திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராகேஷ் குமார்(26). இவர் அதே பகுதியில் உள்ள செட்டிகுளத்தில் மீன்பிடி குத்தகை எடுத்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் குளக்கரையில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராகேஷ் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளது. அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராகேஷை சரமாரியாக சுட்டார். இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. மார்பு, வயிற்றுப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராகேஷை உடன் இருந்த நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ராகேஷின் வலது விலா எலும்பு, வயிற்றுப்பகுதி என மொத்தம் ஆறு இடங்களில் குண்டுகள் துளைத்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி விஜயகுமாரி மற்றும் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கொலைக்கான காரணம் குறித்தும், தப்பிய குற்றவாளிகள் பிடிக்கவும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மோப்ப நாய் ரூபி மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
செட்டிகுளத்தில் மீன் குத்தகை எடுப்பதில் இருந்த முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, ``பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் தான் நாட்டு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதியாகக் கூறமுடியும். குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு முதலே சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணைத் தொடங்கிவிட்டோம். பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என யூகித்தாலும் குற்றவாளிகளை பிடித்தப் பிறகே கொலைக் காரணம் குறித்து உறுதியாகக் கூறமுடியும்'' என்றார்.
source https://www.vikatan.com/news/crime/youth-shot-dead-by-gunman-in-dindugul
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக