Ad

திங்கள், 7 ஜூன், 2021

புத்தம் புது காலை : அழியும் கனிமங்கள் நிறைந்த சாக்கடல்... இது உலகுக்கான எச்சரிக்கை! #DeadSea

சாக்கடல் என்ற பெயர் இந்த நீரில் எந்த உயிரும் வாழ முடியாது என்பதால் வந்ததா, இல்லை இந்த நீர்நிலையே இறந்து கொண்டிருப்பதால் வந்தததா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் போல... அப்படித்தான் இருக்கிறது தற்போதைய சூழல்!


நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட சாக்கடல் (Dead Sea) உண்மையில் கடல் அல்ல. ஏறத்தாழ நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஜோர்டனின் நதிக்கரை மத்திய தரைக்கடலின் வெள்ள நீரால் நிறைந்தது. அப்போது இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளின் எல்லையில், ஜூடியன் பாலைவனத்தை ஒட்டி ஜோர்டான் நாட்டில் உருவானதுதான் இந்த Dead Sea எனும் சாக்கடல்.

50 கிலோமீட்டர் நீளமும், 15 கிலோமீட்டர் அகலமும், 380 மீட்டர் ஆழமும், 40 பில்லியன் கேலன்கள் உப்பு நீரையும் கொண்ட ஒரு பெரிய ஏரிதான் இது.


சுமார் 70,000 ஆண்டுகளாக பூமியின் மேல் அடுக்கில் ஏற்பட்ட நகர்வுகள் (tectonic plates shift) காரணமாக, கடல் மட்டத்தில் இருந்து தொடர்ந்து கீழே இறங்கிக் கொண்டேயிருக்கிறது இந்த சாக்கடல். பூமியின் மிகவும் தாழ்ந்த பகுதியாக, அதாவது கடல் மட்டத்தை விட 430 மீட்டர் தாழ்ந்த மட்டத்தில் இது அமைந்துள்ளது.

Dead Sea

இங்கு நிலவும் கடுமையான வெப்பநிலையினாலும், ஏற்கனவே இங்குள்ள நீரின் கனிமங்கள் கூடுதல் என்பதாலும், சாக்கடலின் உப்பு அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்த ஏரியின் நீரானது கடல்நீரைக் காட்டிலும் 6 முதல் 8 மடங்கு அதிக உப்புத்தன்மை கொண்டதாக உள்ளது.


சோடியம் க்ளோரைட் என்ற உப்பு தவிர அதிகளவில் பொட்டாசியம், மெக்னீசியம், புரோமின், சல்ஃபர் ஆகிய உப்புகளும் இந்த Dead sea-யில் மிகுதியாக உள்ளன. இதனால் இதன் அடர்த்தி மிக அதிகமாகி சில பாக்டீரியாக்கள் மற்றும் பாசிகள் தவிர எந்தக் கடல்வாழ் உயிரினங்களும் இதில் வாழ முடியாது. அதனால்தான் இது சாக்கடல் என அழைக்கப்படுகிறது. அத்தோடு இந்த அடர்த்தி கூடுதலான நீரின் காரணமாக சாக்கடலில் மற்ற கடல்களைப் போல் மூழ்காமல் நம்மால் மிதக்க முடிவதும் இந்தப் பெயருக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் இதன் உப்புப் படிகங்களும், உப்பு நீரும் ஒன்றுசேர்ந்து மிக அழகான தோற்றத்தை இந்த டெட் சீ-க்குத் தருவதால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பல லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

தாழ்வான பகுதி என்பதால் இங்கு காற்றின் அடர்த்தியும், அதில் ஆக்சிஜன் அளவும் கூடுதல் (5%) என்பதால் பல நோய்களை குணப்படுத்துகிறது சாக்கடல். இங்கு அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு மிகவும் குறைவு என்பதால் ஆஸ்துமா, அலர்ஜி உட்பட்ட நுரையீரல் நோய்களுக்குத் தீர்வாக இருக்கிறது சாக்டல். மேலும் இக்கடலின் பிரத்தியேக கனிமங்கள் நிறைந்த உப்பு, சொரியாசிஸ், விட்டிலைகோ உட்பட்ட தோல் நோய்களும், மூட்டு வலி, தசைநார் வலி ஆகியன குணமடையவும் உதவுகிறது.

அதேபோல தோலின் அழுக்குகளை நீக்கி, பருக்களைப் போக்கி, சுருக்கங்களையும் நீக்குவதால், தோலுக்குப் புத்துணர்ச்சி தரும் அழகு சாதனப் பொருளாகவும், அழகு நிலையங்களின் ஓர் அங்கமாகவும் உள்ளது இந்த சாக்கடலின் மண்.

Dead Sea

இவ்வளவு அதியங்கள் நிறைந்த சாக்கடல் இன்னும் சில வருடங்களில் அழியப்போகிறது. ஆமாம்... இன்னும் 30 ஆண்டுகளில் இது மறைந்தே போகலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

2050-ம் ஆண்டு சாக்கடலுக்குப் பதிலாக வெறும் உப்பளங்கள் மட்டுமே காணப்படலாம் என்றும், இந்த அழிவு என்பது ஜோர்டான் நாட்டிற்கு மட்டுமன்றி, உலகின் ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை என்றும் கூறும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள், அதற்கான காரணமாக மனிதர்களைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள்.


இந்த அழிவிற்கான ஆரம்பம், ஜோர்டான் நதியிலும், யார்மோக் ஆறுகளிலும் அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிகளவில் நீர் எடுத்தது. இதுமட்டுமன்றி இஸ்ரேலும், ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீரை சாக்கடலில் இருந்துதான் எடுத்து வருகின்றன.


இதனால், கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது. இதேவேளையில் சாக்கடலை செங்கடலுடனும், மத்தியதரைக்கடலுடனும் கால்வாய்கள் வெட்டி இணைப்பதன் மூலம் அதை உயிர்ப்பிக்கும் வேலைகளும் நடந்துவருகிறது.

Dead Sea

ஜோர்டானில் ஒரு நீர்நிலை அழிவதில் நமக்கு ஏன் இவ்வளவு கவலை என்பதற்கு, இது ஜோர்டானுக்கு மட்டுமல்ல... உலகத்திற்கான பிரச்னை என்று சென்ற ஆண்டு, "இறந்து கொண்டிருக்கும் சாக்கடல்" மூலமாக உலகத்தினர் அனைவருக்கும் தனது செய்தியை விடுத்துள்ளது டெட் சீ உச்சிமாநாடு.


அதிகரித்து வரும் மக்கள்தொகை, மாறிவரும் தட்பவெப்ப சூழல்கள் ஆகியவற்றால் உலகின் மிகப்பெரிய நீர்நிலைகள் 37-ல், 21 நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு கொண்டிருக்கின்றன. அதேசமயம் நீரின் தேவை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் உணவின் தேவை 35%, நீரின் தேவை 45%, மற்றும் ஆற்றலின் தேவை 50% வரை அதிகரிக்கக் கூடும் என்கிறது ஆய்வறிக்கை. வரும் முன் காக்காமல், நெருக்கடிகள் நிகழ்ந்த பின் அவற்றை சரிசெய்வது என்பது இயலாத செயலாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறது இந்த உச்சி மாநாடு.


ஆம்... வாழ்க்கை என்பது இயற்கையிடம் அனைத்தையும் பெற்றுக் கொள்வது மட்டுமல்ல. விட்டுக் கொடுப்பதும் தான். ஆவியாகி வரும் சாக்கடல் போல நம் வாழ்வும் ஆவியாகக் கூடும் என்பதற்கான எச்சரிக்கை இது என்பதால், நமது நீர்நிலைகளைக் காக்க வேண்டும் என்பதுதான் இன்றைய செய்தி!
#WorldOceanDay



source https://www.vikatan.com/news/cinema/why-dead-sea-is-dying

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக