நடிகர் விஜய்யின் 'ரோல்ஸ்ராய்ஸ் கார்' வரிவிலக்கு விவகாரத்தில், கடந்தவாரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த 'ஆதரவு - எதிர்ப்பு' விமர்சனங்கள் இணைய உலகை கிடுகிடுக்க வைத்தன!
இதையடுத்து, கார் வரிவிலக்கு விவகாரத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆட்சேபித்து விஜய் தரப்பு மேல்முறையீடு சென்றது. அதில், 'இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான நுழைவு வரியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்யவும் தன் மீதான தனிப்பட்ட விமர்சனத்தை நீக்ககவும்' விஜய் கோரியுள்ளார் என தகவல் வெளியானது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் உரிய அமர்வுக்கு மாற்ற பதிவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜய் கார் வரிவிலக்கு தொடர்பான தனது கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டுவரும் நடிகை கஸ்தூரியிடம் இந்த விவகாரம் குறித்த நமது கேள்விகளை முன்வைத்தோம்....
''தனது ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே...?''
''வரியைக் குறைப்பதற்காக சட்ட ரீதியான முயற்சியைத்தான் விஜய் மேற்கொண்டிருக்கிறார். மற்றபடி வரி கட்டுவதைத் தவிர்க்கவோ அல்லது ஏய்க்கவோ அவர் முயற்சி செய்யவில்லை. சாதாரணமான கார் வாங்குபவர்களேகூட, அதிக வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காக புதுச்சேரியில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யக்கூடிய சூழலை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். எனவே, சட்ட ரீதியாக வரிக் குறைப்புக்கு முயற்சி செய்த விஜய் மீது எந்தத் தவறும் இல்லை!''
''சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றெல்லாம் நீதிமன்றம் கண்டித்திருப்பது சரிதானா?''
''சட்டம் என்பதே மக்களுக்கானதுதான். சட்டம் காட்டுகிற வழிமுறைகளை மீறி நடந்தால், அது சமூகத்திலும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவேதான் சட்டத்தை உருவாக்குபவர்களும், அதைப் பாதுகாப்பவர்களும் இதுபோன்ற அறிவுரைகளை வழங்குகிறார்கள்.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில், மனுதாரர் 'நடிகர் விஜய்' என்பதும் குறிப்பிடப்படவில்லை என்பதால்தான், நீதிபதி அதுகுறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், இதுபோன்ற வழக்குகளில், 'நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்' என்று வெறுமனே சொல்லி, கடந்துபோய்விட முடியாது. 'ஏன் இந்த அபராதத் தொகை விதிக்கப்படுகிறது, கடந்த காலங்களில் இதுபோன்று எத்தனை வழக்குகள் வந்தன, இன்றைய தீர்ப்பு நாளைய சமுதாயத்தில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதையெல்லாம் யோசித்து தீர்ப்பு வழங்குவதுதான் ஒரு நல்ல நீதிபதிக்கு அழகு!''
''வரி குறைப்பு கேட்பது, குடிமக்களின் உரிமை; அவர்களை நடிகர் என்று பார்ப்பது தவறு என கார்த்தி சிதம்பரம் சொல்கிறாரே?''
''இல்லையில்லை... விஜய் ஒரு நடிகர் என்பதாலேயே இப்படியொரு உத்தரவு கிடைத்திருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. சமூகத்தில் பெரும்புள்ளியாக, கோடிக்கணக்கான மக்களுக்கு முன் உதாரணமாக நடிகர் விஜய் இருக்கிறார். படங்களில் ஹீரோயிஸமாக நடிப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் தங்கள் செயல்பாட்டை பிரதிபலிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் நீதிமன்ற உத்தரவில் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில், மக்களுடைய பார்வையில் இருப்பவர்கள் எப்போதுமே கொஞ்சம் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும். இது சினிமா உலகில் இருப்பவர்களுக்கேயான சாபம்! நாட்டில் எத்தனையோபேர் எப்படியெல்லாம் நடந்துகொண்டாலும் கண்டுகொள்ளாத உலகம், சினிமா உலகில் இருப்பவர்களைப் பற்றி மட்டுமே தொடர்ந்து கிசுகிசு பரப்பிவரும்.
பணத்துக்கு குறைவில்லாத, எல்லோராலும் போற்றக்கூடிய இடத்திலும் இருக்கிற விஜய், நியாயம் தன் பக்கத்தில் இருப்பதாக நினைத்திருந்தாலும்கூட நாட்டுக்கு கொடுக்கக்கூடிய நன்கொடையாக நினைத்து வரியைக் கட்டியிருந்திருக்கலாம்!
கடந்தகாலத்தில், சச்சின் டெண்டுல்கரும் இதேபோன்றதொரு சர்ச்சையில் சிக்கினார். சமூக ஊடகம் பிரபலமாகாத அந்த நாட்களிலேயே சச்சின் டெண்டுல்கரை மக்கள் கழுவி ஊற்றினார்கள். 'பிரபலங்கள் மக்களுக்கு உதாரணப் புருஷர்களாக இருக்கவேண்டும்' என்ற விமர்சனங்களும் அப்போதே எழுந்தன.''
Also Read: மும்பை: `நான் நலமுடன் தான் இருக்கிறேன்!’ -மரணம் தொடர்பான வதந்திக்கு மேயர் கிஷோரி விளக்கம்
''ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கரின் வெளிநாட்டுக் காருக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிற முன்னுதாரணம் இருக்கிறதுதானே?''
''நடிகர் விஜயை தென்னிந்தியா முழுக்க தெரியும் என்று சொன்னால், சச்சின் டெண்டுல்கரை உலகம் முழுக்கவே தெரியும். அவரை கிரிக்கெட் துறையில் கடவுளாகவே பார்க்கிறார்கள். ஆனால் அவரும்கூட 2002-ல் தனக்குப் பரிசாகக் கிடைத்த வெளிநாட்டு காருக்கு, இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கும்படி நேரடியாக மத்திய அரசிடமே கேட்டார். அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான அரசும், வரிவிலக்கு அளித்தது. ஆனால், 'கோடி கோடியாக சம்பாதிக்கும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய காருக்குகூட வரி செலுத்தமாட்டாரா...' என அப்போது பொதுமக்கள் அவரைக் கழுவி ஊற்றினர்.
நடிகர் விஜய், கடந்த 2012-ம் ஆண்டு இறக்குமதி வரியை செலுத்தித்தான் இந்த ரோல்ஸ்ராய் காரை வாங்கியிருக்கிறார். பின்னர் அந்த காரை தமிழ்நாட்டுக்குள் பயன்படுத்துவதற்காக பதிவு செய்ய முற்படும்போதுதான் நுழைவு வரி கட்டியாக வேண்டும் என்ற பிரச்னை எழுகிறது. ஆக, மாநில அரசு கேட்ட நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டுத்தான் அவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.''
Also Read: கோவை: ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள்! -ரயில் நிலையத்தில் சிக்கிய நைஜீரியா நாட்டுக்காரர்
''ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெய பிரதீப், சச்சின் டெண்டுல்கருக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாரே?''
''2012-ம் ஆண்டு தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருந்தது ஜெயலலிதாதான். சச்சினுக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கு, விஜய்க்கு கிடையாதா என்ற ரீதியில் ஜெய பிரதீப் கேள்வி கேட்கிறாரே... 2012-ல் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சி செய்தது, முதல் அமைச்சராக யார் இருந்தார் என்பதையெல்லாம் யோசிக்காமலே கேட்டுவிட்டாரோ ஜெயபிரதீப்?''
''கார் வரிவிலக்கு விவகாரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பு ஆட்சேபகரமாக இருப்பதாகக்கூறி விஜய் தரப்பு மேல் முறையீடு செய்திருக்கிறதே...?''
''நான் சட்டம் படித்திருந்தாலும்கூட, வழக்கறிஞராகப் பயிற்சி செய்யவில்லை. எனவே, இன்றைய சூழலில் உள்ள நீதிமன்ற நடைமுறையைத்தான் நான் சொல்கிறேன். எந்தவொரு தீர்ப்புமே ஒரு வரியில், மணிரத்னம் பட பாணியில் இருக்காது. ஒரு முன்னுரை, தீர்ப்பு, பின்னுரை, நீதிபதியின் சொந்த கருத்து என எல்லாம் கலந்துதான் இருக்கும். மற்றபடி, தீர்ப்புகளை தங்களது சொந்த விருப்பு, வெறுப்புகளை முன்வைத்துத்தான் எழுதக்கூடாது!''
source https://www.vikatan.com/government-and-politics/policies/actress-kasthoori-interview-on-vijays-rolls-royce-car-tax-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக