எல்லா உலோகங்களையும் எரித்துவிடும் அமிலத்தால் தங்கத்தை எரிக்க முடிவதில்லை... நேற்றைய தேசிய மருத்துவர் தினத்தன்று நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், தங்களது சேவைகளுக்காக கௌரவிக்கப்பட்ட செய்திகள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட, அனைத்தையும் தனது கருப்புக் கண்ணாடியின் மூலம் புன்னகையுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் ஒரு பெண் மருத்துவர்.
டாக்டர் Y.N. மகாலக்ஷ்மி... கர்நாடக மாநிலம் மைசூரின் பழைய அக்ரஹாரம் என்ற ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவரான இவரது முகத்தை N95 மாஸ்க் மட்டும் மறைக்கவில்லை. கூடவே ஒரு பெரிய கருப்புப் கண்ணாடியும் மறைக்கிறது.
"நல்ல வெளிச்சத்தை நேரடியாகப் பார்க்கும்போது எனது கண்கள் கூசும்.. அதனால் தான் கண்ணாடியை தொடர்ந்து அணிய வேண்டியிருக்கிறது" என்றபடி கண்ணாடியை முகத்தை விட்டு இறக்கினால், அவரைக் காண நமது கண்கள் கூசுகிறது... மனம் வெதும்புகிறது.
ஆம்... டாக்டர் மகாலக்ஷ்மியின் இடது பக்க கண் இமைகள் கண்ணைத் திறக்க விடாமல் முழுவதும் சுருங்கி மூடியிருக்க, இடது காதுமடல் மற்றும் இடதுபக்க முகம் முழுவதும் தழும்புகள் என்றாலும் உதட்டில் மட்டும் நிரந்தரப் புன்னகை.
"நேற்று நடந்தது போல இருக்கிறது அந்தச் சம்பவம். 2001-ம் ஆண்டு, ஜனவரி மாதம், 11-ம் தேதியன்று க்ளினிக்கை முடித்துவிட்டு வெளியே வந்தபோது எதிரே வந்த அவனது கைகளில் ஒரு பாட்டில் இருந்தது. ஏதோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்று எனக்குத் தோன்றியபோதே அது நடந்தும்விட்டது" என்று நினைவுகூறும் டாக்டர் மகாலக்ஷ்மி, மைசூர் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் பயின்றபின், மேற்படிப்பு, திருமணம் ஆகியவற்றிற்கு காத்திருந்த நாட்களில், பெங்களூரின் ஜே.பி. நகரில் க்ளினிக் ஒன்றை நடத்தி வந்தார்.
அந்த க்ளினிக் பில்டிங்கின் உரிமையாளரான நாற்பது வயதிற்கும் மேலான சிக்கபசவய்யா தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் தனது க்ளினிக்கை இடம்மாற்றிக் கொண்டிருக்கிறார் இருபத்தியாறு வயதேயான டாக்டர் மகாலக்ஷ்மி.
ஆனால், உள்ளூரில் செல்வாக்கு மிக்கவரான சிக்கபசவய்யா அந்தப் பெண் இடம்மாறிய பிறகும் தொல்லைகள் தந்ததோடு, அவரது அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தர மறுக்கிறார். போலீசாரிடம் மகாலக்ஷ்மி புகார் அளிக்க, அதை தனக்கு நேர்ந்த அவமானமாக சிக்கபசவய்யா கருதியதால் அதற்குப்பின் நடந்ததுதான் அந்த சம்பவம்.
இரவு எட்டு மணிக்கு எப்போதும் போல தனது க்ளினிக்கை பூட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்பிய மகாலக்ஷ்மியின் எதிரே வந்த அந்த மிருகம், கையிலிருந்த பாட்டிலைத் திறந்து அவர் சுதாரிப்பதற்குள் அந்த அரையிருட்டிலும் சரியாக மகாலக்ஷ்மி மீது ஆசிட்டை வீசிவிட்டு தலைமறைவாகி இருக்கிறான்.
வீசிய ஆசிட் இடதுபக்க கண், காது முகம் முழுவதும் வழிந்தோடி, தீப்போல எரிய, வலியில் துடிதுடித்த மகாலக்ஷ்மிக்கு அப்போது உதவியது அருகிலிருந்த ஒரு பெண்ணும் அவரது ஐந்து வயது சிறுவனும்தான். அவசரமாக ஓர் ஆட்டோவைப் பிடித்து, உடனடியாக அருகிலிருந்த ஒரு மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் சென்றதும் தப்பித்து விடுவோம் என்று நினைத்த மகாலக்ஷ்மிக்கு அப்போது தெரியவில்லை, இனி மருத்துவமனையில் தான் தனது வாழ்க்கையின் பெரும் பகுதி கழியப்போகிறது என்று.
ஆம்... சிக்கபசவய்யா வீசிய அமிலம், அவரது இடது கண்ணை, இடது காதுமடலை. இடதுபக்க முகத் தசைகளை முழுவதுமாய் உருக்கியிருந்தது. அதைச் சரிசெய்ய கிட்டத்தட்ட 25 முறை, முக சீரமைப்பு அறுவை சிகிச்சைகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றாலும் பழையநிலையை அவரால் முழுவதுமாக அடையமுடியவில்லை. வலியுடனும், வேதனையுடனும் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட தனக்கு அப்போது ஆதரவாக இருந்தது அவரது பெற்றோர்கள் மட்டுமே என்கிறார் மகாலக்ஷ்மி.
தன்மீது ஆசிட் தாக்குதலை நடத்திய சிக்கபசவய்யாவின் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தயங்க, வழக்கு தொடுக்கவே மகாலக்ஷ்மி போராட வேண்டியிருந்தது. 'போதிய சாட்சி இல்லை என்பதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்ற கீழ்கோர்ட் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. என்றாலும், நம்பிக்கையுடன் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையிட்டிருக்கிறார்.
ஒருபக்கம் அறுவைசிகிச்சைகளின் வலி, மறுபக்கம் வழக்கு விசாரணைகள் என வேதனைகள் அலைக்கழித்தாலும், அனைத்தையும் பொறுத்துக் கொண்ட மகாலக்ஷ்மி மகிழ்ச்சி என்ற உணர்ச்சியை மீண்டும் அடைந்தது 2012ம் ஆண்டுதான். தனது வாழ்க்கையையே இல்லாமல் செய்த அந்தக் கொடியவனுக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், இருபதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்க, பதினோரு வருடங்கள் கழித்து முதன்முறையாக சிரித்தார் மகாலக்ஷ்மி.
"தாமதமானாலும் நிச்சயம் நீதி மறுக்கப்படாது என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை. என்றாலும் இதுபோன்ற செயல்களுக்கு ஆயுள் தண்டனை போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறேன்" என்ற டாக்டர் மகாலக்ஷ்மி, "உண்மையில் இத்தனை போராட்டங்களுக்கும் ஆணிவேராக இருந்தது எனது கல்விதான். அதிலும் பெண்கள் என்றால் போராட்டம் அதிகம் எனும்போது அதற்கு உங்கள் கல்வி மட்டுமே உதவும்" என்கிறார்.
ஓரளவு இவற்றிலிருந்து மீண்டு வந்த மகாலக்ஷ்மி தொடர்ந்து தனது மருத்துவப் பணிகளை மேற்கொள்ள வேண்டி, மைசூரின் பழைய அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராகப் பணியில் சேர்கிறார். இன்றும் தினமும் குறைந்தது நூறு வெளிநோயாளிகளுக்காவது சிகிச்சையளித்து வருகிறார். மேலும், தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, மனவியல் ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வு வழங்கி வருவதுடன், அவர்களுக்கு அரசின் உதவி கிடைக்கப்பெறவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த கோவிட் பெருந்தொற்று காலத்திலும் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணிபுரியும் டாக்டர் மகாலக்ஷ்மி, "இங்கு ஓரளவு கோவிட் நோய் கட்டுக்குள் வந்துள்ளது என்றாலும், தடுப்பூசிக்கான விழிப்புணர்வு பெரிதும் தேவைப்படுகிறது என்பதால் விடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார். அதற்கேற்றவாறுஅவரது அலுவலக அறைக்கு உள்ளேயும் வெளியேயும், கோவிட் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பேனர்கள் நிறைய தொங்கிக் கொண்டிருக்கிறது.
கடைசியாக, இந்த மருத்துவ தினத்தன்று நீங்கள் மற்ற மருத்துவர்களுக்கு கூற விரும்பும் செய்தி என்ன என்று கேட்டேன். "இந்த கோவிட் நோய், மருத்துவர்களின் சுயநலமற்ற சேவையை, மருத்துவர்களின் தியாகத்தை, இந்த சமுதாயத்திற்கு நன்றாகவே சுட்டிக் காட்டியுள்ளது என்றாலும் மருத்துவர்களும் தங்களது உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவும் இதுபோன்ற அழுத்தம் நிறைந்த தருணங்களில் மருத்துவர்கள் மனதால் முடங்கிவிடாமல், எப்போதும் போராடத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று சிரித்தபடி கூறி, மீண்டும் கருப்புக் கண்ணாடியை அணிந்து தனது பணிகளைத் தொடர்கிறார் டாக்டர் மகாலக்ஷ்மி. ஆம்... எல்லா உலோகங்களையும் எரித்துவிடும் அமிலத்தால் மகாலக்ஷ்மி எனும் தங்கத்தை எரிக்க முடியவில்லை!
source https://www.vikatan.com/news/healthy/story-of-inspirational-doctor-and-acid-attack-victim-mysore-mahalakshmi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக