Ad

திங்கள், 7 ஜூன், 2021

புதுச்சேரி: `மருந்தாக.. வியாதிக்காக மட்டும்!’ -பாஜக எம்.எல்.ஏ-வின் `மதுக்கடை’ தொடர்பான வைரல் ஆடியோ

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது அரசு. மளிகை, காய்கறி, மருந்தகம், உணவகம் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளித்திருந்த அரசு, மதுக்கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட்டிருந்தது. அதனால் கள்ளச்சாராய விற்பனையும், அண்டை மாநில மதுபாட்டில்கள் என்ற பெயரில் போலி மதுபானங்களும் புதுச்சேரியில் அதிகளவில் விற்கப்பட்டன.

மதுக்கடைகள்

அதேபோல மது கிடைக்காத விரக்தியில் சானிடைசர், இருமல் மருந்துகள் போன்றவற்றை உட்கொண்டு சிலர் போதை ஏற்றிவந்தனர். இந்நிலையில் மதுப் பிரியர்களுக்கு ஆதரவாக பா.ஜ.கவின் எம்.எல்.ஏவான ஜான்குமார் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், “வணக்கம். உங்கள் ஜான்குமார் எம்.எல்.ஏ பேசுகிறேன். இன்று கூட எனது தொகுதியில் ஒருவருக்கு மது கிடைக்காமல் கைகளை கழுவும் சானிடைசரை தண்ணீரில் கலந்து குடித்ததால் சற்று முன் இறந்து விட்டார். இது பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநரை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தேன். குடி என்பது தற்போது ஒரு மனநோயாக மாறிவிட்டது. ஒரு வியாதிக்கு மருந்து கொடுப்பதாக நினைத்து மதுபான கடைகளை திறந்து விடுங்கள். மதுவுக்கு அடிமையாகி பிரேதத்தை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தும் கெமிக்கலை குடிக்கிறார்கள். இதுபோல பல்வேறு தவறான வழி முறைகளை கையாளுகிறார்கள். எனவே தயவுசெய்து மதுபான கடைகளை திறந்து விடுமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் இன்றோ அல்லது நாளையோ மதுக்கடைகளை திறக்க ஆவணம் செய்வதாக கூறி இருக்கிறார்கள்.

Also Read: `தீபாவளி என நினைத்து சுட்டுவிட்டேன்!’- உ.பி போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பா.ஜ.க மகளிரணித் தலைவி

எனவே மது பிரியர்கள் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தயவுசெய்து குடிக்கு அடிமை ஆகாமல், கொஞ்சமாக வாங்கி குடிக்கவும். வியாதிக்காக மட்டும் குடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்பதுடன் முடிவடைகிறது. இன்றுமுதல் புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என்று அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-mla-johnkumars-audio-has-gone-viral-in-social-media-about-opening-the-liquor-shops

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக