Ad

திங்கள், 7 ஜூன், 2021

`மொத்த சீனாவையும் மாற்றிய முடிவு!' - ஒற்றைக் குழந்தை திட்டத்தால் எப்படி முடங்கியது சீனா?

`ட்விட்டர்' போல, `வைபோ' என்பது சீனாவில் பிரபலமாக உள்ள சமூக வலைதளம். இம்மாதம் 1-ம் தேதி பிற்பகலில் இந்தக் குறுங்கதை `வைபோ'வில் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டது:

``நான் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கப் போவதில்லை. அப்படி வாங்கிக் கொள்வதற்குத் தடையேதும் இல்லை. ஆனால், மூன்று கார்களை வாங்கும் அளவுக்கு என்னிடம் பணமில்லை."

அன்றைய தினம் முற்பகலில் கூடிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ, இனி தம்பதிகள் மூன்று பிள்ளைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி நல்கியிருந்தது. அதைப் பகடி செய்த இந்தக் குறுங்கதைதான் அங்கு வைரலானது.

Old man playing with kids

ஒரு நகரவாழ் நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிதான் அதை எழுதியிருக்க வேண்டும். ஆனால், இந்த மூன்று வரிகளுக்குள் சீனாவின் அரை நூற்றாண்டு காலக் குடும்பக் கட்டுப்பாட்டு வரலாற்றைச் சுருக்கிவிட முடியாது. அது வலியும் வேதனையும் நிறைந்தது. ஆயுதத்தால் எழுதப்பட்டது. குருதியால் நனைந்தது. சமூகத்தில் திருத்த முடியாத பல விளைவுகளை உண்டாக்கி விட்டது. ஆனால், சீன அரசு திருத்த முயற்சி செய்கிறது. அதுவே, இப்போதைய `மூன்று குழந்தை' அறிவிப்புக்குக் காரணம். கடந்த மாதம் 11-ம் தேதி சீனாவின் ஆறாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளியானபோதே இப்படியோர் அறிவிப்பு எதிர்நோக்கப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பின்படி சீனாவின் மக்கள் தொகை 141 கோடி. உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடு சீனாதான். இது எல்லோருக்கும் தெரியும். அடுத்த இடத்தில் இருப்பது இந்தியா. இதுவும் தெரியும். 2011-ல் வெளியான இந்தியாவின் 15-வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. இப்போதைய மதிப்பீடு 138 கோடி. இந்தியா, மக்கள் தொகையில் 2025-ம் ஆண்டு சீனாவைத் தாண்டிவிடும். இதில் கவலை கொள்வதற்கு ஒன்றுமில்லை. மாறாக, நாம் இந்தச் சூழலுக்குத் தயாராக வேண்டும்.

சீனா இப்போது இரண்டு பிரச்னைகளை எதிர்கொள்கிறது.

முதலாவதாக, குறைவான குழந்தைப் பிறப்பால், ஒருபுறம் உழைக்கும் வயதினர் குறைந்துவிட்டார்கள். மறுபுறம் மருத்துவ வளர்ச்சியால், மக்கள் நீடு வாழ்கிறார்கள். அதாவது முதியவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

இரண்டாவதாக, பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, பாலின சமத்துவம் குலைந்துவிட்டது. சீனாவின் குடும்பக் கட்டுப்பாட்டு வரலாற்றை நெருங்கிப் பார்ப்பது இந்தப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள உதவும்.

சீனாவின் குடும்பக் கட்டுப்பாடு - முதல் கட்டம்

1949-ல் 54 கோடியாக இருந்த சீனாவின் மக்கள்தொகை 20 ஆண்டுகளில் 80 கோடியாக உயர்ந்தது. நாடு வறுமையில் இருந்தது. அப்போது சீனாவில் மட்டுமல்ல, உலகெங்கும் பல பொருளாதார வல்லுநர்கள் மக்கள்தொகைப் பெருக்கமே வறுமைக்குக் காரணம் என்று நம்பினார்கள். சீனாவின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் 1970-ல் தொடங்கியது.

அரசு கருத்தடைச் சாதனங்களை ஊக்குவித்தது. தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டது. `தாமதமாகத் திருமணம், குறைவாகக் குழந்தைகள், பிள்ளைகளுக்கு இடையில் இடைவெளி' என்கிற மூன்று அம்சங்கள் பரப்புரையில் பிரதானமாக இடம்பெற்றன. அது எல்லா கிராமங்களையும் சென்றடைந்தது. அதற்குப் பலன் இருந்தது. ஒரு பெண் சராசரியாகப் பிரசவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, கருவள விகிதம் எனப்படுகிறது. இந்த விகிதம் 6-ல் இருந்து 3 ஆகக் குறைந்தது.

ஆனால், தலைவர்கள் திருப்தி அடையவில்லை. மனித நேயத்துடனும் அறிவியலின் துணையுடனும் அணுக வேண்டிய பிரச்னையில் அரசியல் சேர்ந்துகொண்டது. சீனப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய மா சே துங் 1976-ல் காலமானார். மாவோவின் தலைமையில் நடந்த பெரும் பாய்ச்சலும் (1958-1962), கலாசாரப் புரட்சியும் (1966-1976) முறையே பொருளாதார, கலாசாரப் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருந்தன.

Chinese Children - Parents

ஒற்றைக் குழந்தைத் திட்டம்

மாவோவின் மறைவுக்குப் பிறகு வந்த தலைவர்களுக்குத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. டெங் சியோ பிங் சீனாவைப் புரட்டிப் போடுகிற இரண்டு தீர்மானங்களை எடுத்தார்.

முதலாவது தீர்மானம் 1978-ல் எடுக்கப்பட்டது. சீனாவின் கதவுகளை அகலத் திறந்தார் டெங். அந்நிய முதலீடுகள் குவிந்தன. புதிய தொழிற் சமூகம் உருவாகியது. சீனாவின் பொருளாதாரம் வளர்ந்தது. பெரும் மக்கள் திரள் பட்டினியிலிருந்து மீண்டது.

இரண்டாவது தீர்மானம், செப்டம்பர் 25, 1980 அன்று அமலானது. அதுதான் ஒற்றைக் குழந்தைத் திட்டம். நாடெங்கிலும் 5 லட்சம் முழுநேர ஊழியர்களும், 8.5 கோடி பகுதிநேர ஊழியர்களும் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் சின்னஞ்சிறு கிராமத்தில் தொடங்கி நகரம் வரை என, நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணையும் கண்காணித்தார்கள். பெண்கள் கருத்தடை செய்து கொண்டவர்களா, கர்ப்பமாக இருக்கிறார்களா, குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்களா, மணமானவர்களா முதலான சகல விவரங்களும் கண்காணிப்புக்கு உள்ளாயின.

இரும்பு விதிகள்

விதிகள் இரும்பால் அடிக்கப்பட்டவை. மீற முடியாது. மீறுபவர்களின் கருக்கள் கலைக்கப்பட்டன. பெரும் அபராதங்கள் (ஆண்டு வருமானத்தின் பத்து மடங்கு) விதிக்கப்பட்டன. விதிவிலக்காகக் கிராமப்புறங்களிலும், சிறுபான்மை இனத்தவர்களிடத்திலும் இரண்டாம் குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஐந்தாண்டு இடைவெளி இருக்க வேண்டும். விதிகளைப் போலவே சலுகைகளும் இரும்பால் அடிக்கப்பட்டவை.

ஒரு புறம் நாட்டின் வளம் பெருகியது. உள்கட்டமைப்பு வளர்ந்தது. வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. மறுபுறம் அரசின் அதிகாரம் பெண்களின் கருப்பை வரை நீண்டது. அப்போது சிலர் நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றைக் குழந்தைத் திட்டம்தான் காரணம் என்று வியாக்கியானம் செய்தனர். அது பிழையானது என்பதைக் காலம் சொன்னது.

குறையும் உழைக்கும் கரங்கள்

1980-களுக்குப் பிறகு, சீனா உலகத் தொழில் அனைத்தையும் உவந்து செய்தது. அப்படிச் செய்வதற்கான மனிதவளம் சீனாவிடம் இருந்தது. அதற்குக் காரணம், 60-களிலும் 70-களிலும் சீனத் தாய்மார்கள் பெற்றெடுத்த பிள்ளைகள். அவர்கள் வளர்ந்து வாலிபர்களாகி இருந்தார்கள். உழைத்தார்கள். சீனாவை உலகின் தொழிற்சாலை ஆக்கினார்கள். மாறாக 80-களுக்குப் பிறகான ஒற்றைக் குழந்தைத் திட்டம் சீனாவின் உழைக்கும் வயதினரின் (16 முதல் 59 வயது) எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. 2010-ல் மக்கள்தொகையில் 70% பேர் உழைக்கும் வயதினராக இருந்தனர். இப்போது அது 63%ஆகக் குறைந்துவிட்டது. மறுபுறம் இதே காலகட்டத்தில் முதியவர்களின் விகிதம் 13%-லிருந்து 19%ஆக உயர்ந்துவிட்டது.

Children playing with their Parents

சீனாவுக்கு நேரெதிராக, இந்தியாவில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை கூடி வருகிறது. 2013-ல் இது 63% ஆக இருந்தது. 2018-ல் 66%. அடுத்த 30 ஆண்டுகளுக்கு இது ஏறுமுகமாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. ஆனால், இந்த உழைக்கும் வயதினரை ஒரு தொழில் சமூகமாக மாற்றும் பெரிய திட்டங்கள் எதுவும் இந்தியாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நம்மிடம் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. ஒரு புள்ளி விவரத்தின்படி கொரோனாவுக்கு முன்பாகவே இந்தியாவில் உழைக்கும் வயதினரில் பாதிப் பேர் வேலையின்றி இருந்தனர். கடந்த ஓராண்டில் இது கூடியிருக்கும். நம்முடைய கல்வி, சுகாதாரம் குறித்த புள்ளிவிவரங்களும் நம்பிக்கை அளிப்பனவாக இல்லை. இந்தியா இவற்றில் கவனம் செலுத்தினால் மட்டுமே நமது மனிதவளத்தால் பயனீட்ட முடியும்.

பாலியல் சமநிலை

சீனாவின் ஒற்றைக் குழந்தைத் திட்டம் இன்னுமொரு சமூகப் பிரச்னையையும் உருவாக்கியது. நாட்டின் பாலியல் சமநிலை பிறழ்ந்தது. இந்தியாவைப் போலவே சீனாவிலும் ஆண் குழந்தை மோகம் இருக்கிறது. ஒவ்வொரு பெயரிலும் குடும்பப் பெயர் இருக்கும். இது ஆண் பிள்ளைகளுக்கே போகும். பெண் பிள்ளைகள் திருமணமானதும் கணவனின் குடும்பப் பெயரைத் தரிப்பார்கள். ஆகவே, ஆண் பிள்ளைகளே குடும்பத்தின் வாரிசாகக் கருதப்படுகிறார்கள். இதனால் கருவிலே இருக்கிற சிசு பெண் என்று தெரிந்தால் கலைத்துவிடுகிற போக்கு இருந்தது. சின்னஞ்சிறு நகரங்களிலெல்லாம் சட்ட விரோதமாகக் கருவிலிருக்கிற குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிகிற அலகீட்டுச் சோதனை சகாயமான கட்டணத்தில் செய்யப்பட்டன. ஆறேழு மாத கர்ப்பமாக இருந்தாலும் கருச்சிதைவுக்கு முன் கேள்வி கேட்கப்படவில்லை; மேலும் கருச்சிதைவுகள் அனைத்தும் இலவசம். இதனால் பெண் கருக்கள் தொடர்ந்து கலைக்கப்பட்டன.

சீனாவின் இந்தப் பாலியல் சாய்வால் சுமார் 4 கோடி இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இப்படியான இளைஞர்களைச் சீனச் சமூகம் `மொட்டைக் கிளைகள்' என்றழைக்கிறது. சீனாவில் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்கள் குறைவு. பெண்கள்தாம் இணையைத் தேர்ந்தெடுப்பார்கள். வசதியும் கல்வியும் உள்ள இளைஞர்களுக்குத் திருமணமாகிவிடும். மற்றவர்கள் திருமணச் சந்தையில் பின்தங்கிப் போவார்கள்.

chinese family (representational image)

ஆனால், நிலைமை மாறி வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னால் சீனாவில் சராசரியாக 100 பெண் குழந்தைகளுக்கு 118 ஆண் குழந்தைகள் பிறந்தன. இப்போது ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 111 ஆகியிருக்கிறது. 100 பெண் குழந்தைகளுக்கு 103 ஆண் குழந்தைகள் என்பதை ஏற்கத்தக்க விகிதமாக ஐநா கருதுகிறது. உலக சராசரி 100:106. இந்தியாவில் இது 100:107. ஆண் மேலாதிக்கம் கோலோச்சுகிற இந்தியாவால் உலகச் சராசரியை எட்டிப் பிடிக்க முடிகிறது. ஆனால், பெண் கல்வியிலும் பெண் விடுதலையிலும் இந்தியாவைவிட பல படிகள் முன்னேறியுள்ள சீனா, பெண் குழந்தைப் பிறப்பில் பின் தங்கியிருக்கிறது. இதற்கு ஒற்றைக் குழந்தைத் திட்டமே காரணம் என்று யூகிப்பது சிரமமன்று.

ஒற்றைக் குழந்தைத் திட்டத்தின் மோசமான பின்விளைவுகளைச் சீன ஆட்சியாளர்கள் 2000-ம் ஆண்டிலேயே உணர்ந்தனர். கல்விப் புலத்தில் பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின. எனினும் 2015-ல்தான் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று சட்டத்தைத் தளர்த்தினர். ஆனால், அதற்குப் பிறகும் குழந்தைப் பிறப்பு விகிதம் கூடவில்லை.

இப்போது சீனாவின் கருவள விகிதம் 1.69. சர்வதேச அளவில் `பதிலீட்டு விகிதம்' என்பது 2.1. அதாவது ஒரு பெண் சராசரியாக 2.1 குழந்தைகளை ஈன்றால் அந்தச் சமூகத்தில் மக்கள்தொகை நிலையாக இருக்கும். இந்தியாவின் இப்போதையக் கருவள விகிதம் 2.29. இது பதிலீட்டு அளவைவிட அதிகமானது. பிழையில்லை. ஆனால், நமது மக்கள்தொகையை மனிதவளமாக மாற்ற வேண்டும். அதற்குக் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு எனும் மூன்று அம்சங்களிலும் நாம் முன்னேற வேண்டும்.

A woman holds a child wearing a mask in Beijing

உலகெங்கும் எந்தெந்த நாட்டிலெல்லாம் பெண் கல்வி, பெண் தொழிலாளர், மக்களின் ஆயுள், மருத்துவம், உடல் நலம், பொருளாதாரம் போன்றவை வளர்கின்றனவோ அங்கெல்லாம் கருவள விகிதம் குறைந்து வருகிறது. சீனாவும் விலக்கல்ல. ஆனால், கடுமையாக அமலாக்கப்பட்ட ஒற்றைக் குழந்தைத் திட்டம் சீனச் சமூகத்தில் செயற்கையான இடையீடாக அமைந்துவிட்டது. இயல்பான போக்கை மாற்றிவிட்டது. உழைக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்துவிட்டது; முதியவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிவிட்டது.

விகிதம் மாறுமா?

இந்தச் சூழலில் சீனாவின் `மூன்று குழந்தை' அறிவிப்புக்கு மக்களிடையே உற்சாகமான வரவேற்பில்லை. சீனாவின் சமூக வலைதளங்களில் `4:2:1' என்றொரு விகிதம் பிரசித்தியானது. இதில் நடுவிலுள்ள 2 என்பது கணவனையும் மனைவியையும் குறிக்கிறது. இவர்கள் இருவரும் ஒற்றைக் குழந்தை பெற்றோர். மருத்துவ வளர்ச்சி இவர்களின் பெற்றோர்களுக்கு நீடித்த ஆயுளை நல்குகிறது. 4 என்பது இவர்களின் இரண்டு பெற்றோர்களைக் குறிக்கிறது. கடைசியாக உள்ள 1 என்பது தம்பதிகளின் ஒற்றைக் குழந்தை. நடுவிலே இருக்கிற 2 பேருக்குப் பொறுப்பு அதிகம். அவர்கள் முந்தைய தலைமுறையினரான 4 பேரையும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தங்களது 1 குழந்தையையும் போற்ற வேண்டும்.

People of China

இந்த 4:2:1 என்கிற விகிதத்தைத்தான் இப்போது சீன அரசு மாற்ற முயல்கிறது. அதற்கு ஒரு `வைபோ' பயனரின் எதிர்வினை இப்படி இருந்தது:

``ஒற்றைக் குழந்தைகளாகப் பிறந்த நாங்கள் இருவரும் மணந்தோம். நாங்கள் நான்கு பெற்றோர்களையும் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும் (4:2:3), 65 வயதில் ஓய்வு பெற வேண்டும், எப்போதும் பொதி சுமக்க வேண்டும்."

4:2:1 என்கிற விகிதம் 4:2:3 என்று மாறுமா? அது எளிதாக நடக்கப் போவதில்லை என்பது சீன அரசுக்கும் தெரியும். ஆகவே, குழந்தை வளர்ப்பிலும் பிள்ளைகளின் கல்வியிலும் அரசு உதவும் என்று அறிவித்திருக்கிறது. இன்னும் மருத்துவம், ஓய்வூதியம், சமூக நலம், முதியோர் உதவித் தொகை தொடர்பான திட்டங்களையும் அரசு அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது. சீனா இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வருமானால் அது சீன வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

- மு. இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்



source https://www.vikatan.com/social-affairs/international/how-chinas-one-child-policy-changed-the-course-of-nations-growth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக