Ad

சனி, 3 ஜூலை, 2021

புதுக்கோட்டை: பாதுகாப்புப் பணி ஒப்பந்தம் குறித்த 3 ஆசிரியம் கல்வெட்டுகள்! சொல்லும் செய்தி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி, மேலப்பனையூர், தேவர் மலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுக்குழுத் தலைவர் ராஜேந்திரன், தொல்லியல் ஆய்வுக்குழு நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாதுகாப்புப் பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் வகையிலான 3 ஆசிரியம் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றித் தொல்லியல் ஆய்வுக்குழு நிறுவனர், கல்வெட்டு ஆய்வாளர் மணிகண்டன் கூறும்போது, "புதுக்கோட்டை மாவட்டத்தில் 13-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத் தொடங்கிய நேரத்தில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.

ஆசிரியம் கல்வெட்டுகள்

அவர்கள், தமது நிர்வாகத்துக்குட்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளுக்கும், வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர்கள் மற்றும் அவர்களது வணிகப் பொருள்களுக்கும் பாதுகாப்பாளர்களை நியமித்தனர்.

இத்தகைய பாதுகாப்புப் பணியைத் தெரிவிக்கும் வகையிலான 3 ஆசிரியம் கல்வெட்டுகளைத்தான் தற்போது அடையாளம் கண்டுள்ளோம். திருமயம் வட்டாரத்தில், மேலப்பனையூர் கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டில், "ஸ்வஸ்தி ஸ்ரீ மது இராயப்பர் மகந் குமாரந் பாகுய நாயக்கர்க்குப் பனையூர் குளமங்கலம் ஆசிரியம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ராயப்பர் என்பாரின் மகன் பாகுய நாயக்கர் என்பார் பனையூர் குளமங்கலத்தை நிர்வகிக்கும் உரிமை பெற்றதை அறிவிக்கிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதியின் அடிப்படையில் இது 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டாக இருக்கலாம் என்று நம்மால் கணிக்க முடிகிறது.

இதேபோல், மல்லாங்குடிக்குட்பட்ட தேவர்மலை வடபுறம் 2016-ல் கரு.ராஜேந்திரனால் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டில் கோயில் நிர்வாக உரிமை பெற்றதற்கான. "ஸ்வஸ்தி ஸ்ரீ தேவ மலையில் நாயக்கர் நம்பி அகமற மாணிக்கர் ஆசிரியம்" என்ற தகவல் பொறிக்கப்பட்டிருக்கிறது. தேவர் மலையின் இறையான நாயக்கர் நம்பிகளுக்கான கோவில் நிர்வாக உரிமையை அகமற மாணிக்கர் என்பார் பெற்றிருந்ததைக் குறிக்கும் வகையில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு என்பதை நம்மால் கணிக்க முடிகிறது.

பொன்னமராவதி செவலூர் சேகரம் மலையடிப்பட்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சிதைந்த நிலையில் முழுமையாக வாசிக்க முடியவில்லையென்றாலும், கடைசிப் பகுதியிலிருந்ததை வைத்துப் பார்க்கும்போது, "பொன்னமராபதி நாட்டு வடபற்றுச் செவ்வலூர் ஏவவிருத்தரையர்கள் ஆசுரியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு நட்டுவிக்கப்பட்ட பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பெற்றதை அறிவிக்கும் வகையிலான கல்வெட்டு என்பதைக் கணிக்க முடிகிறது.

ஆசிரியம் கல்வெட்டுகள்

இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 67 கல்வெட்டுகளில் ஆசிரியம், ஆசுரியம், ஆஸ்ரீயம், ஆஸ்ரயம், ஆச்ரயம் எனப் பல்வேறு சொல்லாடல்கள் இருந்தாலும், எங்கள் ஆய்வில் பட்டியலிடப்பட்ட கல்வெட்டுகளில் 53 கல்வெட்டுகளில் ஆசிரியம் என்ற சொல்லாடலே கையாளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 8கல்வெட்டுகளில் ஆஸ்ரீயம் என்றும், 3 கல்வெட்டுகளில் ஆசுரியம் என்றும், மேலும் 3 கல்வெட்டுகளில் ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் என்ற சொல்லாடல் கையாளப்படுகின்றன. ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசிரியம் என்பதைப் பொருத்திப் பார்க்கும் போது திருட்டு, கொள்ளை நடைபெறாமல் காத்து, பொதுப்பொருள்களுக்கு அரணாக இருத்தல், எச்செயலிலும் வாக்குத் தவறாமை, தவறு நடைபெறாமல் காக்கும் பொறுப்புடையவருக்கான உடன்படிக்கையேற்பு என நாம் பொருள் கொள்ள முடிகிறது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/archaeology/discovery-of-3-inscriptions-reveal-the-protection-agreement-signed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக