Ad

புதன், 21 ஜூலை, 2021

திருவாரூர்: மதுபாட்டில்களை கடத்தியவர்கள் விடுவிப்பு! - ஆய்வாளர் உட்பட 6 பேர் மீது அதிரடி நடவடிக்கை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர், சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அவர்கள் தங்களது உடலில் டேப் சுற்றி ஏராளமான மதுபாட்டில்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் அந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் மதுவிலக்கு காவல்துறையினர் விடுவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 6 பேர் மீது, தஞ்சை சரக காவல்துறை டிஐஜி பர்வேஷ் குமார் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது, காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க, திருவாரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது, மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இம்மாவட்டத்தில் மது கிடைக்காததால், பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சிலர் குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து, திருத்துறைப்பூண்டி பகுதியில் கள்ள சந்தையில் விற்பதாக, மதுவிலக்கு போலீஸாருக்கு அப்போது தகவல் வந்திருக்கிறது.

ஜூலை 2-ம் தேதி, ஆலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கச்சனம் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மறித்து சோதனையிட்ட போது நூதன முறையில் அவர்கள் தங்களது உடலில் பார்சலில் ஓட்டப்படும் டேப்பை சுற்றி, 48 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த இரு இளைஞர்களும் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள களப்பால் பகுதியை சேர்ந்த ரமேஷ், மனோகர் என தெரியவந்தது.

ஆனால் மதுவிலக்கு காவல்துறையினர், அந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல், அவர்களை விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஞானசுமதி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமை காவலர்கள் சண்முகசுந்தரம், ராஜா, முதுநிலை காவலர்கள் பாரதிதாசன், விமலா ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தஞ்சை சரக காவல்துறை டிஐஜி-க்கு பரிந்துரை செய்தார்.

இதனை தொடர்ந்து மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஞானசுமதி உள்ளிட்ட 6 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து, டிஐஜி பர்வேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இது பொதுமக்கள் மத்தியிலும் காவல்துறை வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. தவறு இழைத்த மதுவிலக்கு காவல்துறையினர் மீது நடவடிக்கை மேற்கொண்ட தஞ்சை சரக டிஐஜி மற்றும் திருவாரூர் காவல்துறை கண்காணிப்பாளரின் செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Also Read: ஆவடி: மது அருந்தப் பணம் கேட்டுத் தகராறு செய்த கணவர்! - இரு குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த இளம்பெண்



source https://www.vikatan.com/news/politics/thiruvarur-police-officials-took-action-against-6-cops-in-liquor-smuggling-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக