சென்னை அம்பத்தூர், திருவேங்கடம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் லெனின் (36). இணையதள வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துவரும் இவர், கடந்த மாதம் அம்பத்தூர் காவல் நிலையத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, அம்பத்தூர் கிளை வங்கியில் தங்க நகைக் கடனுக்காக வைத்த தங்க நகையின் எடையைக் குறைத்து வங்கியின் நகை மதிப்பீட்டாளர் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்திருக்கிறார்.
லெனின் தன் புகார் மனுவில், ``21.02.2017 அன்று யூனியன் வங்கியின் அம்பத்தூர் கிளையில் தங்க நகைக் கடனுக்காக 74.4 கிராம் எடை கொண்ட ஆரம், வளையல் மற்றும் மோதிரம் உள்ளிட்ட 9 தங்க நகைகளை 1,26,000 ரூபாய்க்கு அடகுவைத்தேன். எங்கள் நகைகளை வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சண்முகம் என்பவர் மதிப்பீடு செய்து 74.4 கிராம் என்று எங்களிடம் ரசீது கொடுத்தார். அதற்குப் பிறகு, 17.05.2021 அன்று நகைகளை மீட்கச் சென்றபோது நான் 70 கிராம் தங்க நகை மட்டுமே அடகு வைத்ததாகக் கூறி, வங்கியில் 4.40 கிராம் எடை கொண்ட இரண்டு மோதிரங்களைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். எனவே, எனது நகையை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுவரை வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களின் உதவியுடன் ஏமாற்றுப் பேர்வழிகள் போலி நகைகளை அடகுவைத்துவிட்டு கோடிகளையும், லட்சங்களையும் ஏமாற்றிய கதைகளை ஏராளமாகக் கேட்டிருப்போம். அதற்கு, கடந்த வாரம் மீஞ்சூர் யூனியன் வங்கியில் 4.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். ஆனால், சமீபகாலமாக வங்கிகளில் பொதுமக்கள் தங்கள் நிதித் தேவைகளுக்காக அடகுவைக்கும் நகைகளை வங்கி ஊழியர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் நூதன முறையில் ஏமாற்றி, மோசடியில் ஈடுபடுவது தொடர்கதையாகிவருகிறது. அந்த வகையில், வங்கி மேலாளரின் கவனக்குறைவின் காரணமாக, வாடிக்கையாளர்களின் நகையைக் கையாடியிருக்கும் நகை மதிப்பீட்டாளரின் செயல் அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் நகைகளை வைத்திருக்கும் பொதுமக்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
Also Read: மீஞ்சூர்:`கவரிங் நகைகள்; போலி வாடிக்கையாளர்கள்!' - பல கோடிகள் சுருட்டிய நகை மதிப்பீட்டாளர் கைது
நகை மதிப்பீட்டாளர் தன் நகையில் 4.40 கிராமை ஏமாற்றிவிட்டதாக யூனியன் வங்கி மேலாளரிடமும், காவல்துறையினரிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்று மனம் குமுறிக் கொதிக்கும் லெனின், நம்மிடம் நடந்ததை விவரித்தார். ``2017-ல் 74.4 கிராம் எடைகொண்ட 9 தங்க நகைகளை அம்பத்தூர் யூனியன் வங்கிக் கிளையில் அடகுவைத்தேன். அதைத் தொடர்ந்து முறையாக வட்டியும் செலுத்திவந்தேன். 2019-ல் தங்க நகைக் கடனைப் புதுப்பித்தேன். அப்போது, வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சண்முகம் என்பவர் `வங்கி மேலாளர் இல்லை. அதனால் தங்க நகைப் புத்தகத்தில் மட்டும் கையெழுத்துப் போட்டுவிட்டுச் செல்லுங்கள்’ என்று கூறினார். நானும், வங்கியின் மீதிருந்த நம்பிக்கையில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டேன். அப்போது ரசீதில் 74.4 கிராம் என்று நகை எடையைச் சரியாகக் குறிப்பிட்டுக் கொடுத்தார்கள்.
அதற்குப் பிறகு, 2020, டிசம்பரில் வங்கிக்குத் தங்க நகைக் கடனை புதுப்பிக்கச் சென்றிருந்தேன். அப்போது, வங்கி மேலாளர் ஆதர்ஷ் பிரதாப் சிங் என்னுடைய கடனைப் புதுப்பிக்க முடியாது. முழுத் தொகையைச் செலுத்தி நகையை மீட்டுவிட்டு பின்னர் மீண்டும் புதிதாக அடகு வைக்குமாறு வற்புறுத்தினார். அதனால், அந்தநேரத்தில் புதுப்பிக்காமல் வந்துவிட்டேன். இந்தநிலையில், இந்த ஆண்டு மே மாதம், 17-ம் தேதி அன்று கடன் தொகையை முழுமையாகச் செலுத்திவிட்டு நகைகளை மீட்கச் சென்றிருந்தேன். கடன் தொகையான 1,26,000 ரூபாயை வட்டியுடன் முழுமையாகச் செலுத்திவிட்ட பிறகு, வங்கி மேலாளர் நான் அடகுவைத்த 74.4 கிராம் எடை கொண்ட 9 நகைகளுக்கு பதிலாக 70.00 கிராம் எடை கொண்ட 7 நகைகளை மட்டுமே என்னிடம் ஒப்படைத்தார். அதிர்ச்சியடைந்துபோன நான் உடனடியாக ரசீதைக் காட்டி, `நகையைக் குறைத்துக் கொடுத்துவிட்டீர்கள்’ என்று முறையிட்டேன். அதற்கு இந்தி மொழி மட்டுமே தெரிந்த வங்கி மேலாளர் ஆதர்ஷ் ஆங்கிலத்தில் `அதெல்லாம் சரியாகத்தான் கொடுத்துருக்கோம்... ரசீதுல தப்பா எழுதிட்டு இருப்பாங்க. போய் வேலையைப் பாருங்க’ என்று அலட்சியமாக ரசீதைக்கூட வாங்கிப் பார்க்காமல் பதிலளித்தார். பிறகு நான் என்னுடைய மனைவிக்கு இந்தி தெரியும் என்பதால் அவரை அழைத்துக்கொண்டு மீண்டும் வங்கிக்குச் சென்றேன்.
அப்போது, என் மனைவி ஹிந்தியில் பேசியபோது மட்டுமே மேலாளர் முறையாக பதில் கூறினார். நாங்களும், அவரிடம் எழுத்துபூர்வமாக நகை குறைந்திருப்பது குறித்து புகார் அளித்தோம். அதற்குப் பின்னர், வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சண்முகம் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு `தெரியாமல் செய்துவிட்டேன். விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டால் என் வேலையே போய்விடும். கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள். நான் உங்களுடைய நகையையோ அல்லது அதற்கு ஈடான பணத்தையோ திருப்பிச் செலுத்தி விடுகிறேன். மேற்கொண்டு, இது குறித்து யாரிடமும் புகார் அளித்துவிடாதீர்கள்’ என்று கெஞ்சினார்.
ஆனால், 15 வருடங்களாக அதே வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியில் இருக்கும் சண்முகம் என்னைப் போன்று இனிமேல் யாரையும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக வங்கி மேலாளரிடம் அவர்மீது புகார் அளித்தேன். ஆனால், என்னுடைய புகார்மீது வங்கி மேலாளர் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்துவந்தார். அதனால், யூனியன் வங்கி சென்னை தலைமை அலுவலகத்துக்கும், வாடிக்கையாளர் மையத்துக்கும் மெயில் மூலமாகப் புகார் அனுப்பினேன். அங்கிருந்தும் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை.
இந்தநிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இந்த நகை மோசடி குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். நகை மதிப்பீட்டாளர் சண்முகம் மற்றும் வங்கி மேலாளரை அழைத்து விசாரித்த போலீஸார், சண்முகம் என்னிடம் பேசியிருந்த ஆடியோ பதிவைவைத்து அவர் மோசடியில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தனர். இதற்கிடையில், வங்கித் தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படாததால் இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புகார் மனு பதிவு செய்திருந்தேன்.
ஆனால், அங்கிருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதேபோல், நான் எழுத்துபூர்வமாகப் புகார் அளித்தும், அம்பத்தூர் காவல் நிலைய போலீஸார் (FIR) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யாமலேயே இரண்டு வாரங்கள் ஆகியும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நகை மதிப்பீட்டாளர் சண்முகம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டபோதிலும், நடவடிக்கை எடுத்து என்னுடைய நகையை மீட்டுக் கொடுக்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றனர். வங்கியில் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்னுடைய நகையின் மதிப்பு சுமார் 20,000 ரூபாய் இருக்கும்.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூர் காவல் நிலையத்தில் அதே அம்பத்தூர் யூனியன் வங்கியில், எங்களை ஏமாற்றிய அதே நகை மதிப்பீட்டாளர் சண்முகம் மீது மேலும் இரண்டு வாடிக்கையாளர்கள் தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாகப் புகார் அளித்திருக்கின்றனர். இன்னும் பல வாடிக்கையாளர்களை நகை மதிப்பீட்டாளர் சண்முகம் ஏமாற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதற்கிடையில், வங்கி மேலாளரும், வங்கி காவலாளியும் என்னைத் தனியாக அழைத்து என்னிடமிருக்கும் ஆதாரங்களை ஒப்படைத்தால் மட்டுமே என்னுடைய நகைகளை ஒப்படைப்போம் என்று மிரட்டினார்கள். ஆனால், நான் சட்டரீதியாக சந்தித்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். எனவே, நகை மதிப்பீட்டாளர் சண்முகத்தின்மீதும், அவருக்கு உடந்தையாக இருக்கும் வங்கி மேலாளர்மீதும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்னைப்போல் இன்னும் எத்தனை பேரை இந்த வங்கி ஊழியர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று பதைபதைக்கப் பேசி முடித்தார் லெனின்.
லெனின் புகாரை விசாரித்துவரும் அம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜியிடம் பேசினோம். ``புகார் மீது சி.எஸ்.ஆர் பதிவு செய்து விசாரித்துவருகிறோம். வங்கி மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் சண்முகத்திடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். வங்கி நிர்வாகத்தின் தரப்பில் விசாரணை செய்துவிட்டுச் சொல்வதாகக் கூறியிருக்கிறார்கள். அதேபோல், லெனின் ரிசர்வ் வங்கியிடமும் புகார் அளித்திருக்கிறார். அதனால், விசாரணையில் குழப்பங்கள் நிலவுகின்றன. மேற்கொண்டு, ரிசர்வ் வங்கி மற்றும் யூனியன் வங்கியில் அவர்கள் விசாரணையை முடித்துவிட்டு எங்களிடம் சொல்வதை வைத்துத்தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றார், உதவி ஆய்வாளர் ராஜி.
Also Read: மீஞ்சூர்:`கவரிங் நகைகள்; போலி வாடிக்கையாளர்கள்!' - பல கோடிகள் சுருட்டிய நகை மதிப்பீட்டாளர் கைது
வங்கியின் வாடிக்கையாளரான யாழ்வேந்தன் லெனினின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க யூனியன் வங்கி அம்பத்தூர் கிளையின் மேலாளர் ஆதர்ஷ் பிரதாப் சிங்கை தொடர்புகொண்டு பேசினோம். ஆங்கிலத்தில்கூட பேசாமல் இந்தியில் மட்டும் சில புரியாத வார்த்தைகளைப் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். மேலாளரிடம் முறையான விளக்கம் கிடைக்காத நிலையில், உதவி மேலாளர் ஹான்ஸியிடம் பேசினோம். ``இதையெல்லாம் நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது. வங்கியின் மேலாளரிடம்தான் கேட்க வேண்டும். நான் உங்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. நான் தற்போது பிஸியாக இருக்கிறேன்" என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
வங்கியின் உயரதிகாரிகள் என்ற முறையில் இருவரும் குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட இல்லாமல் அலட்சியமாக பதிலளித்ததால், யூனியன் வங்கியின் சென்னை வடக்கு மண்டல Grievance And Redressal அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் உடனடியாக துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்வதாகவும், சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் நம்மிடம் உறுதியளித்தனர்.
லெனின் காவல் நிலையத்தில் புகாரளித்த சில நாள்களுக்குப் பிறகு, அதே அம்பத்தூர் யூனியன் வங்கிக் கிளையில், அதே நகை மதிப்பீட்டாளர் சண்முகம் மீது மேலும் பல வாடிக்கையாளர்களின் புகார் அளித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த வாரம், மீஞ்சூர் யூனியன் வங்கிக் கிளையில் போலி வாடிக்கையாளர்கள் மூலம் கவரிங் நகைகளுக்கு தங்க நகைக் கடன் வழங்கி 4.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், அம்பத்தூர் கிளையில், ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் காவல் நிலையக் கதவுகளைப் புகார்கள் மூலம் பலமாகத் தட்டியும் போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது எனக் குமுறுகிறார்கள் வாடிக்கையாளர்கள்..!
source https://www.vikatan.com/news/crime/ambattur-union-bank-customers-filed-continues-fraud-complaints-against-a-appraiser-on-police-station
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக