அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளருமான நிலோபர் கபில், வாணியம்பாடியில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
‘‘2001-ல் நடந்த வாணியம்பாடி நகரமன்ற தலைவர் தேர்தலில், ஜமாஅத் மூலமாக நான் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றேன். அந்த நேரம், நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. ஜெயலலிதா என்னைக் கவர்ந்ததால், அ.தி.மு.க-வில் இணைந்து உண்மையாகவும், மனசாட்சியுடனும் இருந்து வாணியம்பாடியில் கட்சியை வளர்த்திருக்கிறேன். தொடர்ந்து, 2006-ஆம் ஆண்டிலும் ஜமாஅத் மூலமாகவே நகரமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றேன். 2011-ல்தான் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு மீண்டும் நகரமன்றத் தலைவரானேன். ஜெயலலிதா என் உழைப்பினைப் பார்த்து, 2016 சட்டமன்ற தேர்தலில் எனக்கு ‘சீட்’ தந்து வெற்றிபெறச் செய்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பதவியில் அமரவைத்தார். ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சிக்குள் என்னென்னமோ நாடகம் நடந்தது. சசிகலாவுடன் பிரச்னை இருந்தது. இரண்டாகப் பிளவுப்பட்ட கட்சியை ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் இணைத்து சிறந்த முறையில் ஆட்சி செய்தனர். ஆட்சி மீது எந்த குறையும் இல்லை. ஆனால், நம்முடைய திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய குறைகள் இருக்கின்றன. மாவட்டச் செயலாளராக இருக்கிற முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, எந்தவொரு மீட்டிங்கிற்கும் என்னை அழைக்கமாட்டார். தகவலும் சொல்லமாட்டார். பேனரில்கூட என் போட்டோவைப் போடக்கூடாது என்று சொல்லுவார். என்னை இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே வீரமணி செயல்பட்டார். அதற்கான காரணம் தெரியவில்லை. வாணியம்பாடி நகரமன்றத் தேர்தலில், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு முதன் முறையாக வெற்றி பெற்றதும் நான்தான். இதற்குமேல், நகரமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வேறு யாரும் வெற்றி பெற முடியாது என்று ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்.
சட்டமன்ற தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் என்னுடைய வாணியம்பாடி தொகுதி ஒன்று மட்டுமே வெற்றி பெற்றது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல வேலைகளை செய்துள்ளதால்தான் அ.தி.மு.க இங்கு மீண்டும் வெற்றிபெற முடிந்தது. ஆனாலும், அதிக வாக்குகள் வித்தியாசம் இல்லை. ‘தேர்தல் பணியாற்றக்கூடாது’ என வீரமணி என்னைத் தடுத்தார். இருந்தாலும், நாட்டறம்பள்ளி ஒன்றியம், வாணியம்பாடி நகரம், உதயேந்திரம் பேரூராட்சி என தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வெற்றி வாய்ப்பைத் தேடி தந்தேன். இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றால் என் வீட்டில் நான்குப்பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மாதம் 13-ம் தேதி என் அம்மாவும், 20-ம் தேதி சகோதரியும் மரணமடைந்துவிட்டார்கள். இந்த துக்கத்திலிருந்த எனக்கு சிறிய ஆறுதல்கூட மாவட்டச் செயலாளர் வீரமணி சொல்லவில்லை.
என் தொகுதியில் எனக்குத் தக்க மரியாதை அளிப்பதில்லை என்பதால் கட்சியிலிருந்து விலக விருப்பப்படுகிறேன் என்று கடந்த 15-ம் தேதியே தலைமைக் கழகத்துக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தை சென்னையிலுள்ள எனது உறவினர் ஷபி என்பவர் மூலம் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கூறினேன். அவர் கொடுத்தாரா? இல்லையா? எனத் தெரியவில்லை. ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணியைத் தோற்கடித்த தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜி, என் அம்மா இறந்ததைப் பற்றி விசாரிக்க வருவதாகச் சொன்னார். ‘அருகில்தான் இருக்கிறேன். நானே நேரில் வருகிறேன் அண்ணா’ என்று தகவல் கொடுத்துவிட்டு தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜியைச் சந்தித்து, வெற்றி பெற்றதற்காக வாழ்த்து சொன்னேன். அவரும் என் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில், என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக டி.வி-யில் செய்தி வருகிறது.
துக்கத்தில் இருக்கும் சூழலில், நான்குநாள் விட்டுக்கூட நீக்கியிருக்கலாம். தலைமை எடுத்த நடவடிக்கை மனிதாபிமான செயல் இல்லை. வீரமணி என்ன பிறவி என்றே தெரியவில்லை. கட்சியிலிருந்து நீக்கியதால் வருத்தப்படவில்லை. சந்தோஷம்தான் பட்டேன். நானாக விலகுவதைவிட அவர்களாகவே கழற்றிவிட்டிருக்கிறார்கள். நான், மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறேன். கட்சியில் சில விதிமுறைகள் இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னை நீக்கும் முன் அழைத்து காரணம் சொல்லி விளக்கம் கேட்டிருக்க வேண்டுமா? இல்லையா?
அடுத்து, எனக்குப் பொலிடிக்கல் பி.ஏ-வாக இருந்த பிரகாசம் செய்த பண மோசடி விவகாரத்துக்கு வருகிறேன். 2016 சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்காக 80 லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்துள்ளதாக பிரகாசம் கூறுவது முற்றிலும் பொய். அந்த நேரத்தில், என் கட்சிக்காரர்கள் நான்கைந்து பேர் எனக்கு பண உதவி செய்தார்கள். எனக்குத் தேர்தல் பணி செய்த ஒரே காரணத்திற்காகத்தான் பொலிடிக்கல் பி.ஏ-வாக வைத்துக்கொண்டேன். அவர் யார் யாரிடம் பணம் வாங்கினார்? எவ்வளவு வாங்கினார்? எதற்காக வாங்கினார்? என்பது என் கவனத்துக்கு வரவே இல்லை. எனக்குத் தெரியாமலேயே பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது.
பிரகாசம் வாங்கிய பணத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அமைச்சராக இருக்கும்போது, 6 கோடி ரூபாய்க்காக என் பெயரைக் கெடுத்துக்கொள்வேனா? தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் ரூ.10 கோடியாவது வேண்டும். அந்தப் பணம் 6 கோடி ரூபாய் என்னிடம் இருந்திருந்தால், இந்த தேர்தலிலும் மீண்டும் சீட் கேட்டு சண்டைப் போட்டிருப்பேன். ஜெயசுதா என்ற பெண் புகாரளித்தப் பின்னரே இந்த விவகாரம் எனக்குத் தெரியவந்தது. சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். பொலிடிக்கல் பி.ஏ பொறுப்பிலிருந்து பிரகாசத்தை ஏற்கெனவே நீக்கிவிட்டேன். அவர் பணம் கேட்டு என்னை மிரட்டுவது தொடர்பாகவும் ஏப்ரல் மாதமே திருப்பத்தூர் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறேன். கட்சியிலிருந்து என்னை நீக்கியதற்கு பண மோசடி புகார்தான் காரணம் என்றால் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் மோசடி புகார்கள் இருக்கின்றன. முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதும்கூட ஊழல் புகாரைத் தளபதி (இப்போதைய முதல்வர் ஸ்டாலின்) கொடுத்திருக்கிறார்’’ என்றவரிடம்,
‘‘நீங்கள் தி.மு.க-வில் சேரப்போவதாகவும் தகவல்கள் வருகின்றன. அது உண்மையா?’’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நிலோபர் கபில், ‘‘தி.மு.க-வில் சேரப்போகிறேனா, இல்லையா? என்பதை விரைவில் தெரியப்படுத்துவேன். எந்த கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். அதேசமயம், எந்த கட்சியில் என் உழைப்பை ஏற்றுக்கொள்கிறார்களோ, அந்த கட்சியை ஆதரிப்பேன்’’ என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/former-admk-minister-nilofer-kabils-explanation-for-the-allegations
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக