Ad

வியாழன், 22 ஜூலை, 2021

"எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தாலும் சீட் கிடைப்பதில்லை!"- அட்மிஷனில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி!

கொரோனா வைரஸ், ஊரடங்கு, ஆன்லைன் கல்வி, கட்டண கொள்ளை போன்ற விவகாரங்களால், குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு எம்.எல்.ஏ, எம்.பி-களிடமிருந்து சிபாரிசு கடிதங்கள் பறப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், கோவை மாநகராட்சி அரசுப்பள்ளி ஒன்றுக்கு எம்.எல்.ஏ, எம்.பி சிபாரிசு செய்தாலும் கூட இடம் கிடைப்பதில்லை.

மசக்காளிபாளையம் பள்ளி

Also Read: ஏசி வசதி, ஸ்மார்ட் வகுப்பறை; தனியார் பள்ளிகளிலிருந்து வந்து குவியும் அட்மிஷன்; அசத்தும் அரசுப்பள்ளி!

கடந்த சில ஆண்டுகளாகவே கோவை அரசு பள்ளிகளில் மோஸ்ட் வான்டட் பள்ளியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.

கல்வி, உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்கெனவே தனியார் பள்ளிகளை ஓரம்கட்டிவிட்டது இந்த அரசுப்பள்ளி. கல்வியைத் தவிர கராத்தே, யோகா, ரோபோடிக்ஸ், பறையிசை, பொம்மலாட்டம், செஸ், பாரம்பரிய விளையாட்டுகள் என்று இதர பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது.

மசக்காளிபாளையம் பள்ளி
மசக்காளிபாளையம் பள்ளி
மசக்காளிபாளையம் பள்ளி

அரசுப் பள்ளி என்றாலே பழைய கட்டடம் என்ற யோசைனையில் மூழ்கியவர்களுக்கு பளீச் கட்டடம், சி.சி.டி.வி கேமராக்கள் போன்றவற்றின் மூலம் கவனம் ஈர்த்தனர். கொரோனா ஊரடங்கில் தனியார் பள்ளிகளின் பண ஆசை முகம் வெளிப்பட, மசக்காளிபாளையம் பள்ளிக்கான டிமாண்டும் மேலும் அதிகரித்துள்ளது.

சமூகத்தில் பொருளாதார ரீதியாக உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் பலரும் கால்கடுக்க நின்று மசக்காளிபாளையம் பள்ளியில் தங்களது வாரிசுகளை சேர்த்துள்ளனர். மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால், பலர் அந்தப் பள்ளியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர்.

எம்.எல்.ஏ சிபாரிசு கடிதம்

சிலர் எப்படியாவது இந்தப் பள்ளியில் சீட் வாங்கிவிட வேண்டும் என்று எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் வி.ஐ.பி சிபாரிசு கடிதங்களுடன் செல்கின்றனர். ஆனால், எவ்வளவு முயற்சித்தாலும் சீட் கிடைப்பதில்லை.

இதுகுறித்து மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலியிடம் பேசினோம். “இப்போது எங்கள் பள்ளியில் 530 மாணவர்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்களும் இங்குதான் வருகின்றனர். சமீபத்தில் பெஹ்ரைனில் இருந்து ஊரடங்கு காரணமாக இங்குவந்து செட்டிலான ஒருவர், தன் குழந்தையை அழைத்து வந்தார். அவர் குழந்தை சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்து வந்துள்ளது.

தலைமை ஆசிரியர் மைதிலி

அருகில் இருந்த சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் எங்கள் பள்ளியை பரிந்துரை செய்து அனுப்பியுள்ளனர். சிபாரிசு கடிதங்களுடன் வருபவர்களுக்கும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

ஒரு வகுப்புக்கு 35 மாணவர்களுக்குதான் இடமுள்ளது. ஆனால் நாங்கள் ஏற்கெனவே 45 மாணவர்களை சேர்த்துள்ளோம். இந்த கல்வியாண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அட்மிஷன் போட முடியவில்லை. வகுப்புகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ‘நாங்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்துள்ளோம். அந்தத் தரத்துக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள்’ என தினசரி வந்து காத்திருக்கின்றனர்.

மசக்காளிபாளையம் பள்ளி

அட்மிஷன் இல்லை என்றவுடன் பல பெற்றோர் மிகுந்த வருத்தத்தோடு திரும்பி செல்கின்றனர். எங்கள் பள்ளிக்கு தேவையான விஷயங்களை மாநகராட்சி ஆணையரிடம் சொல்லியுள்ளோம். அனைத்து வசதிகளையும் செய்துத்தருவதாக கூறியுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கூகுள் மீட், வாட்ஸப்பில் வகுப்பு எடுக்கிறோம். அந்த வசதி இல்லாதவர்களுக்கு சாதாரண போன்கால் மூலமாகவே வகுப்பு எடுத்து வருகிறோம். எங்கள் பள்ளியில் 50 கம்ப்யூட்டர்கள் உள்ளன. இனி 6 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கு முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மூலமாகவே பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

மசக்காளிபாளையம் பள்ளி
மசக்காளிபாளையம் பள்ளி
மசக்காளிபாளையம் பள்ளி

பள்ளி திறந்துவிட்டால், ஸ்மார்ட் வகுப்பறைகள், கோளரங்கம் அமைப்பது என்று பல திட்டங்களை வைத்துள்ளோம். கொரோனா இல்லாவிடின் நாட்டிலேயே முன் மாதிரியான பள்ளி என்ற நிலையை எட்டியிருப்போம். பள்ளி திறந்தவுடன் அடுத்தக்கட்ட பாய்ச்சல்களை காணலாம்” என்றார் நம்பிக்கையுடன்.

வாழ்த்துகள் ஆசிரியர்களே!



source https://www.vikatan.com/news/education/coimbatore-corporation-masakalipalayam-school-tops-in-admission

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக