புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில். ஆலங்குடியில் உள்ள தனியார் ஜஸ்க்ரீம் தயாரிக்கும் நிறுவனத்தில் 10 வருடங்களாக லேபராக வேலைபார்த்து வந்தவர், பலரிடம் கடன்பெற்றுக் கடந்த பிப்ரவரி மாதம் கொத்தமங்கலத்தில் சொந்தமாக ஐஸ்க்ரீம் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். ஆரம்பித்த சில தினங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பல்லாயிரக்கணக்கான ஐஸ்க்ரீம்கள் விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியாமல் தேக்கமடைந்தன.
தயாரித்த ஐஸ்க்ரீம்களும் விற்பனையாகவில்லை, இனி புதிதாக தயாரிக்க மூலப்பொருள்கள் வாங்கவும் வழியில்லை. கடன் கொடுத்தவர்களால் செந்திலுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது. 3 மாதங்களுக்கும் மேலாக ஐஸ்க்ரீம்களை ஐஸ்பெட்டிகளில வைத்துப் பாதுகாப்பதால், மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை. வேறு வழியின்றி விற்பனையின்றி தேங்கியிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான ஐஸ்க்ரீம்களை சாலைகளிலும் குப்பைகளிலும் கொட்டி அழித்து தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
Also Read: கொரோனா: `தவறான திசை; நிலைமை மேலும் மோசமடையும்!’ - எச்சரிக்கும் WHO
இதுபற்றி செந்திலிடம் கேட்டபோது, "இந்தத் தொழிலில் உள்ள அனுபவம் மற்றும் ஆர்வத்தால் இதில் ஜெயிக்க முடியும் என்றுதான் இந்தத் தொழிலில் இறங்கினேன். ஐஸ்க்ரீம் தயாரிக்கக்கூடிய இயந்திரம், விற்பனை செய்வதற்கு வாகனங்கள், 15 ஐஸ்பெட்டிகள் என 15 லட்ச ரூபாயை முதலீடு போட்டேன். பலரிடம் கடன் வாங்கித்தான் இந்தத்தொழிலை ஆரம்பிச்சேன். எப்படியும் கொடுத்துவிடுவேன் என்கிற நம்பிக்கையில்தான் எல்லாருமே கொடுத்தாங்க.
ஆனா, கொரோனா வந்து என்னோட கனவையே சிதைத்துப் போட்டுருச்சு. இப்படியெல்லாம் ஆகும்னு கனவுலகூட நெனச்சுப் பார்க்கலை. வித, விதமாக ஐஸ்க்ரீம்கள் தயாரிச்சோம். எல்லாமே தேங்கிருச்சு. கரன்ட் பில் கட்டக்கூட வழியில்லை. 20 பேருக்கு வேலை கொடுத்தேன். இப்போ, நானே கூலி வேலைக்குப் போய்த்தான் ரெண்டு மாசமா கரன்ட் பில் கட்டுறேன்.
இந்த மாசம் கட்டுறதுக்கு கையில் பணம் இல்லை. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்னு நெனச்சுதான், ஐஸ்க்ரீம்களை, ஐஸ்பெட்டியில் பாதுகாப்பாக வச்சு பராமரிச்சுக்கிட்டு வந்தேன். இப்போ சரியாகிற மாதிரி தெரியலை. இனியும் இவற்றைப் பராமரிச்சும் வீண்தான். இப்போதைக்கு ஐஸ்க்ரீம்களை அழிப்பதைத் தவிர வேறு வழி தெரியலை. திருவிழா சீஸன் எல்லாம் முடிஞ்சிருச்சு.
இனி அடுத்த வருஷம்தான் வியாபாரம் பார்க்க முடியும். அதுவும் மூலப்பொருள்கள் வாங்கினாதான் தயாரிக்கவே முடியும். தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கணும். சிறிய அளவில் ஐஸ்க்ரீம் கம்பெனி வச்சிருக்கும் எல்லாருக்கும் என்னுடைய நிலைதான். அரசு மானியத்தில் கடன் கொடுத்து உதவுனா இதிலிருந்து மீண்டு வர முடியும்' என்கிறார் கண்ணீருடன்.
source https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-ice-cream-company-owner-suffered-in-corona-lock-down
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக