Ad

வெள்ளி, 2 ஜூலை, 2021

மெட்ராஸ் ஐஐடி: சாதிப் பாகுபாடு... பேராசிரியர் ராஜினாமா; எரிந்த நிலையில் சடலம்! -அடுத்தடுத்து சர்ச்சை

நாடு முழுவதுமுள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது கடந்த சில வருடங்களில் தொடர்கதையாகிவருகிறது. குறிப்பாக மத்திய கல்வி நிறுவனமான மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாகத் தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கையும் அதிக அளவில் பதிவாகிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்லூரிக்கு மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதும், மதிப்பெண் குறைவாக எடுப்பதுமே இத்தகைய தற்கொலைகளுக்கும், படிப்பைப் பாதியில் விட்டுச் செல்வதற்கும் காரணம் என்று ஐஐடி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவந்தாலும், மறுபுறம் கல்வியாளர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் ஐஐடி-யில் சாதி, மத, நிறப் பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தால்தான் மாணவர்கள் பாதியில் நின்றுவிடுவதாகவும், வேறு வழியே இல்லாமல் தற்கொலை முடிவைக் கையிலெடுப்பதாகவும் குற்றசாட்டைகளை முன்வைத்த வண்ணமாக இருந்துவருகின்றனர்.

ஐஐடி மெட்ராஸ் முன்னாள் பேராசிரியை வசந்தா கந்தசாமி

இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும்விதமாகவே ஐஐடி மெட்ராஸின் சமீபத்தியச் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. முன்னதாக, ஐஐடி மெட்ராஸின் முன்னாள் பேராசிரியை முனைவர் வசந்தா கந்தசாமி, சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில்தான் ஐஐடி-யில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், தன்னைவிடவும் உயர்ந்த சாதியினர் பணிக்கான போட்டியிலிருந்ததால், தனக்கு வாய்ப்பு வழங்காமல் உயர்ந்த வகுப்பைச் சார்ந்தவர்களுக்குச் சாதியின் அடிப்படையில் ஐஐடி நிர்வாகம் பணி வழங்கியதாக குற்றம்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நெடு நீள சட்டப்போராட்டத்தை நடத்தினார்.

அதில் நீதிமன்றம், மெட்ராஸ் ஐஐடி-யில் சாதியப் பாகுபாட்டுக்கான முகாந்திரம் உள்ளதாகக் கூறி கடுமையாக எச்சரித்திருந்தது. அதைத் தொடர்ந்து, மெட்ராஸ் உள்ளிட்ட இந்தியாவின் பல ஐஐடி-களின் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த சாதி, மதப் பாகுபாடுகள், பாரபட்சங்கள் குறித்து பொதுவெளியில் பேசத் தொடங்கினர். இப்படி சாதியச் சர்ச்சைகளும், புகார்களும் ஐஐடி மெட்ராஸைச் சுற்றிக்கொண்டிருக்க, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிப்போட்டது கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திஃப்-ன் தற்கொலைச் சம்பவம்.

சென்னை ஐஐடி-யில் எம்.ஏ ஹியுமானிட்டிஸ் அண்ட் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (ஒருங்கிணைந்த) பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்துவந்த மாணவி பாத்திமா 2019-ம் ஆண்டு, நவம்பர் 9-ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாத்திமா தனது தற்கொலைக் குறிப்பில் ஐஐடி பேராசிரியர்கள் பலரது பெயர்களைச் சொல்லி, தனது மரணத்துக்கு அவர்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, தான் ஓர் இஸ்லாமியர் என்பதால் தன்னை ஆசிரியர்கள் அவதூறாகப் பேசுவதாகவும், மதரீதியாகத் தன்னைத் துன்பறுத்துவதாகவும் பாத்திமா தங்களிடம் கூறியதாக அவருடைய பெற்றோர் கூறியிருந்தனர். மத்திய அரசின் கல்வி நிறுவனம் என்பதால், தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

பலகட்ட விசாரணைகள் நடந்தும், தற்போது வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர். மாணவர்கள் தாங்கள் சாதியக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுவதாகக் கூறிவரும் வேளையில், மறுபுறம் ஆசிரியர்களும்கூட சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஐஐடி-யில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா

சமீபத்தில் மத்திய அரசு 2020-ம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், நாட்டிலேயே அதிக ஓ.பி.சி மற்றும் எஸ்.சி பிரிவு உயர்கல்வி ஆசிரியர்கள் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு சமூகநீதியைத் தலைநிமிரச் செய்திருந்தது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு அப்பாற்பட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் ஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஏராளமானோர் பணிக்கு தேர்வாகிவருகின்றனர். ஆனால், அவர்களில் 10-ல் 7 பேர் நிர்வாகத்தில் நிலவும் சாதிய ஆதிக்கத்தின் காரணமாகப் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு, மனதளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் உதவிப் பேராசிரியர் ஒருவர் ஐஐடி மெட்ராஸில் சாதிய பாகுபாடு நிலவுவதாகக் கூறி ராஜினாமா கடிதம் அளித்து பணியிலிருந்து விலகியிருப்பதும், கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் பாதி எரிந்துபோன சடலம் ஐஐடி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உதவிப் பேராசியரின் ராஜினாமா கடிதம்!

ஐஐடி மெட்ராஸில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியில் துறையில் 2019-ம் ஆண்டு முதல் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துவரும் விபின் என்பவர் நேற்று ஐஐடி மெட்ராஸ் நிர்வாகத்துக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதில் விபின், ``நான் மெட்ராஸ் ஐஐடி-யிலிருந்து விலகி வேறு ஒரு கல்வி நிறுவனத்தில் பணியில் சேரவிருக்கிறேன். நான் இங்கிருந்து விலகுவதற்கு மிக முக்கியக் காரணம். இங்கு நிலவிக்கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுதான். நான் 2019, மார்ச் மாதத்தில் பணிக்குச் சேர்ந்ததிலிருந்து என்னுடைய மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல்துறையில் சாதிரீதியிலான பாகுபாடுகளை அதிகமாக அனுபவித்துவருகிறேன். இத்தகைய பாகுபாடுகளுக்கு உயரதிகாரத்தில் இருக்கும் சில தனி நபர்கள்தான் காரணம். ஐஐடி-யில் சாதிப் பாகுபாடு தொடர்பான தனிநபர்களின் வழக்குகளை கவனித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். மேலும் அந்தக் குழுவில், எஸ்சி / எஸ்டி கமிஷன், ஓபிசி கமிஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் இடம்பெற்றிருக்க இருக்க வேண்டும்" என்று விபின் குறிப்பிட்டிருந்தார்.

உதவிப் பேராசிரியர் விபினின் ராஜினாமா கடிதம்

உதவி பேராசிரியர் விபினின் இ-மெயில் கடிதம் ஐஐடி-யைச் சேர்ந்த மற்றோர் ஆசிரியர் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மாணவி பாத்திமாவின் மரணத்தைத் தொடர்ந்து உதவிப் பேராசிரியர் விபினின் குற்றச்சாட்டுக் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகச் செய்தி நிறுவனங்கள் விபினைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முயற்சித்தன. இருப்பினும், மெட்ராஸ் ஐஐடி குறித்து விபின் பொதுவெளியில் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விபினின் இந்த மின்னஞ்சல், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மற்றும் மெட்ராஸ் ஐஐடி முன்னாள் மாணவர்கள் குழுக்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

இது குறித்து டைம்ஸ் நவ் பத்திரிகை ஐஐடி மெட்ராஸ் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ``நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து பெறப்படும் எந்த ஒரு புகார் மீதும் அதற்கென நடைமுறையில் உள்ள வழிமுறைகளின்படி உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது. நேற்று காலை சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய உதவிப் பேராசிரியரின் ராஜினாமா கடிதம் குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், திமுக சாதி, மதப் பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், மெட்ராஸ் ஐஐ-டியில் என்ன நடக்கிறது என்று ஒன்றிய அரசு முறையாக ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேற்று காலை விபினின் ராஜினாமா கடிதம் இணையத்தில் வைரலான நிலையில், நேற்றிரவு ஐஐடி மெட்ராஸ் வளாகத்துக்குள் பாதி எரிந்த நிலையில் மாணவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தது கேரளாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், உயிரிழந்தவரின் அடையாளம் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. ஐஐடி மெட்ராஸின் ஹாக்கி மைதானத்துக்கு அருகிலுள்ள புதர் ஒன்றிலிருந்து மாணவரின் உடலைப் பாதி எரிந்துபோன நிலையில் சுமார் 8 மணியளவில் சிலர் கண்டறிந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

ஐஐடி மெட்ராஸ்

இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், ``கைப்பற்றப்பட்டுள்ள உடலில் முகப் பகுதியில் எந்தவிதத் தீக்காயமும் இல்லை. மற்ற பகுதிகள் பாதி எரிந்து காணப்படுகின்றன. சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் ஆராய்ந்ததில் அருகில் இல்லை. உயிரிழந்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்று வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்" என்றனர்.

`மெட்ராஸ் ஐஐடி தனது சாதி, மத, நிறப் பாகுபாடுகளையும், பாரபட்சங்களையும் களைந்து, நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைத்து, எல்லோருக்குமான கல்வி நிறுவனம் என்ற நிலைக்கு மாற வேண்டும்’ என்று கல்வியாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/education/iit-madras-assistant-professor-resigns-due-to-caste-discrimination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக