தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ.க., 4 இடங்களில் வெற்றி பெற்றது. திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர். காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் டாக்டர் சி. சரஸ்வதி என 4 வேட்பாளர்கள் எம்.எல்.ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினர். முன்னதாக அவர் புதுச்சேரியில் வெற்றிபெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏக்களை சந்தித்ததும் குறிப்பிடதக்கது.
பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன், ``தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தோம். தமிழகத்திற்கு ஏற்கனவே மத்திய பா.ஜ.க அரசு தொழில் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதே போன்று தென் தமிழகத்திலும் அதிகமான தொழில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் வைத்திருக்கிறோம்.
இன்றைய தமிழக அரசியலில் நடக்கின்ற தேச பிரிவினைவாதம் அல்லது தேசத்துக்கு எதிரான சில சக்திகளுடைய செயல்பாடுகள் இருப்பதை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம். 4 எம்.எல்.ஏ-க்களும் தமிழக வளர்ச்சிக்காக பிரதமரிடம் பேசினார்கள். நதிநீர் இணைப்பு திட்டம் பற்றியும் பேசப்பட்டது. பிரதமர் மோடி தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்” என்றார்.
பிரதமர் மோடி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் அறிவுரை வழங்கினாரா என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக பா.ஜ.க தலைவர், ``பா.ஜ.க உறுப்பினர்கள் தண்ணீர் சேமிப்பு பற்றியும் நதிநீர் இணைப்பு குறித்து பேசியபோது ஜல்சக்தி தொடர்பாக ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்த வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை வைத்தார். அதேபோன்று மத்திய அரசாங்கத்தின் திட்டங்களையும் மக்களிடம் எடுத்து செல்லுங்கள் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்” என்றார்.
Also Read: டெல்லி விசிட் : 4 எம்.எல்.ஏ; 20 பேர் பட்டியல்; மோடியுடனான சந்திப்பில் சாதிப்பாரா எல்.முருகன்?!
காவிரி விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எல். முருகன், ``கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த தண்ணீர் பிரச்னை என்பது பெரிதாக இல்லை. காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. கடந்த வருடங்களில் தண்ணீரை சேமிக்க முடியாமல் நம்மிடமிருந்து கூட வீணாக கடலுக்கு சென்றது. அதனால் நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்” என்றார். மேலும் மேக்கேதாட்டு அணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``இதற்கு நிரந்தர தீர்வு என்பது நதிநீர் இணைப்பு ஒன்றுதான். தமிழக மக்கள் பிரச்னைக்கு தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி குரல் கொடுக்கும்” என்றார்.
நீட் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசப்பட்டதா என்று கேள்விக்கு பதிலளித்த எல். முருகன், ``நீட் தேர்வு தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் பேசவில்லை. ஆனால் நீட் தேர்வானது 2016 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நீட்தேர்வு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் தடை செய்ய முடியாது என்று தெரிந்தும் திமுக அதனை தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்தது. நிறுத்த முடியாது என்று அவர்களுக்கு தெரியும். அதற்காகத்தான் ஒரு குழுவை அவர்கள் அமைத்திருக்கிறார்கள்.
அந்த குழு நீட் தேர்வினுடைய பாதகங்களை ஆராய்வதாக தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் நீட் தேர்வு காரணமாகவும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவும் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்திருக்கிறது. இது நீட் தேர்வின் சாதகங்கள். ஆனால் அது குறித்து அவர்கள் ஆய்வு செய்யவில்லை. நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி மட்டுமே ஆராய்வதற்கு அந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும். தெரிந்துதான் இந்த ஒரு ஆணையத்தை அவர்கள் அமைத்திருக்கிறார்கள்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/l-murugan-press-meet-after-bjp-mlas-meeting-with-pm-modi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக