்த்துச் செய்தி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

கல்வான் பள்ளத்தாக்கு

பா.ஜ.க-வும் காங்கிரஸ் கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்துச்செய்திகளை அனுப்பாத நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வாழ்த்துச்செய்திகளை அனுப்பியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் ஆசியாவின் இரண்டு பழைய நாகரிகங்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரு நாடுகளும் அமைதியான உறவைப் பேணிய வரலாற்றை கொண்டுள்ளன என்றும் குறிப்பட்டுள்ளனர். எல்லைப் பிரச்னைகைளைக் குறிப்பிட்ட அவர், அமைதியான முறையில் இரு நாடுகளும் இந்தப் பிரச்னையைப் பேசித்தீர்க்க வேண்டும்” என்றார்.

பா.ஜ.க-வும், காங்கிரஸ் கட்சியும் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாழ்த்துச்செய்தி அனுப்பியது சரியா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.

“சீனாவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசமாகப் பார்க்கிறோம். இரு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இந்தியாவைப் போலவே அதுவும் உலகில் அதிமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. நம்மைவிட 10 கோடி பேர் அங்கு அதிகம். இரு நாடுகளும் இரண்டு ஆண்டுகால இடைவெளியில், விடுதலை பெற்றன. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து இந்தியா 1947-ம் ஆண்டு விடுதலை பெற்றது. சீனாவைப் பொறுத்தளவில், 1949-ம் ஆண்டிலிருந்து விடுதலை பெற்ற நாடுகளாக இயங்க ஆரம்பித்தன. ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்றோம் என்றால், சீனாவில் பழைய மன்னர் ஆட்சி முறையின் மிச்சசொச்சங்களாக பல பிரச்னைகளும் குழப்பங்களும் நீடித்தன. அவற்றை துடைத்தெறிந்து கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீனா விடுதலை பெற்றது.

அருணன்

இரண்டு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் புதிய பாதையில் அடியெடுத்து வைத்தன. சீனாவின் வளர்ச்சியை உலகமே அறியும். பொருளாதார வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி என அனைத்திலும் அமெரிக்காவுடன் போட்டியிடக்கூடிய அளவுக்கு சீனா வளர்ந்தது. அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு அது மிகப்பெரிய அதிர்ச்சி.

ஆகவே, அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டி ஏற்படத் தொடங்கியது. அதைப் பனிப்போர் என்று சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தன. இத்தகைய வளர்ச்சியை சீனா எப்படி அடைந்தது என்பதைப் பார்ப்பது முக்கியம். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் போட்டியாக ஆசியாவில் ஒரு நாடு எழுந்திருக்கிறது என்பதை இந்தியர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு பா.ஜ.க-வோ,காங்கிரஸோ வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள் வாழ்த்து தெரிவித்தோம் .

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் எங்களுக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனைக்கும் இந்தியாவில் இருக்கும் இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிந்தனைக்கும் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் உண்டு. அவர்களைப் பொறுத்தவரையில், சீன நிலைமைக்கு ஏற்ப மார்க்சியத்தை அமல்படுத்துகிறோம் என்று சொல்கிறார்கள். அதைத்தான் 'மண்ணுக்கேற்ற மார்க்சியம்' என்று சொல்கிறோம். இந்தியாவுக்கு அமெரிக்கா எப்படியெல்லாம் இடைஞ்சல்கள் கொடுத்தது, அப்போது சோவியத் யூனியன் எந்தளவுக்கு இந்தியாவுக்கு ஆதரவாகவும் உதவிகரமாக இருந்தது என்பதை இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கவேண்டும். சீனாவும் இல்லையென்றால், நமது பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வைத்ததுதான் நாட்டாமையாக இருந்திருக்கும்.

யெச்சூரி

அண்டைநாடான சீனாவுடன் நமக்கு எல்லைப் பிரச்னை இருக்கிறது. 1962-ல் ராணுவ மோதல் ஏற்பட்டது. அந்த வகையில், சீனாவின் நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிலிருந்து நாம் மீண்டுவர வேண்டியிருக்கிறது. அண்டை நாட்டுடன் நட்புடன் இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, பூகோள ரீதியாக அத்தியாவசியம். எனவே நட்பு பாராட்ட வேண்டும் என்ற அடிப்படையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்தோம்.

Also Read: `கொரோனா உயிரிழப்புகளுக்கு அரசு இழப்பீடு... எந்த அளவுக்குச் சாத்தியம்?'

நம்முடைய உரிமைகளை விட்டுத்தர வேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் சொன்னதில்லை, சொல்லவும் மாட்டோம். நம் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டே, நம் தற்காப்பை உறுதிப்படுத்திக்கொண்டே, அமைதிக்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். நம் பக்கம் இருக்கக்கூடிய நியாயத்தின் அடிப்படையில், நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை.

மோடியும் ஷி ஜின்பிங்

சீனா நம் எதிரி நாடு என்று சிலர் பேசுகிறார்கள். குறிப்பாக, பா.ஜ.க-வினர் இதை தீவிரமாக பேசுவார்கள். ஆனால், மோடி காலத்தில்தான் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்துள்ளது. அந்த நாட்டுடனான வர்த்தகம் நமக்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்தியாவுக்கு முக்கியமாகத் தேவைப்படும் கச்சா பொருள்கள் சீனாவிலிருந்துதான் வர வேண்டியிருக்கிறது. இந்தியாவிலிருந்து சீனாவுக்குத்தான் மாட்டிறைச்சி அதிகமாக ஏற்றுமதியாகிறது. குஜராத்தில் உள்ள வல்லபாய் சிலை சீனாவிலிருந்துதான் உருவாக்கப்பட்டு வந்தது.

எனவே, அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்துவதும், முரண்பாடுகளைப் பேசித் தீர்ப்பதும்தான் தேச நலனுக்கு உகந்தது. அந்த அடிப்படையில்தானே சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மகாபலிபுரத்துக்கும் குஜராத்துக்கும் பிரதமர் மோடி அழைத்துவந்தார்?” என்று தங்கள் தரப்பு விளக்கத்தை பல கேள்விகளுடன் முன்வைத்தார் பேராசிரியர் அருணன்.



source https://www.vikatan.com/news/politics/why-did-indian-communists-greeted-china-communist-party-for-its-centennial-celebration

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக