அதிகாலையில் எக்மோர் ரயில் நிலையத்தில் கண்ணீர் வழிய நின்றுகொண்டிருந்த பாரதியை நான் பார்த்தது 2008-ம் ஆண்டு. கைப்பை, அதில் இருந்த பணம் மற்றும் அவருடைய ஏடிஎம் கார்டு என அனைத்தையும் நொடியில் தொலைத்துவிட்டு `காதல்கோட்டை' பட கமலியைப் போல கலங்கிப் போயிருந்தார். யாரிடம் உதவி கேட்கலாம் என்பதை அறியாது மலங்க மலங்க முழித்துக்கொண்டிருந்த பாரதியின் முகம், இக்கட்டுரையை எழுதும் இந்த நொடி வரையிலும் அழியாச் சித்திரமாக என் மனதில் பதிந்திருக்கிறது. நல்லவேளையாக அவரது செல்போன் மட்டும் அவரிடம் இருந்தது. எக்மோரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி, கைச்செலவுக்கு சிறிதளவு பணமும் கொடுத்து அனுப்பி வைத்தோம். `என்ன செய்யனு தெரியாம நின்னேன். நீங்கள் எல்லோரும் செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி. இதை எப்போதுமே மறக்க மாட்டேன்’ எனக் கண்ணீர் மல்க சொல்லிக் கிளம்பிய பாரதியை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
2019-ம் ஆண்டு. பெங்களூர் அதிகாலை.
சென்னையில் இருந்து வரும் தோழி ஒருத்தியை வரவேற்க சில்க் போர்டு சிக்னலில் காத்திருந்தபோது உமாவை சந்திக்க நேர்ந்தது. பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சேலம் - பெங்களூர் பஸ் பயணத்தில் தனது பையை தொலைத்துவிட்டிருந்தார் என்பதை அறிய முடிந்தது. ஆனால், பாரதியைப் போல உமா கலங்கவில்லை. வங்கியின் கஸ்டமர் கேரை அழைத்து தனது டெபிட் கார்டை பிளாக் செய்து விட்டதாகச் சொன்னவரிடம், `யுபிஐ ஆப்கள் இருப்பதால் பிரச்னை இல்லையில? இல்லையென்றால் இந்நேரம் டெபிட் கார்டு தொலைந்து பதற்றப்பட்டு இருக்கணும் இல்லையா?’ என்றதும் `ஆமாம். ஆனால் டெபிட் கார்டு இல்லை என்றாலும் இப்போதெல்லாம் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் இல்ல. அதனால் பிரச்னை இல்லை’ என்றார்.
11 ஆண்டுக்கால இடைவெளியில் தகவல் தொழில் நுட்பத்துறையில் நடந்த மாற்றங்களும் புரட்சிகளும் ஏராளம் என்பதை நாம் அறிவோம். வங்கிக்குப் போய் வரிசையில் காத்திருந்து பணப் பரிவர்த்தனைகள் செய்த காலங்கள் வழக்கொழிந்து, விரல்நுனியில் லட்சங்களை பரிவர்த்தனை செய்யும் காலத்தில் வாழ்கிறோம். டெபிட் கார்டு மற்றும் அதன் பின் நம்பரை சுமக்காமல் பணப் பரிவர்த்தனைகளை செய்வதை யுபிஐ சாத்தியப்படுத்தியது என்றால், அதேபோல் ஏடிஎம் கார்டு இல்லாமல் உங்களால் உங்களின் வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் மூலமாகப் பணம் எடுக்க முடியுமென்பதை இன்றைய தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியிருப்பதை அறிவீர்களா?
ஆம். சில வருடங்களாக கார்டு இல்லாமல் ஏடிஎம் மெஷினில் இருந்து பணம் எடுக்கும் வசதி இங்கே புழக்கத்தில் உள்ளது. ஏடிஎம் மெஷினில் இருந்து டெபிட் கார்டு மூலமே பணம் எடுக்க முடியும் என்ற நிலை, 2014-ம் ஆண்டு மாறியது. இப்போது 6 முன்னணி வங்கிகள் ஏடிஎம் மெஷினில் இருந்து வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை அளித்திருக்கின்றன.
எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, கோட்டக் மஹிந்திரா, பேங்க் ஆஃப் பரோடா, ஆர்.பி.எல் மற்றும் ஆக்சிஸ் ஆகிய வங்கிகள் இந்த வசதியை தமது வாடிக்கையாளருக்கு அளித்திருக்கின்றன. இதில் எஸ்.பி.ஐ வங்கி மேலும் ஒரு படி போய் தமது வாடிக்கையாளர்களுக்காக `யோனோ' என்ற ஒரு பிரத்யேகமான ஆப்பை உருவாக்கி இருக்கிறது. இதிலிருக்கும் `கெட் கேஷ்' என்பதில் ஏடிஎம்மில் எடுக்க வேண்டிய பணம் குறித்த விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் டிரான்சாக்ஷன் எண் எனப் பரிவர்த்தனைக்கான எண் ஒன்று உருவாகி, வாடிக்கையாளரின் மொபைலுக்கு வரும். அதன் பிறகு, வாடிக்கையாளர் ஏடிஎம்-முக்குச் சென்று, `கார்ட்லெஸ் டிரான்ஸ்லேஷன்' என்பதைத் தேர்வு செய்து தேவையான விவரங்களைக் கொடுத்து ஏடிஎம்மில் லாகின் செய்ய வேண்டும். பின்பு ஏ.டி.எம் பின் (Debit card pin) மற்றும் மேலே சொன்ன டிரான்சாக்ஷன் எண்ணைப் பயன்படுத்தி பணத்தை ஏடிஎம் மெஷினில் இருந்து எடுக்கலாம்.
`யோனோ' ஆப் மூலம் பணம் எடுப்பதற்காக உருவான பாஸ்வேர்டின் அதிகபட்ச ஆயுள், நான்கு மணி நேரம். அதற்குள் அதைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதே போன்று மேற்சொன்ன பிற 5 வங்கிகளும் தங்களது வாடிக்கையாளருக்கு டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதியை அளித்திருக்கின்றன.
Also Read: இலவச சிபில் அறிக்கை முதல் நல்ல ஸ்கோருக்கான இலக்கணம் வரை; கிரெடிட் ரிப்போர்ட் A to Z அலசல் #HerMoney
ஏடிஎம் கார்ட்டில்லாமல் பணம் எடுக்க முடிவதிலிருக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
- நிதிப் பரிமாற்றம் மிகவும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது. காரணம் இம்முறையில் பரிமாற்றத்தைத் தொடங்க நாம் ஒரு பாஸ்வேர்டைக் கொடுத்த பின்தான் கார்டைப் பயன்படுத்தாமல் பணத்தை எடுப்பதற்கான பரிவர்த்தனையானது தொடங்கும். அதே போல பணத்தை எடுக்கும்போதும், நான்கு இலக்க எண் ஒன்றை பாஸ்வேர்டாகக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் கார்டை பயன்படுத்தாமல் பணத்தை எடுப்பதற்கான பரிவர்த்தனை நிறைவுறும்.
- முக்கியமாக, உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படும் சமயத்தில் நம் ஏடிஎம் அட்டை தொலைந்துவிட்டாலோ, கையில் இல்லாமல் போகும்போதோ இந்த வசதி மீட்பராக இருந்து நம்மைக் காக்கும்.
- இதன் மூலம் 24 * 7 பணம் எடுக்கும் வசதி அமலில் உள்ளது. பெருநகரங்களில் மற்றும் நகரின் மத்தியில் உள்ள ஏடிஎம் மட்டுமன்றி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பல ஏடிஎம்களிலும் இந்த வசதி உள்ளது.
- இதைப் பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாது, இந்தியாவின் எந்த மூலையில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பவும் முடியும்.
தனித்துவமான அம்சம்
`இது என்ன புதுசா? இதைத்தான் யுபிஐ எப்போதோ சாத்தியப்படுத்தி விட்டதே?' என்ற கேள்வி எழலாம்.
இந்தச் சேவையின் மிகவும் தனித்துவமான அம்சம் என்னவென்றால், யுபிஐ போல அனுப்புநர் மற்றும் பெறுநர் என இருவரும் யுபிஐ செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் போலல்ல இது. நீங்கள் பணம் அனுப்புபவருக்கு பிரத்யேகமான வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. என்ன ஆச்சர்யமாக உள்ளதா? ஆம். பணம் பெறுநரின் பெயர், பின்கோடு உள்ளிட்ட முழு முகவரி, கூடவே அவரது பத்து இலக்க செல்போன் எண் முதலிய விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
Also Read: நிதி மேலாண்மையின் இந்த 3 முக்கியமான விஷயங்கள்ல நீங்க சரியா இருக்கீங்களா தோழிகளே? #HerMoney
இதைப் பதிந்ததும் பணம் அனுப்பும் பரிவர்த்தனை தொடங்கி விடும். பின்பு 4 முதல் 6 இலக்க எண்ணான டிரான்சாக்ஷன் பாஸ்வேர்டு ஒன்று உருவாக்கப்படும். அதைப் பணம் பெறுபவருக்குக் கொடுக்க/அனுப்ப வேண்டும். சில வங்கிகளில் இந்த பாஸ்வேர்டின் ஆயுள் 12 நிமிடங்கள் முதல் மூன்று நாள்கள் வரையிலும்கூட இருக்கும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். பணம் பெறுபவர் குறிப்பிட்ட அந்த வங்கியின் ஏடிஎம்முக்கு போய் தனது மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்ததும் மீண்டும் ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டு உண்டாக்கப்படும். அதே சமயத்தில் பணத்தை அனுப்புபவருக்கு வந்திருந்த டிரான்சாக்ஷன் பாஸ்வேர்டை பணத்தைப் பெறுபவர் உள்ளிட வேண்டும். அவ்வளவுதான். அனுப்பப்பட்ட பணத்தைப் பெறுநர் சுலபமாக ஏடிஎம் கார்டு இல்லாமல் எடுக்கலாம். இதன் மூலம் ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரையிலும், மாதத்துக்கு அதிக பட்சமாக 25,000 ரூபாய் வரையிலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பரிவர்த்தனை கட்டணமாக ஒரு சிறு தொகையை வங்கி கழித்துக்கொள்ளும். பரிவர்த்தனை ஒன்றுக்கு 25 ரூபாய் என்பது குறைந்தபட்ச கட்டணமாகப் பல வங்கிகளில் நடைமுறையில் உள்ளது.
`2014-ம் ஆண்டிலேயே வந்த இந்த வசதியைப் பற்றி இன்னமும் எங்களுக்குத் தெரியாது' எனப் பலரும் சொல்வது கேட்கிறது. இப்போது இதுபற்றி அறிந்து கொண்டாயிற்று... தேவை ஏற்படும்போது இவ்வசதியைப் பயன்படுத்தலாமே தோழிகளே!
source https://www.vikatan.com/lifestyle/women/how-to-send-money-from-atm-without-debit-card-unknown-atm-features
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக