‘’குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் பற்றி தொடர்ந்து பேச வேண்டிய அவசியம் என்ன?’’, ‘’வைரமுத்து எழுதிய ’என் காதலா’ பாடல்கள் நம் ஊரில் சகஜம்தானே’’, ‘’ ‘றெக்க' படத்தின் ’கண்ணம்மா கண்ணம்மா’ பாடலை மட்டும் எப்படி ரசிக்க முடிகிறது?’’, Pedophile-களை அடையாளம் காண்பது எப்படி... கடந்த வாரம் வெளியான ‘மேடம் ஷகிலா’ தொடருக்கு வாசகர்களிடம் இருந்து இப்படி நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் வந்திருந்தன. அதைப் பற்றி முழுவதுமாக அலசும் முன்...
முப்பது வயது பெண் ஒருத்தி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு ஆசிரியருக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக அவரைத் தேடி கிராமத்திற்கு செல்கிறாள். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்தும் மாணவி ஒருத்தி தன் கணவரை தேடி வந்திருப்பது குறித்து ஆசிரியரின் மனைவி பெருமைப்படுகிறார். அவர் எவ்வகையில் நல்ல ஆசிரியர் என்பதை சொல்லிக்கொண்டே வந்தவள் அவரால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் தன்னுடைய வாழ்வில் அந்த நிமிடம்வரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்புகள், அதற்காக அவள் மனநல மருத்துவரிடம் எடுத்துக்கொண்ட தொடர் சிகிச்சைகள், இருட்டைக் கண்டால் ஏற்படும் அச்சம் பற்றியெல்லாம் விளக்கிச் சொல்கிறாள்.
Also Read: பள்ளியில் நடக்கும் பாலியல் வன்முறை : ஜா.தீபா எழுதிய 'குருபீடம்' சிறுகதையை படித்திருக்கிறீர்களா?!
ஒருமுறை அவளுடைய பிரச்னைகளுக்கு காரணமான ஆசிரியரை நேரில் பார்த்து வருவது அவளது மனநல சிகிச்சைக்கு உதவும் என மருத்துவர் கூறியதால் அங்கு வந்ததாக சொல்கிறாள். இது ஜா. தீபா ஆனந்த விகடனில் எழுதிய “குருபீடம்” எனும் சிறுகதையின் சுருக்கம்.
பாலியல் துன்புறுத்தல்களில் சிறியது, பெரியது என வரையறை கிடையாது. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான குழந்தைகள் பற்றி மட்டுமே இங்கு பொதுவெளியில் முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறோம். சிறு பாலியல் சீண்டல்களை ஒருமுறையேனும் கடந்து வந்தவர்களுக்கும் மனதளவில் அதன் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. போன தலைமுறை பெண்கள் அதை வெளிப்படையாக பேசாததும் இன்று பள்ளி மாணவிகளுக்கு இத்தகைய கொடூரம் நடக்க ஒரு காரணம்.
சிறுவயதில் பரிச்சயமானவர்களால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் பெரும்பாலான பெண்களுக்கு வாழ்க்கை முழுவதும் ஆண்களின் மேல் அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது. தெரிந்தவர்களிடமே பாதுகாப்பு இல்லை எனும்போது புதியவர்களிடம் பேச தயக்கத்தை ஏற்படுத்துகிறது. இருட்டும், தனிமையும் பயம் ஏற்படுத்துவது போலவே சாலையில் நடப்பது, பேருந்தில் பயணிப்பது, நெரிசலான பொது இடங்களில் செல்வதும் அச்சத்தைக் கொடுக்கிறது.
பெண்களில் பலர் உயர்கல்வி, வேலை என கரியரில் முன்னேறுவதற்கு தடையாக சிறுவயதில் நடந்த பாலியல் குற்றங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக அமைகின்றன.எல்லாவற்றையும் விட காதல் மற்றும் திருமண உறவில் நுழைவது பற்றிய பயமும், பதற்றமும் இருந்துகொண்டே இருக்கிறது.
உண்மையில் ஜா. தீபா சொல்லியிருப்பது போல குற்றமிழைத்தவரை ஒருமுறை நேரில் பார்த்தால் மட்டும் மாற்றம் அல்லது தெளிவு ஏற்பட்டுவிடாது. இத்தகைய குற்றங்களுக்கு ஆளான அனைத்து பெண்களுக்குமே தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு குறைந்தபட்சம் ஒரு அடியாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்கிற தீ கனன்று கொண்டுதான் இருக்கும்.
இன்றைய பிள்ளைகளுக்கு இணையத்தின் மூலம் எல்லாமே தெரிவதால் 15-16 வயது பெண்கள், ’சிறுமி அல்ல’ என்கிற வாதத்தை பலர் முன்வைக்கின்றனர். ’அந்தக் காலத்தில் 15 வயது பெண்களை திருமணம் செய்து வைத்தார்களே, அவர்களெல்லாம் பிள்ளை பெற்று நன்றாக வாழவில்லையா’ என்றும் கேட்கிறார்கள். நன்றாகப் படித்து சமூக வலைதளங்களில் புழங்கும் 45-50 வயதுகாரர்கள்தான் இப்படிக் கேட்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
ஒரு பெண் பூப்பெய்துவதைத் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக பொருள் கொள்கிறார்கள். பெண்ணின் உடல் குழந்தை பெறுவதற்குத் தயாராக வேண்டியது பற்றியெல்லாம் இங்கு யாருக்கும் சரியான தெளிவான புரிதல் கிடையாது.
இந்தியாவில் பிரசவத்தின்போது 18 வயதிற்கு குறைவாக இருக்கும் சிறுமிகள் அதிக அளவில் உயிரிழக்கிறார்கள் என்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
சட்டப்படி குழந்தை திருமணம் தவறு என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பொதுவாக நம் சமூகத்தில் அதை யாரும் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இன்றும் கொரோனா லாக்டௌனில் அதிகமாக குழந்தை திருமணங்கள் நடப்பதாக தினமும் செய்திகள் வெளியாகின்றன.
சினிமாவில் உதாரணம் எடுத்துக்கொள்வோம். 53 வயது எம்ஜிஆருக்கு 15 வயது மஞ்சுளா ஜோடியாக நடித்தபோது நமது சமூகத்தில் அது தவறாக தெரியவில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்பு பதினைந்து, பதினாறு வயதில் திருமணம் செய்து வைப்பது ’சகஜமான’ விஷயம். இந்தத் திரைப்படம் வெளிவந்தது 1971-ம் ஆண்டு. அப்போதிருந்த சட்டத்தின்படி பெண்ணிற்கான திருமண வயது 14. குழந்தைத் திருமணத்தை தடுக்கும் வகையில் 1978 குறைந்தபட்ச திருமண வயது பெண்களுக்கு 18 ஆகவும் ஆண்களுக்கு 21 ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 18 வயதிற்கு குறைவாக இருக்கும் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் அந்த திருமணம் செல்லாது.
Pedophile என்பது சிறு குழந்தைகளின் மேல் பாலியல் ஆசை கொள்ளும் நபர்களை குறிக்கும் சொல். சிறு பிள்ளைகளின் மேல் ஏற்படும் பாலியல் இச்சையை Pedophilia என்று சொல்வார்கள். பொதுவாக சித்தப்பா, மாமா, பெரியப்பா, தாத்தா போன்ற நெருங்கிய உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுவது, கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது இதையெல்லாம் அன்பின் பேரால் செய்ய துவங்கி பிறகு சிறிது சிறிதாக பாலியல் ரீதியான செயல்களுக்கு அவர்களை உள்ளாக்குவது Sexual grooming எனப்படும்.
ஒரு 20 வயது பெண்ணுக்கு 10 வயது ஆண் குழந்தையின்மீது பாலியல் இச்சை தோன்றுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. அப்படியே இருந்தாலும் சமூகம் அதை மிகுந்த அருவருக்கத்தக்க விஷயமாகத்தான் பார்க்கும். அதேசமயம் 15-16 வயது பெண்ணை கதாநாயகியாக திரைப்படங்களில் காட்டும் போது 45 வயது ஆண்களுக்கு அவள் ஒரு பெண் என்று மட்டும்தான் தோன்றும். தங்கள் மகள் வயதுடைய பெண் என்று தோன்றாது. இது இங்கு ’சகஜமான’ விஷயம்.
உதாரணத்திற்கு 10-12 வயதில் இருந்து தன்னுடைய ஆசிரியரை ஒரு மாணவிக்கு பிடிக்கும் (Favourite Subject Teacher) என்று வைத்து கொள்வோம். அதே மாணவிக்கு 15-16 வயதாகும்போது கைது செய்யப்பட்டிருக்கும் #PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபலனை போன்ற ஒருவர் வைரமுத்துவின் ‘என் காதலா’ பாடலை அனுப்பி வைக்கிறார். பாடலை பார்த்த பிறகு அந்த சிறுமி தனது அன்பை என்னவென்று புரிந்துகொள்வாள்? அதே சமயத்தில் அந்த ஆசிரியர் அவளிடம் தவறான முறையில் அணுகினால் அந்தச் சிறுமிக்கு குழப்பம் ஏற்படாதா? அது பாலியல் ரீதியான ஆபத்தில் போய் முடியாதா? ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமி தான் எதிர்கொள்ளும் விபரீதம் புரிந்து தப்பித்துக் கொண்டாலும் காலம் முழுவதும் தான் ஏமாற்றப்பட்டு பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளானது மன உளைச்சலாய் தொடராதா?!
’என் காதலா’ பாடலில் சிறுமி, கதாநாயகனை காட்டி, “அவர் யார்?” என்று ஒரு இளைஞனிடம் கேட்கிறாள். ”அவன் ஒரு லூசு” என இளைஞன் சொல்கிறான். அந்த சிறுமி, ”அவர் ஒன்னும் லூசு இல்ல” என்கிறாள். இவ்வளவுதான் காட்சி. உடனே அந்த இளைஞன் சிறுமியிடம், “என்ன லவ்ஸ் ஆ (காதலா)?” என்று கேட்கிறான்.
உண்மையில் ஒரு பள்ளி சிறுமி தன் அப்பா வயது இருக்கும் ஒருவரை ’பைத்தியம் இல்லை’ என்று சொல்வதற்குக் காதலாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அன்பு, இரக்கம், மனிதாபிமானம் இருந்தால் போதும். அதுவரை அந்தச் சிறுமிக்கு வெறும் ஈர்ப்பும், அன்பும் இருந்திருக்கலாம். அதற்கு காதல் என்ற வார்த்தை உருவகம் ஒருவர் கொடுத்துவிட்டுச் செல்லும் போது அந்தச் சிறுமி அதை பற்றிக் கொள்கிறாள். அதன்பிறகு தொடரும் பாடல்காட்சியில், ”எனக்கு தந்தை இல்லையே... தந்தையைப்போல் கணவன் வேண்டும்” என்று கதாநாயகனான 45 வயது ஆணை நினைத்து பாடுகிறாள். இவ்விடத்தில் அந்த சிறுமியிடம் ’காதலா?’ என்று கேட்ட இளைஞன்தான் இந்தச் சமூகம். ஒரு பள்ளி மாணவியாக இருந்தாலும் ஒரு ஆணை அன்போடு பார்த்தால் அதை காதலாக தவறாக உருவகப்படுத்தி அந்தத் தவற்றை குழந்தைகள் மீது ஏற்றி பிறகு அவர்களையே குறை சொல்வது இங்கு ‘சகஜம்’.
’காமம் கடந்த பாடல்’ என்று இதை குறிப்பிடுகிறார் வைரமுத்து. சிறுமிக்குத்தான் காமம் தெரியாது. ஆனால் காதலோடு சிறுமி அணுகும் 45 வயது ஆணுக்கு காமம் தெரியும் அல்லவா?
குழந்தைகள் மீது இப்படிப்பட்ட பாலியல் தொந்தரவுகள் என்றால், வளர்ந்த பெண்களும் தங்களிடம் அன்பாக இருப்பவர்களால் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகிறார்கள். ‘மன அழுத்தம்’ என்கிற வார்த்தைக்கு இங்கே மிக முக்கியப் பங்கிருக்கிறது.
’மயக்கம் என்ன’ என்றொரு திரைப்படம். தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலம் மிக்கவனாக, eccentricஆக இருக்கிறான் கதாநாயகன். அதீத காதலால் அவன் செய்யும் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் மனைவியாக இருக்கிறாள் கதாநாயகி. அவன் நாள்தோறும் பல பிரச்னைகளை கொண்டு வருகிறான். ஒருநாள் அதிகமாக குடித்துவிட்டு பிரச்னை செய்யும் அவனை, அவனது நண்பனின் உதவியுடன் வீட்டுக்கு அழைத்து வருகிறாள் மனைவி. கணவன் காரிலிருந்து இறங்கி சென்றுவிட, அவள் அங்கேயே உட்கார்ந்து வெடித்து அழுகிறாள். கணவனது நண்பன் ஆறுதலாகப் பேசுகிறான். ”அவனை விவாகரத்து செய்துவிடு. நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லி அவளை தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிடுகிறான். அவள் அழுகையை நிறுத்தி, அவனை கோபமாக எச்சரித்துவிட்டு சென்றுவிடுகிறாள். இது வெறும் சினிமா காட்சி மட்டுமல்ல. பெண்களுக்கு இது போன்ற பிரச்னைகள் இருக்கும்போது அதை தங்களுக்கு சாதகமாக பலரும் பயன்படுத்திக் கொள்ள நினைப்பது அந்தக் காலம் முதலே நடக்கின்றது.
முன்பு நமக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், அது நம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மட்டுமே தெரியும். தற்போது சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு நாம் எழுதும் பதிவுகள், பதியும் புகைப்படங்கள், பகிரும் பாடல்கள் மூலமாக நாம் மன அழுத்தத்தில் அல்லது தனிமையில் இருக்கிறோம் என்பது பலருக்கும் பொதுவெளியில் தெரிகிறது. தெரிகிறது என்பதைவிட நாமே காட்டிக் கொள்கிறோம்.
தற்போதுள்ள வாழ்க்கை முறையில் படிப்பு, வேலை/தொழில், குடும்ப பராமரிப்பு, குழந்தைகள் என்று எல்லோருமே அதிக வேலைப்பளுவால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இச்சூழலில் நண்பர்கள், சமூக வலைதளங்கள், வாட்ஸப் குரூப் போன்றவை பலருக்கும் ஆறுதலாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
நெருங்கிய நண்பர்கள் என்ற நம்பிக்கையில் பலரும் இன்று தங்களுடைய குடும்ப பிரச்னை, உறவுகளில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி சமூக வலைதள நண்பர்களிடம் விவாதிக்கிறார்கள். ஆனால், அவ்வாறு பேசுவதாலேயே பலரும், குறிப்பாக ஆண்கள் தனக்கும், தனது பெண் நண்பர்களுக்கும் நட்பைத் தாண்டிய உறவு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
”Are you depressed?” என்பதே “Pick-up line”ஆக இருக்குமோ என்று எண்ணுமளவிற்கு இன்று Depression/Stress-க்கு ஆறுதலாக இருக்க ஆரம்பித்து பாலியல் குற்றங்கள் மற்றும் Blackmail-களில் போய் முடிக்கிறது.
அதேபோல் பொருளாதார சிக்கலில் இருக்கும்போது நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் உதவுகிறார்கள். அப்படி அந்த உதவியை ஏற்றுக்கொள்வதால் அந்தப் பெண்ணிடம் உரிமை வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அணுகுபவர்களும் உண்டு.
ஒரு பெண், நண்பராக நினைத்து ஒருவரிடம் தன்னுடைய பிரச்னைகளைப் பேசுவது நிச்சயமாக பாலியல் ரீதியாக அணுகுவதற்கு கொடுக்கும் அனுமதி இல்லை.
Also Read: மேடம் ஷகிலா - 20 : கே.பாலசந்தர் சினிமா தொடங்கி நவீன இலக்கியம் வரை… பாலியல் விழிப்புணர்வு ஏன் இல்லை?
”18 வயது நிரம்பிய ஆண், 18 வயது நிரம்பிய பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வதற்காக அணுகுவதில் தவறில்லை என்றும், ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அந்த பெண்ணின் விருப்பம் என்றும் முற்போக்காளர்கள் பேசுகிறார்கள். இது ’பாலியல் தொந்தரவு’ (Sexual Abuse) அல்ல என்றும் சொல்கிறார்கள். இந்தப் புரிதல் இல்லாமல், கேட்பவர்களை எல்லாம் உடனே குற்றவாளிகள் ஆக்கி விடுகிறார்கள் என #MeToo இயக்கத்தின் மீது ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
அவர்கள் சொல்வது ஒருவகையில் சரிதான் என்றாலும் பாலியல் கல்வி, பாலின சமத்துவம் பற்றி பெரும்பாலான மக்களுக்கு போதிய தெளிவு இல்லாத நம் நாட்டில் இதுபோன்ற வாதங்கள் #MeToo இயக்கத்தை நீர்த்துப்போக செய்யும். எல்லாவற்றையும் விட ஆண்/பெண் யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சொல்லும் நிலை இன்னமும் இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆண்களைச் சார்ந்த பெண்கள்கூட பாதிக்கப்பட்ட பெண்களின் குரலை கேட்கத் தயாராக இருப்பதில்லை.
இணையத்தில் நாம் பேசும் முற்போக்கிற்கும், நம் சமூகத்திற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது. இதுவரை பண்பாட்டின் பேரில் பெண்ணை உடைமையாகப் பார்க்கும் எண்ணத்தைதான் நேரடியாகவும், மறைமுகமாகவும் கற்றுத் தந்திருக்கிறார்கள். இங்கே முற்போக்காக வாழ பெண்கள் வீட்டிலும், பொதுவெளியிலும் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. அதனிடையில் பெண்களை வீட்டிற்குள் முடக்கும் செயலாக இதுபோன்ற பாலியல் குற்றங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இக்குற்றங்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமல்லாமல் இவற்றை, கண்டு, கேட்டு வளரும் அடுத்த தலைமுறை பெண்களும்கூட ஒட்டுமொத்த ஆண் சமூகத்தின் மீது அவநம்பிக்கை கொள்வார்கள் என்பது வேதனைக்குரியது. ஒரு சமூகமாக நாம் இதை சிந்தித்து செயல்பட வேண்டும்.
பி.கு: ஆண்களும் பெண்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை குறிக்க #MenToo என்று பல ஆண்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எங்கோ ஓரிருவர் பாதிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு #MeTooவிற்கு எதிராக இவ்வாறு பேசுவது, ஆண் மைய சமூகத்தில் மொத்தமாக பெண்கள் குரலை முடக்க உருவாக்கப்பட்ட வாதமாகவே கொள்ளப்படும்.
source https://www.vikatan.com/social-affairs/women/madam-shakeela-how-the-children-and-women-are-abused-online-cleverly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக