தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு குளிக்கலாமா? எவ்வளவு நேரம் கழித்துக் குளிக்கலாம்? வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாமா? தடுப்பூசி போட்டுக்கொள்ள வெளியில் சென்று வரும்போது குளித்துவிட்டு வீட்டிற்குள் நுழைவது தானே நல்லது...
- பொன் செல்வா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
``கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த நாள் முதல் மருத்துவர்கள் வலியுறுத்துகிற விஷயம், வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பியதும் கைகால்களைக் கழுவ வேண்டும், குளிக்க வேண்டும் என்பதுதான். தடுப்பூசி போட்டுக்கொள்ள வெளியே போய்விட்டு வந்த உடனேயும் குளித்துவிடுவது நல்லதுதான். வெந்நீரில் குளிக்க வேண்டுமா, குளிர்ந்த நீரிலா என்பதெல்லாம் நீங்கள் குளிக்கும் நேரம், தட்பவெப்ப நிலை போன்றவற்றைப் பொறுத்தது.
வெயில் கொளுத்தியெடுக்கும் நேரம் என்றால் சாதாரண தண்ணீரில் குளியுங்கள். மழை பெய்கிறது, குளிரான வானிலை நிலவுகிறது என்றால் வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் குளியலுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டு வருவோர் எல்லோரும் அவசியம் குளித்தாக வேண்டும் என்றில்லை. முடிந்தவர்கள் குளிக்கலாம். மற்றவர்கள் கைகால்களை சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட இடத்தில் வலி அதிகமாக இருந்தால் முதல் 3 நாள்களுக்கு ஐஸ்வாட்டர் ஒத்தடம் கொடுக்கலாம். மருத்துவரின் பரிந்துரையில் பாராசிட்டமால் மாத்திரை மட்டும் எடுத்துக்கொண்டாலே போதுமானதாக இருக்கும்".
மருத்துவரின் பரிந்துரைப்படி கடந்த மூன்று ஆண்டுகளாக 75mg ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிட்டு வருகிறேன். தடுப்பூசி போட்டவர்கள் ஆஸ்பிரின் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடலாமா?
- சங்கர நாராயணன்(விகடன் இணையத்திலிருந்து)
Also Read: Covid Questions: ஆஸ்துமா உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
``நிச்சயம் ஆஸ்பிரின் மாத்திரையை நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசியின் பின் விளைவுகளாக அரிதாகச் சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வருவதைக் கேள்விப்படுகிறோம். உங்களுக்கு இதய நோய் அல்லது பக்கவாத ரிஸ்க் இருப்பதால்தான் ஆஸ்பிரின் அல்லது ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். எனவே அதை நிறுத்தாதீர்கள். ஒருவேளை தடுப்பூசியின் விளைவாக ரத்தம் உறைதல் பாதிப்புக்கு வாய்ப்பிருந்தாலும் அதை இந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-people-who-take-aspirin-tablets-take-covid-vaccines
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக