மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தான் பதவியில் இருந்தபோது போலீஸ் அதிகாரிகளிடம் மும்பையிலுள்ள பீர் பார் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் மாமூல் வசூலித்துக் கொடுக்கச் சொல்லி நிர்பந்தம் செய்ததாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டால் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ-யும் அமலாக்கப் பிரிவுவும் தனித்தனியாக விசாரித்துவருகின்றன. அமலாக்கப் பிரிவு அனில் தேஷ்முக் மீதான பண மோசடி குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவருகிறது. அனில் தேஷ்முக்கை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு தொடர்ந்து சம்மன் அனுப்பிக்கொண்டிருக்கிறது.
ஆனால், உடல்நலம் மற்றும் கொரோனாவைக் காரணம் காட்டி நேரில் ஆஜராவதைத் தவிர்த்துவருகிறார். இந்தநிலையில், புதிய திருப்பமாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அனில் தேஷ்முக்-குக்குச் சொந்தமான ஒர்லியிலுள்ள வீடு மற்றும் உரன் அருகிலுள்ள நிலத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை அனில் தேஷ்முக் 2004-ம் ஆண்டு கிராமவாசிகளிடம் ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்கியதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. அவற்றின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு ரூ.300 கோடி என்று அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
Also Read: 'மகாராஷ்டிரா: 100 கோடி மாமூல் விவகாரம்! - மாஜி அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறை வழக்கு'
ஆனால் 2004-ம் ஆண்டு ரூ.4.2 கோடி கொடுத்து அவற்றை வாங்கியிருந்தார். அனில் தேஷ்முக் மட்டுமல்லாமல் மற்றொரு தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கட்சேயிடமும் அமலாக்கப் பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே கட்சே மருமகனை அமலாக்கப் பிரிவு கைதுசெய்திருக்கிறது. ஏக்நாத் கட்சேவையும் அழைத்து விசாரித்தது. கட்சே பாஜக-விலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத் தாவிய பிறகு அவருக்கு அமலாக்கப் பிரிவு நெருக்கடி கொடுத்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
source https://www.vikatan.com/news/politics/enforcement-division-confiscates-rs-300-crore-assets-of-former-home-minister-anil-deshmukh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக