தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், பொன்ராஜ். 28 வயது நிரம்பிய கூலித் தொழிலாளியான, பொன்ராஜின் மனைவி சங்கீதா (26). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
சங்கீதாவுக்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆறு மாதங்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கிறார்கள். அதன் பின்னர் இருவரும் நிரந்தரமாகப் பிரிய முடிவெடுத்ததால் பெற்றோர் சம்மதத்துடன் சங்கீதா இரண்டாவதாக பொன்ராஜை திருமணம் செய்துள்ளார்.
தன்னைப் பிரிந்த முதல் மனைவி சங்கீதாவுக்கு இரு மாதங்களுக்கு முன்பு மறுமணம் நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கண்ணன் கோபம் அடைந்திருக்கிறார். தன்னுடன் வாழ மறுத்த சங்கீதா வேறொரு நபருடன் வாழக்கூடாது என கோபத்தில் முடிவெடுத்த அவர், சங்கீதாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு பத்திரிகை கொடுக்கச் செல்வது போல வாகைக்குளத்தில் இருந்து புறப்பட்டு கல்லூத்து கிராமத்துக்குச் சென்ற கண்ணன், அங்குள்ளவர்களிடம் சங்கீதாவின் வீடு எங்கிருக்கிறது எனக் கேட்டுள்ளார்.
சங்கீதாவின் வீட்டைக் கண்டுபிடித்த கண்ணன் அங்கு சென்றபோது பொன்ராஜ் வேலைக்குச் சென்றிருந்தார். அதனால் சங்கீதா மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்த கண்ணன், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத சங்கீதா உதவி கேட்டு அலறியிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வருவதற்குள் கண்ணன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அறிந்ததும் சுரண்டை ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த விஷயங்கள் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட சங்கீதாவின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தப்பியோடிய கொலையாளியான முதல் கணவன் கண்ணனை போலீஸார் தேடி வருகிறார்கள்.
source https://www.vikatan.com/news/crime/women-murdered-by-her-first-husband-after-second-marriage
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக