இருண்ட வானமாகிப்போன இன்றைய இலங்கை கிரிக்கெட்டில் ஒற்றை நிலவாய் ஒளி கொடுத்துக் கொண்டிருக்கிறார் வனிந்து ஹசரங்கா.
90-களில் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனதும் இந்திய ரசிகர்கள் டிவியை ஆஃப் செய்ததைப்போல, தற்போது மிடில் ஆடரில் ஹசரங்கா விக்கெட் வீழ்ந்து விட்டால் டிவியை அணைத்துவிடுகிறார்கள் இலங்கை ரசிகர்கள்.
பேட்டிங், பெளலிங் என அத்தனையும் அத்துப்படி என்று அடித்து அசத்தும் ஆல்ரவுண்டராக மிரட்டுகிறார் ஹசரங்கா. அடுத்த ஐபிஎல்-ல் கோடிகளை அள்ளக்க்கூடிய வாய்ப்பு இப்போதே பிரகாசமாகத் தெரிகிறது.
பேட்டிங்கை விட ஹசரங்காவின் பெளலிங்தான் அணிக்கான பேராயுதம். 43 ஒயிட் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 48 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். வியக்கவைக்கும் அளவுக்கு அதிக விக்கெட்டுக்கள் கிடையாதுதான். ஆனால் எக்கானமியாகப் பந்து வீசுவதில் வல்லவன். அதாவது ஒரு 20/20 கிரிக்கெட்டிற்கு எது தேவையோ அதனை மிகச்சரியாக செய்பவன்தான் வனிந்து.
2017-ம் ஆண்டில்(19 வயதில்) அறிமுகப் போட்டியிலே ஹாட்ரிக் ரெக்கார்டுடன் சர்வதேச பயணத்தை ஆரம்பித்த ஹசரங்கா தொடர்ந்து அதே வேகத்தில் பயணிக்க முடியவில்லை. 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை அவரால் தொடர்ந்து வெளிப்படுத்தமுடியவில்லை. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் கூட இலங்கை அணி லெக் ஸ்பின்னராக ஜீவன் மென்டிஸைத்தான் பயன்படுத்தியது. பென்ச்சில் உட்காரக்கூட ஹசரங்காவுக்கு இடம் கிடைக்கவில்லை.
அதே ஆண்டில் டஸன் ஷனகா தலைமையில் இளம் படை ஒன்று 20/20 தொடருக்காக பாகிஸ்தான் சென்றது. அங்கு பலம் பொருந்திய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராகத் தன்னை நிரூபித்தார் ஹசரங்கா. அந்த தொடர் முழுதும் 72 பந்துகளை வீசிய ஹசரங்கா வெறும் 79 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து எட்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். இந்தத் தொடர் மூலம் புறக்கணிக்க முடியாத வீரராக உருவெடுத்தார் ஹசரங்கா.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் 66 பந்துகளை வீசி 74 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் ஹசரங்கா. இந்த ஆண்டு ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டங்களில் இவரது எக்கானமி 4 ரன்களைத் தாண்டிப் போகவேயில்லை. 72 பந்துகளை வீசி 42 ரன்களை மட்டுமே கொடுத்து எட்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார் ஹசரங்கா.
அதிலும் பொல்லார்ட் விக்கெட் எடுத்தது அற்புதம். அகிலா தனஞ்செயாவின் லெக் ஸ்பின்னில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்ஸ்கள் பறக்க விட்ட பொல்லார்ட்டை ஒரே கூக்ளியில் பெவிலியன் அனுப்பினார் ஹசரங்கா.
தற்போதைய ஐசிசி டி20 பெளலர் ரேங்கிங்கில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் வனிந்து ஹசரங்கா. இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறிப்பாக பிப்ரவரியில் இதே ரேங்கிங்கில் 52-வது இடத்தில் இருந்தார் வனிந்து.
இலங்கையின் இழந்த மாண்பை மீட்டெடுக்குத் துடிக்கும் வனிந்து ஹசரங்காவுக்கு வாழ்த்துகள்!
source https://sports.vikatan.com/cricket/how-wannindu-hasaranga-became-a-big-hope-for-srilanka-cricket
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக