Ad

சனி, 31 ஜூலை, 2021

புதுக்கோட்டை: 400 ரூபாயைத் திருப்பிக்கேட்ட இளைஞர் கொலை; தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பூவற்றக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. கொத்தனார் வேலை பார்த்து வந்த துரை, அதே பகுதியைச் சேர்ந்த நாகூரான் என்பவரிடம் ரூ.1000 பணத்தைக் கடனாக வாங்கியுள்ளார். அதில் 600 ரூபாயை துரை, நாகூரானிடம் திரும்பிக் கொடுத்துவிட்ட நிலையில் ரூ.400-ஐக் கொடுக்காமல் நீண்டநாள் நாகூரானை அலையவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், நாகூரானின் மகன் மாரிமுத்து (22) மீதிப் பணத்தைக் கேட்டு துரையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது மாரிமுத்து, துரை மற்றும் அவரது மனைவியையும் கோபமாகப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த கணவன் மனைவி இருவரும் மாரிமுத்துவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

Also Read: தஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

கடந்த 2019ல் நடந்த இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் பரபரப்பு தீர்ப்பு கொடுத்தார். கணவன்- மனைவி இருவருக்கும் 342 பிரிவின் கீழ் ஒரு மாத சிறைத் தண்டனை, ரூ.400 அபராதமும், 302 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.400 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு கொடுத்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை எனத் தீர்ப்பு எழுதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட துரையை அறந்தாங்கி கிளை சிறைக்கும், செல்வராணியை திருச்சி பெண்கள் மத்தியச் சிறையிலும் அடைத்தனர்..



source https://www.vikatan.com/news/crime/in-puthukottai-youth-killed-by-the-couple

அபிமன்யு |மற்றவரை நம்பி வீழ்ந்த மாவீரன்|தெரிந்தபாரதம் தெரியாதகதை |

மகாபாரதம் காட்டும் வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம். அதில் ஒன்று அபிமன்யுவின் கதை. இதை அழகுற விளக்கி இன்றைய இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார் பி.என். பரசுராமன்.



source https://www.vikatan.com/spiritual/gods/story-of-the-fall-of-great-warier-abimanyu

மரம் வளர்க்க ஆசைப்படுபவரா நீங்கள்? உங்களுக்கு வழிகாட்டும் செயலிகள் இதோ!

`தண்ணீரை பூமியில் தேடாதே, அதை வானத்திலிருந்து வரவழை' என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மழையை வானத்திலிருந்து வரவழைப்பதற்கு இருக்கும் ஒரே ஒரே வழி மரங்களை வளர்ப்பதுதான். இன்று நாம் சந்திக்கும் இன்னொரு சவால், காற்று மாசுபாடு. 2019-ம் ஆண்டில் 17 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ கவுன்சில். இதிலிருந்து தப்பிக்கவும் மரங்கள் நமக்கு கைகொடுக்கின்றன. `விவசாயிகளும் தானியச் சாகுபடியோடு மரங்களையும் வளர்த்து வர வேண்டும். மரச் சாகுபடியும் ஒரு விவசாயம்தான். அதுவும் வருமானம் கொடுக்கும்' என்பது வல்லுநர்களின் கருத்து.

பூமியில் இருக்கும் பெருவாரியான மரங்கள் தானாக முளைத்து வந்தவைதான். ஆனால், அவற்றை விவசாய நிலங்களில் வளர்க்க வேண்டுமென்றால் அதற்கு சிறிதளவு முயற்சி தேவை. மரம் வளர்ப்பைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நர்சரி வைத்திருப்போர், வனத்துறையினர், மர வளர்ப்பு வல்லுநர்கள், அனுபவ விவசாயிகள் எனப் பலரும் மர வளர்ப்பைப் பற்றிச் சொல்வார்கள் என்றாலும், இன்று கையடக்கமாக ஸ்மார்ட் போனிலேயே அனைத்துத் தகவல்களும் வந்து கொட்டுகின்றன. இப்படி மரம் வளர்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் (ஆப்ஸ்) குறித்து இங்கு பார்ப்போம்.

Farm Tree

Also Read: வாழை நோய்களைக் கண்டறியும் ‘டுமாய்னி’ செயலி!

ஃபார்ம் ட்ரீ (Farm Tree)

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மத்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட செயலிதான் இது. இதில் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யும் 22 மர வகைகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. 22 மர வகைகளின் தாவரவியல் பெயர்களோடு முகப்பில் இருக்கும். அவற்றில் தேவைப்படும் மரத்தின் தாவரவியல் பெயரை க்ளிக் செய்தால் அந்த மரத்தின் பயன்பாடுகள், சாகுபடி, கன்று உருவாக்கும் முறை, கிடைக்கும் மகசூலின் அளவு (ஹெக்டேரில்), மர பராமரிப்பு, மர வகையின் சிறப்புகள் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும்.

மூங்கில், சவுக்கு, தேக்கு, வேம்பு, கிளரிசீடியா, வாகை, தைல மரம், மலைவேம்பு, கடம்பு உள்ளிட்ட 22 மர வகைகள் உள்ளன. இதன் சேவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். மர வளர்ப்பில் எழும் சந்தேகங்களுக்கு நிபுணர்களைத் தொடர்புகொள்ளவும் வழிகாட்டுகிறது இந்தச் செயலி. விவசாய நிலத்தில் இருக்கும் புகைப்படங்களோடு மரங்களைப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்குகிறது இது. இந்தச் செயலியை தரவிறக்கம் செய்ய பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்:

https://play.google.com/store/apps/details?id=com.cafri.farmtree&hl=en_IN&gl=US

நம் மரக்களஞ்சியம் (Maram Tamil)

தமிழில் மரம் வளர்ப்பு குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது இந்தச் செயலி. கூகுள் ப்ளே ஸ்டோரில் `மரம் தமிழ்' என்று ஆங்கிலத்தில் (Maram Tamil) பதிவிட்டால் கிடைக்கிறது. மரங்கள், மரங்களின் புகைப்படங்கள், மரங்கள் வளர்க்கும் முறை, விதைப்பந்து, மானியம், அரசு திட்டங்கள் குறித்து இதில் தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் நாட்டு இன மரங்கள் தவிர வெளிநாட்டு மர வகைகளைப் பற்றியும் விளக்குகிறது.

Maram Tamil

தெளிவான புகைப்படங்களுடன் எந்தெந்த மரம் எப்படி இருக்கும் என விளக்குகிறது. எந்தெந்த இடத்தில் என்னென்ன மரங்களை வளர்க்கலாம், எப்போது நடலாம், எப்படி நடலாம் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கின்றன. மரம் வளர்ப்பு குறித்து தமிழில் இவ்வளவு தகவல்கள் கிடைப்பது பெரிய விஷயம். அடிக்கடி விளம்பரங்கள் குறுக்கிடுவது இந்தச் செயலியின் குறை. இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்ய பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்:

https://play.google.com/store/apps/details?id=nithra.tamil.maram.trees.plants.forest&hl=en_IN&gl=US

லீப் ஸ்னாப் (Leaf Snap)

எங்கேயாவது செல்கிறீர்கள், அங்கே ஒரு மரத்தைப் பார்க்கிறீர்கள். இது என்ன மரம், என்ன இனத்தைச் சேர்ந்தது என்பதை அறிய உதவுகிறது இந்தச் செயலி. மரத்தின் இலையையோ, மலரையோ, கனியையோ புகைப்படம் எடுத்து, அது என்ன வகையான மரம் என்பதை அறியலாம். செயலியிலேயே புகைப்படம் எடுக்கும் வசதி இருக்கிறது.

Leaf Snap

Also Read: `` `நீயெல்லாம் விவசாயம் செய்யப்போறியா?'ன்னு கேட்டாங்க; ஆனா, இப்போ..!" - அசத்தும் பட்டதாரி இளைஞர்

புகைப்படம் எடுத்த சற்று நேரத்தில் இது என்ன வகையான மரம், எந்த தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது உள்ளிட்ட தகவல்கள் கிடைத்துவிடும். நமக்குத் தெரியாத மரங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்தச் செயலி உதவுகிறது. குறிப்பாக, புதிதாக மரங்கள் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இது உதவும். இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்ய பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்:

https://play.google.com/store/apps/details?id=plant.identification.snap&hl=en_IN&gl=US



source https://www.vikatan.com/news/agriculture/apps-which-helps-you-to-understand-about-trees-and-tree-farming

''அஞ்சலை பாட்டி, பெயர் எழுத கத்துக்கிட்டீங்களா...?'' - கேட்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

'பள்ளிகள் எப்போது திறக்கப்படும்...' என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பில், பால் வார்த்திருக்கிறது ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு! 'குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக இருப்பதால், தொடக்கப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலனை செய்யலாம். அதேசமயம், பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாக வேண்டும்' என்று அண்மையில் அறிவித்துள்ளது 'இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்! இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் துறை சார்ந்த கேள்விகளை முன்வைத்துப் பேசினேன்....

''குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதால், ஆரம்பப் பள்ளிகளைத் திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கூறுகிறதே?''

ஐ.சி.எம்.ஆர்

''ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பை நானும் படித்தேன். ஐரோப்பிய நாடுகளில், ஆரம்பக் கல்விக் கூடங்களை திறந்திருக்கின்றனர். அங்குள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டுள்ளனர். அதுபோல், நம் நாட்டிலும் ஆரம்பக் கல்விக் கூடங்களைத் திறக்கலாம். நமது குழந்தைகள் இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருக்கின்றனர் என்றெல்லாம் அந்த அறிக்கையில் ஐ.சி.எம்.ஆர் சொல்லியிருக்கிறதுதான்.

நம்முடைய மாநிலத்தில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுப்பதாக இருந்தால்கூட, மருத்துவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள், துறைசார்ந்த வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துவிட்டுத்தான் ஊரடங்கை அறிவிக்கிறார் நமது முதல்வர். இந்த சூழ்நிலையில், கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, பள்ளிக்கு வர குழந்தைகளிடையே ஆர்வம் இருந்துவந்தாலும்கூட, அவர்களது பெற்றோரின் கருத்து எங்களுக்கு மிக முக்கியம்.

'ப்ளஸ் டூ தேர்வை நடத்தலாமா, வேண்டாமா' என்ற முடிவை எடுப்பதற்குக்கூட மாணவர் சங்கத்தில் ஆரம்பித்து கல்வியாளர் சங்கம், துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் சட்டமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பேசி கலந்தாய்வு செய்துதான் முடிவை அறிவித்தோம். எனவே, 'பள்ளிக்கூடங்களைத் திறக்கலாம்' என்ற முடிவுக்கு முதல்வர் எப்போது வருகிறாரோ... அன்றைக்கு இதுவிஷயமாக நிபுணர்களோடு கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்!''

''ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூட பணியாளர்கள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டதா?''

''பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அளவில் இதுகுறித்து நான் கேட்டிருந்தபோது, தமிழ்நாட்டிலுள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் பெரும்பாலானோர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டுவிட்டார்கள் என்றுதான் பதில் கிடைத்திருக்கிறது. நான் ஏழு மாவட்டங்கள் வரையிலாக சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். அப்படிப் போகிற இடங்களிலெல்லாம், என்னை வரவேற்கின்ற பள்ளிக்கூட பணியாளர்களிடம் 'நீங்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டீர்கள்தானே...' என்று நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். இந்தவகையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.''

மாணவிகள்

''கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்துவரும் இவ்வேளையில், தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க முயற்சி செய்துவருகின்றனவே...?''

''இல்லையில்லை... ஏப்ரல் மாதம் திறக்கிறோம், மே மாதம் திறக்கிறோம் என்றெல்லாம் ஆந்திரா உள்பட சில மாநிலங்களில் அறிவித்தார்கள். ஆனாலும் யாரும் இதுவரை பள்ளிகளைத் திறக்கவில்லை. அண்மையில் புதுச்சேரி அரசும்கூட பள்ளி, கல்லூரிகளைத் திறக்கப் போவதாக அறிவித்து, பள்ளிகள்தோறும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இதுகுறித்து முதல்வருடன் கலந்தாலோசித்தோம். ஆனால், 'புதுச்சேரி சிறிய மாநிலம்... அவர்களைப்போல் நாம் இவ்விஷயத்தில் உடனடியாக முடிவெடுத்துவிட முடியாது. பள்ளிகள் திறப்பில் புதுச்சேரி அரசு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்த்து நாம் இதுகுறித்து முடிவெடுக்கலாம்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், 'கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை' என்று அறிவித்ததோடு, பள்ளிகளைத் திறக்கும் முடிவையும் தள்ளிவைத்துவிட்டது புதுச்சேரி அரசு.

'பள்ளிகள் திறப்பு' என்பது குழந்தைகளின் உயிர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே தமிழக பள்ளிக் கல்வித்துறையும் கூடுதல் அக்கறையோடு எல்லா விஷயங்களை உன்னிப்பாக கவனித்துவருகிறது!''

''தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்துள்ள மாணவர்களைத் தக்கவைப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?''

''இதுவிஷயமாக துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களை ஏற்கெனவே நடத்தி முடித்துவிட்டோம். இதன்படி, மாவட்டத்திலுள்ள மொத்தப் பள்ளிகளில் எந்தெந்தப் பள்ளிகளில் இப்படி அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற கணக்கெடுப்பு எடுக்கச்சொல்லியிருக்கிறோம். இதில், பள்ளிக்கூட கட்டமைப்புகள் போதுமான அளவில் உள்ளதா, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் வசதி உள்ளதா, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் எப்படியிருக்கிறது, ஏற்கெனவே அந்தப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் எப்படியிருந்தது, என்பதுபோன்ற பல்வேறு விவரங்களும் இந்தக் கணக்கெடுப்பில் அடங்கியுள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில், பள்ளிகளுக்குத் தேவையான விஷயங்களை ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்துமுடித்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்! முதற்கட்டமாக வருகிற ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரச்சொல்லி உத்தரவிட்டுள்ளோம். மாணவர் சேர்க்கைப்பணி, பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல், பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் தொடர்பான நலத்திட்டங்கள் வழங்குதல், கல்வி தொலைக்காட்சி வழியே கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்குதல் என பல்வேறு பணிகளை செய்யவிருக்கிறோம்!''

மாணவிகள்

''ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், கூடுதல் மாணவர்களுக்குத் தேவையான ஆசிரியர் பற்றாக்குறையை எப்படி நிவர்த்தி செய்யப்போகிறீர்கள்?''

''வழக்கமான கல்வியாண்டாக இருந்தால், ஏப்ரல், மே மாதங்களில்தான் ஆசிரியர் பணி நிரவல் பணியெல்லாம் நடைபெறும். இதன்படி அதிகப்படியான எண்ணிக்கையில் இருக்கக்கூடிய ஆசிரியர்களை, தேவையான இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து பூர்த்தி செய்வோம். ஆனால், இது கொரோனா காலகட்டம் என்பதால், இந்தப் பணிகள் எல்லாம் அப்படியே நடைபெறாமல் நிற்கிறது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். விரைவில், முதல்வரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் பணி நிரவல் கலந்தாய்வுப் பணிகளை மேற்கொண்டு, தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்களை, தேவைப்படுகிற இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து தேவையைப் பூர்த்தி செய்துவிடுவோம்.''

Also Read: கொம்பு சீவும் நேரு முதல் கலெக்டரைக் காக்கவைத்த துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

''பள்ளிக் கல்வித்துறை நடைமுறையில் இருந்துவந்த 'இயக்குநர் பதவி'யை திடீரென ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ஆணையரை நியமனம் செய்திருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே?''

''இதற்கு, கல்வித் தரத்தை மேம்படுத்தவேண்டும் என்ற காரணத்தோடு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அதாவது, மற்ற எல்லா துறைகளையும்விட பள்ளிக் கல்வித்துறை மீதுதான் நிறைய வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. மதிப்பெண் கோருதல், ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. எனவே, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலுள்ள முக்கிய அதிகாரிகளும் இந்த வழக்குகளில் ஆஜராவதற்காகவே நிறைய நேரம் செலவிட நேரிட்டுவிடுகிறது. இதனால், பள்ளிகளை ஆய்வு செய்து கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த நடைமுறைகளை எல்லாம் கருத்திற்கொண்டுதான், பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்துக்கென புதிதாக ஆணையரை நியமித்து பணிகளைத் துரிதப்படுத்த ஆசைப்பட்டோம்.''

பள்ளிக் கல்வித்துறை

''பள்ளிக் கல்வித்துறையில் அனுபவம் இல்லாத ஆணையரை விடவும், துறை சார்ந்த அனுபவமிக்க இயக்குநர்தான் ஆக்கபூர்வமாக செயல்பட முடியும் என்கிறார்களே?''

''இப்போது பள்ளிக் கல்வித் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., நகராட்சிப் பள்ளி ஒன்றில் படித்து வளர்ந்தவர்தான். எனவே, அரசுப் பள்ளிகள் குறித்த அனைத்து விஷயங்களும் அனுபவப்பூர்வமாக அவருக்கும் தெரியும்.

இப்படியான அதிகாரிகளை ஆணையராக நியமனம் செய்யும்போது, 'அரசுப் பள்ளிகளை இன்னும் எப்படியெல்லாம் மேம்படுத்தலாம்' என்றுதான் அவர்கள் பார்ப்பார்களே தவிர... தான் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற மனநிலையில் நடந்துகொள்வதில்லை.

பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில், மாணவர், பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகம், துறை சார்ந்த அதிகாரிகள் என இந்த ஐந்து தரப்புமே எனக்கு முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் இணைந்து செயல்படும்போதுதான், தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை அடுத்த நிலைக்கு நாம் கொண்டுசெல்லவும் முடியும்!''

Also Read: `பீகாரிகளுக்கு நம்மளவிட மூளை கம்மி?!' - அமைச்சர் கே.என்.நேரு சொன்னதன் அறிவியல் உண்மை என்ன?

''தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பைப் பற்றி சரிவரத் தெரியாத வெளி மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி, ஆணையர் பொறுப்புக்கு வர நேரிட்டால் அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார்களே?''

''தி.மு.க ஆட்சியின் கீழ் அதுபோன்ற ஒரு சூழல் நிச்சயம் ஏற்படாது. வருங்காலத்திலும் நீங்கள் சொல்வது போன்றதொரு நிலைமை உண்டாகிவிடாதபடிக்கு கொள்கை ரீதியிலான சில முடிவுகளை நாம் எடுத்தாகவேண்டும்தான்.''

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

''எம்.ஜி.ஆர் ஸ்டைலில், முதியோருக்கு சிலேட்டில் எழுதப்படிக்கச் சொல்லித்தரும் உங்கள் புகைப்படங்கள் வைரலாகிறதே...?''

(சிரிக்கிறார்) ''கல்வி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் 'எழுத்தறிவு இயக்கம்!' இதற்கான தொடக்கவிழாவில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில், எழுதப் படிக்கத் தெரியாத முதியவர்களைத் தேர்ந்தெடுத்து எழுத்தறிவிக்கும் பணியை ஆரம்பித்தோம். அங்கே வந்திருந்த அஞ்சலை பாட்டியின் கையைப்பிடித்து, சிலேட்டில் அவரது பெயரை எழுத சொல்லிக்கொடுத்தேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு, 'அடுத்தமுறை நான் இங்கே வரும்போது, அஞ்சலை என்ற உங்கள் பெயரை நீங்களே எனக்கு எழுதிக்காண்பிக்க வேண்டும்' என சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நிச்சயம் எழுதிடுவாங்க...!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/school-education-minister-anbil-mahesh-poyamozhi-interview

பிவி சிந்துவின் தோல்விக்கு காரணம் என்ன... இடது கை சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலம் வெல்வாரா?

Form is temporary… But class is permanent என்பார்கள். ''2016 ரியோ ஒலிம்பிக்கின்போது இருந்த ஃபார்ம் சிந்துவுடம் இப்போது இல்லை. அதனால் சில்வர் சிந்து தங்கம் வெல்வது எல்லாம் நடக்காத காரியம்'' என டோக்கியோ கிளம்பும் முன்பே சிந்துவின் உயரத்தை மதிப்பிட்டு பலரும் முடிவுரை எழுதிவிட்டார்கள். ஆனால், தான் யார், தன் திறமை என்ன என்பதை நிரூபித்தார் சிந்து. காலிறுதிப்போட்டி வரை ஒரு செட் கூட தோற்காமல் ஆச்சர்யப்படுத்தினார் சிந்து. இந்த முறை நிச்சயம் தங்கம் வென்றுவிடுவார் என எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில்தான் அரையிறுதியில் நேர் செட்டில் வீழ்ந்துவிட்டார். சிந்துவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?!

தாய் சூ யிங்கிற்கு எதிரான ஆட்டத்தில் சிந்து 21-18, 21-12 என நேர் செட்களில் தோல்வியடைந்தது எல்லோருக்குமே அதிர்ச்சிதான். அதுவும் முதல் செட்டின் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்து சிந்துவை கொஞ்சம் கொஞ்சமாக துரத்திப்பிடித்து, பின்னர் இரண்டாம் செட்டில் நெருங்கவே முடியாத உயரத்துக்குப் போய் வீழ்த்திவிட்டார் தாய் சூ யிங்.

ஒரு செட்டில் கூட வீழ்த்தமுடியாத வீராங்கனையாக அரையிறுதிப்போட்டிக்குள் நுழைந்த சிந்துவால் ஏன் ஒரு செட்டைக்கூட கைப்பற்றமுடியவில்லை?

சிந்து

பாசிட்டிவ் மைண்ட் செட்டோடு ஆரம்பித்த சிந்து தனது பலமான இன் அவுட் சரியாகப் பார்ப்பதன் மூலமே முதலில் அதிக புள்ளிகளைப்பெற ஆரம்பித்தார். ஆனால், தாய் சூ யிங்கின் ஆட்டத்தில் பலம் கூடியதும் இந்த இன் அவுட் விஷயத்திலேயே தவறிழைக்க ஆரம்பித்தார் சிந்து. இதனால் முதலில் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிந்து, தன்னுடைய ரிதமை இழந்து ஒரு கட்டத்தில் தாய் சூ யிங்கோடு ஒவ்வொரு புள்ளியையும் பெறவே கடுமையாகப் போராட ஆரம்பித்துவிட்டார். அதன்பிறகு அவரால் தாய் சூ யிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை.

இரண்டாவது செட்டின்போது எதிர் திசைக்கு மாறியதால் சிந்துவுக்கு ஆதரவாக காற்றின்போக்கும் இருந்தது. இதனால் தனது பலமான ஸ்மாஷ் ஷாட்கள் அடித்து தாய் சூ யிங்கின்மீது ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்த்தபோது அதுவும் நடக்கவில்லை. தாய் சூ யிங் கோர்ட்டின் பாதியிலேயே நின்றுகொண்டு, அதிகமான டிராப் ஷாட்கள் ஆடினார். இதனால் ஸ்மாஷ் ஷாட்டுகளுக்கு வாய்ப்பில்லாமல் போனது. ஆனால், ஸ்மாஷ் ஷாட் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் சிந்து அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் பின்னால் அடிக்கும் ஆட்டமுறையிலேயே ஆடிக்கொண்டிருந்தார்.

சிந்து

தாய் சூ யிங் டிராப் ஷாட்களை துல்லியமாக ஆட, சிந்துவால் டிராப் ஷாட்களை சரியாக ஆடமுடியாமல் போனது. காலிறுதிப்போட்டியில் யமாகுச்சியை டிராப் ஷாட்கள் ஆடித்தான் தோற்கடித்தார் சிந்து. ஆனால், தாய் சூ யிங்கிற்கு எதிராக அப்படிப்பட்ட டிராப் ஷாட்களை அவரால் ஆட முடியாமல் போனதற்கு காரணம், ப்ரஷர். முதல் செட்டில் தாய் சூ யிங் துரத்திப்பிடிக்க ஆரம்பித்ததுமே அழுத்தத்தை உணர ஆரம்பித்துவிட்டார் சிந்து. அங்கிருந்துதான் சிந்துவின் தோல்விக்கான பயணம் தொடங்கியது.

இரண்டாவது செட்டில் எதிர்பக்கம் போய் நின்றும் தனது வழக்கமான ஆட்டத்தை ஆடமுடியாமல் சிந்து திணற காரணமே அந்த அழுத்தம்தான். சில்வர் சிந்து தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில்வர் சிந்து இன்று வெண்கலம் வெல்வாரா என சூழல் மாறியிருக்கிறது.

பிவி சிந்து

இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கும் வெண்கலத்துக்கான போட்டியில் ஹீ பிங்ஜியாவோ (He Bingjiao) எனும் சீன வீராங்கனையுடன் மோத இருக்கிறார் சிந்து. டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து எதிர்கொள்ள இருக்கும் முதல் இடது கை போட்டியாளர் இந்த பிங்ஜியாவோ. மின்னல் வேகத்தில் ஆடக்கூடியவர் இவர். அதனால் இன்றும் சிந்துவுக்கு கடுமையான போட்டி இருக்கிறது. ஆனால், பிங்ஜியவோவை வீழ்த்த புது வியூகம் அமைத்து சிந்து களமிறங்குவார் என எதிர்பார்ப்போம். வெண்கலம் வெல்ல வாழ்த்துவோம்!



source https://sports.vikatan.com/olympics/will-indias-pv-sindhu-win-bronze-medal-in-tokyo-olympics-beating-he-bingjiao

"உரிய காரணங்களுக்காக மனு செய்தால் நளினி முருகனுக்கு பரோல்"- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

"கொரோனா‌ காலத்தில் ஆக்சிஜன் ‌தேவையைக் கருத்தில்கொண்டு துவங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 200 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் உற்பத்தி செய்ய முடியும். நீதிமன்றப் பணியாளர்களின் தேர்வு உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது.

Also Read: நளினி, முருகன் பரோலுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை மறுப்பு - காரணம் என்ன?

சட்ட அமைச்சர் ரகுபதி

உயர் மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட உரிய காரணங்களின் அடிப்படையில்தான் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் நளினி முருகனின் உறவினர்கள் உரிய காரணங்களின் அடிப்படையில் மனு செய்தால் அவர்களுக்கும் பரோல் வழங்கத் தமிழக அரசு பரிசீலனை செய்யும். உச்சநீதிமன்றத்தின் கிளையைத் தென் மாநிலங்களில் அமைப்போம் என்று ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் கூறி இருக்கிறோம். அனைத்து வசதிகளுடன் கூடிய உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/if-petitioned-for-valid-reasons-nailini-will-get-parol-says-law-minister-raghupathi

மா லாங் : வீழ்த்தவே முடியாத சர்வாதிகாரி... மீண்டும் தங்கம் வென்றார் டேபிள் டென்னிஸின் GOAT

டோலிவுட் சூப்பர்ஸ்டார்களின் சண்டை காட்சிகளை ஒரு நிமிடம் மனதில் ஓட்டிப்பாருங்கள். புழுதி பறக்கும் சாலையில் ஹீரோ நடுநாயகமாக நிற்க ஒவ்வொரு ஆளாக வரிசையில் ஓடிவருவார்கள். ஹைடெசிபலில் தொண்டை கிழிய கத்திக் கொண்டு தங்கள் முழுபலத்தையும் கூட்டி ஹீரோவுக்கு பன்ச் விட நினைப்பார்கள். ஆனால், அந்த ஹீரோ அயர்ன் செய்த சட்டை கசங்காமல் கையை ஒரு வீசுதான் வீசுவார்... அந்த அடி ஆட்கள் 50 அடி தள்ளி பறந்து போய் விழுவார்கள். இதுதான் டோலிவுட் ஆக்ஷன் காட்சிகளின் அடிப்படையான பேட்டர்ன். மெயின் ரவுடியை காலி செய்ய மட்டும் கூடுதலாக இரண்டு நிமிடங்களை ஹீரோ எடுத்துக் கொள்வார். அப்போதும் சட்டை கசங்கியிருக்காது. ஸ்டைலான கூலிங் கிளாஸ் அப்படியே இருக்கும். எதிராளிகள் மட்டும் காணாமல் போயிருப்பார்கள்.

கிட்டத்தட்ட டோலிவுட் ஹீரோக்களின் ஆக்ஷனுக்கு ஒப்பானதுதான் மா லாங்கின் ஆட்டமும். இத்தனை நாள் கற்றுக்கொண்ட அத்தனை வித்தைகளையும் திறனையும் ஒன்றாக திரட்டி மா லாங் முன் நின்று சமர் செய்கிறார்கள், போராடுகிறார்கள்... ஆனால், கடைசி வரை அவரை வீழ்த்தவே முடியவில்லை. இது டோக்கியோ ஒலிம்பிக்கின் கதை மட்டுமல்ல. ரியோவிலும் அதுதான் நடந்தது. பாரிஸிலும் அதுதான் நடக்கப்போகிறது. மா லாங்கை வீழ்த்தப் போராடினார்கள்... போராடுகிறார்கள்... போராடிக் கொண்டே இருப்பார்கள்.

டேபிள் டென்னிஸ் உலகின் GOAT ஆக மிரட்டி வருகிறார் மா லாங். 5 வயதில் டேபிள் டென்னிஸ் பேடை கையிலெடுத்தவர், 18 வயதில் உலக சாம்பியன். இதுவரை யாருமே முறியடிக்க முடியாத சாதனை அது. இப்போது அவருக்கு 32 வயது. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் டேபிள் டென்னிஸ் உலகின் பேரரசனாக உயர்ந்திருக்கிறார் மா லாங்.
மா லாங்

2010 லிருந்து 2015 வரை தொடர்ந்து 64 மாதங்கள் உலகின் நம்பர் 1 வீரராக இருந்தார். அதன்பிறகு, மீண்டும் ஒரு 34 மாதங்கள் யாராலும் அசைக்க முடியாதபடி நம்பர் 1 இடத்தில் இருந்தார். காயம் காரணமாக இடையில் கொஞ்ச காலம் ஓய்வெடுத்தார். காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் உலக சாம்பியன் ஆனார். இப்போது உலகளவிலான தரவரிசையில் 2-வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

ஒலிம்பிக்கில் செய்திருக்கும் சாதனைகள் தனி. 2012-ல் அணிகள் பிரிவில் தங்கம், 2016-ல் அணிகள் பிரிவு + தனி என இரண்டு தங்கம். இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம். தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்குகளில் டேபிள் டென்னிஸின் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் எனும் பெருமையை பெற்றார். அணிகளுக்கான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் தங்கம் அடிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அது சாத்தியமாகும் பட்சத்தில் ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் செய்வார்.

டேபிள் டென்னிஸ் உலகில் மா லாங்குக்கு 'The Dragon', 'The Dictator' போன்ற அடைமொழிகளும் உண்டு.
மா லாங்

யாருக்கும் அஞ்சாமல், யாருடைய வழியையும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டு, தான் வைத்ததுதான் சட்டம் என சொல்பவர்களை சர்வாதிகாரி என சொல்லலாம். மா லாங்கின் ஆட்டத்திலும் இந்த சர்வாதிகார ஆதிக்கம் இருப்பதை உணர முடியும். மா லாங்கை எதிர்த்து ஆடும் எந்த எதிராளியாலும் ஒரு செட்டை, ஏன் ஒரு சர்வை கூட தான் நினைத்து போல ஆட முடியாது. கையில் ரேக்கட்டை எடுத்த அடுத்த நொடியிலிருந்தே போட்டி மா லாங் நினைப்பதை போலத்தான் நகரும். சர்வ் போட்ட சில நொடிகளிலேயே பின் நகர்ந்து சென்று லாங் ஷாட்களை ஆட ஆரம்பித்துவிடுவார். அதன்பிறகு, எதிராளி அவர் செய்ய நினைக்கும் ஒரு மூவை கூட செய்ய முடியாது. மா லாங்கின் அட்டாக்கிற்கு எதிர்வினை மட்டுமே செய்ய முடியும். அதுவும் அவர் விரும்பும் லைனில் விரும்பும் கோணத்திலேயே அரங்கேறும்.

கிரிக்கெட்டில் ஒரு பௌலரின் கையிலிருந்து பந்து ரிலீஸாகும் சமயத்திலேயே அது எந்த வகை பந்து என பேட்ஸ்மேன் கணித்தால்தான் நேர்த்தியாக ஷாட் ஆட முடியும். டேபிள் டென்னிஸிலும் அப்படித்தான். ஒரு ஷாட் ஆடினால் எதிராளி அதை ரிட்டன் செய்வதற்குள்ளேயே அவர் எந்த கோணத்தில் எந்த திசையில் ரிட்டன் செய்வார் என தெரிந்து அட்டாக் செய்ய தயாராக வேண்டும்.

கிரிக்கெட்டிலாவது இந்த கணிப்புக்கு சில மைக்ரோ விநாடிகள் கிடைக்கும். டேபிள் டென்னிஸில் அதுவும் இருக்காது. மைக்ரோவிலும் குறைவாக நானோ செகண்ட்டுகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்த நானோ செகண்ட்டுகளுக்குள் மா லாங் மேஜிக்கை நிகழ்த்தியிருப்பார். அட்டாக் செய்த அடுத்த நானோ செகண்ட்டில், எதிராளியின் பேடில் பந்து படுவதற்கு முன்பே அவர் எந்த திசையில் அதை ரிட்டன் செய்வார்? பேக் ஹேண்ட்டா ஃபோர் ஹேண்டா என்பதையெல்லாம் முடிவு செய்துவிடுவார்.

ஒரு சூப்பர் கம்ப்யூட்டரின் செயல்திறனுக்கு இணையான வேகம் இது. இந்த வேகம்தான் மற்ற வீரர்களிடமிருந்து மா லாங்கை தனித்து காட்டுகிறது. ஃபோர்ஹேண்டில் வலுவான வீரராக இருக்கும் மா லாங், பேக் ஹேண்ட் ஷாட்களை ஆடும்விதம் இன்னும் நேர்த்தியாக இருக்கும். ஒரு லெக் ஸ்பின்னரின் வேரியேஷனான கூக்ளி போன்றது அது. 5 பந்துகளை லெக் பிரேக்காக வீசி ஒரு பந்தை கூக்ளியாக்கும் போது பேட்ஸ்மேன் தடுமாறிப் போவாரே அதற்கு ஒப்பானதுதான் மா லாங்கின் பேக் ஹேண்ட் ஷாட்கள்.

மா லாங்
மா லாங் ஆடாத ஒரு போட்டியையும் மா லாங் ஆடும் ஒரு போட்டியையும் அடுத்தடுத்து பார்த்தாலே மா லாங்கினால் டேபிள் டென்னிஸின் தரம் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பது புரியும்.

மா லாங்குக்கு எதிராக ஒரு செட்டை வென்றதையே மிகப்பெரிய பெருமையாக கருதுகிறார் இந்தியாவின் ஆகச்சிறந்த அனுபவமிக்க வீரரான சரத் கமல். அதுதான் மா லாங். ரியோவில் எப்படி தங்கப்பதக்கத்தை வென்றாரோ அப்படியே டோக்கியோவிலும் தங்கம் வென்றிருக்கிறார். ஐந்து வருடம் ஓடியிருக்கிறது. ஆனால், அவரது ஃபார்மில் எந்த வீழ்ச்சியும் இல்லை.

சரத் கமல் தன்னுடைய மொத்த திறனையும் கூட்டி செய்த சண்டை, அரையிறுதியில் டிமிட்ரிச் போராடி செய்த அந்த யுத்தம், இறுதிப்போட்டியில் சக நாட்டு வீரரான சென்டாங்கின் நம்பர் 1 அந்தஸ்து இது எதுவுமே மா லாங்கை வீழ்த்த முடியவில்லை. ஏனெனில், அவர் ஒரு 'Dictator'. சர்வாதிகாரிகளுக்கு யாராலும் முடிவுகட்ட முடியாது. அவர்களே அவர்களுக்கான முடிவுரையை எழுதிக்கொள்வார்கள். மா லாங் விஷயத்தில் அது இப்போதைக்கு சாத்தியமில்லை.



source https://sports.vikatan.com/olympics/ma-long-goat-of-table-tennis-won-gold-medal-again-in-tokyo-olympics

வார ராசி பலன் | Weekly Astrology | 01/08/2021 முதல் 07/08/21 வரை| Horoscope | Rasi Palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான வார ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்



source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astrology-for-the-period-of-august-1st-to-august-7th

Covid Questions: பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்; நீரிழிவும் உள்ளது; நான் தடுப்பூசி போடலாமா?

மார்ச் 3-ம் தேதி எனக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பிறகு 124 நாள்கள் கழித்து நான் இதயநோய்க்கும் நீரிழிவுக்கும், ரத்த அழுத்தத்துக்கும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன். எனக்கு கடந்த 20 வருடங்களாக நீரிழிவு இருக்கிறது. ஆனால், கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- முரளிதரன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``நீங்கள் ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கிற நீரிழிவுக்கான மருந்துகளோ, பிபி மருந்துகளோ, நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்குத் தடையில்லை. ஆனால், நீங்கள் சமீபத்தில்தான் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இதயத்தில் ஏதேனும் பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் பிளட் தின்னர்ஸ் வகை மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இப்படி ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வோருக்கு தடுப்பூசி போட வேண்டாம் எனத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் சொல்லப்பட்டது. ஆனால், அந்த அறிவுரை இப்போது திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

A doctor prepares to administer vaccine

Also Read: Covid Questions: கோவிட் குணமான பின் ஆன்டிபாடி அளவு 92.5 இருக்கிறது; நான் தடுப்பூசி போடலாமா?

ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதோ, பைபாஸ் அறுவைசிகிச்சையோ, கோவிட் தடுப்பூசிக்குத் தடையில்லை என்ற நிலை வந்துவிட்டது. ஆனாலும், ஒரு விஷயம். ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளை எடுக்கும் சிலருக்கு, ஊசி போடும் இடத்தில் சின்னதாக ரத்தக்கட்டு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மற்றபடி தடுப்பூசி எடுப்பதால் வேறு பிரச்னைகள் வர வாய்ப்பில்லை."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/i-am-diabetic-and-underwent-bypass-surgery-recently-can-i-take-covid-vaccine

வரகு பிடிகொழுக்கட்டை | அவல் மோதகம் | பலாப்பழ மோதகம் - கொழுக்கட்டை ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

கொழுக்கட்டை... நம் பாரம்பர்ய உணவுகளில் முக்கியமானது, ஆரோக்கியமானது. ஆனால், கொழுக்கட்டை என்ற பெயரில் செய்துகொடுத்தால் முகம் சுளிக்கும் குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் மோமோஸ் என்ற பெயரில் அதையே ஆரோக்கியமில்லாத மைதாவில் செய்து கொடுப்பதை கடைகளில் வாங்கி ஸ்டைலாக சாப்பிடுவார்கள். ஆரோக்கிய உணவுகள் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டால் யாருக்குமே அவற்றுக்குப் பழகுவது சிரமமாகத்தான் தெரியும். சிறு வயதிலிருந்தே அதற்குப் பழக்க வேண்டும்.

உங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் விதம்விதமான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வாரம் ஒன்றாகச் செய்து கொடுத்து, மோமோஸ் மோகத்திலிருந்து அவர்களை விடுவித்து ஆரோக்கிய உணவுப்பழக்கம் பக்கம் ஈர்க்கலாமே...

தேவையானவை:

வரகரிசி - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வரகு பிடிகொழுக்கட்டை

செய்முறை:

வரகரிசியை மிக்சியில் சேர்த்து ரவைபதத்துக்கு உடைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதனுடன் அரைத்த வரகரிசி ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, கிளறி மூடி போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆறவிடவும். பிறகு, ஆறிய கலவையைக் கையால் பிடிகொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

வரகுக்குப் பதிலாக சாமை, குதிரைவாலி அரிசியிலும் செய்யலாம்.

தேவையானவை:

கெட்டி அவல் - ஒரு கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் - தலா அரை கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

அவல் மோதகம்

செய்முறை:

அவலைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தூளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கெட்டியாகும்போது இறக்கி வடிகட்டவும். அவலைத் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்தெடுக்கவும். பாசிப்பருப்பையும் தண்ணீர் இல்லாமல் வடியவிடவும். பாத்திரத்தில் அவலுடன் பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெல்லக் கரைசலைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசையவும். பிறகு கையில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

விரும்பினால் சிறிதளவு சுக்குத்தூள் சேர்க்கலாம். சரியாக உருட்ட வரவில்லை என்றால் மேலும் சிறிதளவு ஊறவைக்காத அவலைச் சேர்த்துப் பிசையலாம்.

தேவையானவை:

வறுத்த சிவப்பு அரிசி மாவு - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்

சிவப்பு அரிசி காரக் கொழுக்கட்டை

செய்முறை:

பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் கலக்கவும். மாவுக் கலவையுடன் வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்துக் களைந்து நிழலில் நன்கு காயவைக்கவும். பிறகு மெஷினில் கொடுத்தோ, மிக்சியிலோ நைஸாக அரைத்து, வறுத்துச் சேகரிக்கவும். இந்த மாவில் தேவையானபோது புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்யலாம்.

தேவையானவை:

இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு - ஒரு கப்
உப்பு - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
வெந்நீர் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகு - தலா கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
துருவிய கேரட், முட்டைகோஸ் - தலா 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வெஜிடபிள் மோதகம்

செய்முறை:

பச்சை மிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து நைஸாக இடிக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் இடித்த பச்சை மிளகாய் - கறிவேப்பிலை, கேரட், முட்டைகோஸ் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இடியாப்ப மாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரைச் சேர்த்துப் பிசையவும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, பூரி அளவுக்குக் கையால் தட்டவும். ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணத்தை வைத்து, மேலே மற்றொரு பூரியால் மூடி ஓரங்களை ஒட்டவும். குக்கி கட்டரால் ஓரங்களை விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். இதை ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

தேவையானவை:

இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு - அரை கப்
உப்பு - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

கொட்டை நீக்கிய பலாச்சுளை - 3 (துருவவும்)
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லத்தூள் - கால் கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

பலாப்பழ மோதகம்

செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். இடியாப்ப மாவு (அ) அரிசி மாவுடன் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகப் பிசையவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி தேங்காய்த் துருவல், பலாப்பழத் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சுருள கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை மோதக அச்சில் வைத்து அழுத்தவும். அதன் நடுவில் பலாப்பழப் பூரணத்தை வைத்து மாவால் மூடவும் (மோதகத்தை நன்றாக மூடவில்லையென்றால் வேகும்போது பூரணம் வெளியே வந்துவிடும்). பிறகு, மோதகங்களை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

பலாச்சுளையைத் துருவுவதற்குப் பதிலாக மிக்சியில் பல்ஸ் மோடில் (Pulse mode) ஒரு நிமிடம் விட்டுவிட்டு அரைத்துத் தூளாக்கிக்கொள்ளலாம். பலாச்சுளை நன்கு பழுத்திருந்தால் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.



source https://www.vikatan.com/food/recipes/varagu-kozhukattai-aval-modagam-jack-fruit-modagam-weekend-recipes

விகடன் ஃபிரண்ட்ஷிப் கால்குலேட்டர் - 90s கிட்ஸ் ஸ்பெஷல்!

இந்த மாடர்ன் உலகத்தில் எல்லாமும் மாறித்தான் போய்விட்டது. ஆனால், அதற்காக 90ஸ் களில் நாம் கொண்டாடியதை எல்லாம் அப்படியே விட்டுவிட முடியுமா? அதையும் கொஞ்சம் மார்டனாக மாற்றி அந்த நாஸ்டால்ஜியா நினைவுகளைக் கொண்டாடித்தான் தீர்ப்போமே! கடைசி பெஞ்சோ, நடு பெஞ்சோ, முதல் பெஞ்சோ நிச்சயம் அதில் உயிர் நண்பர்களின் பெயர்கள் ஏதேனும் ஒரு வகையில் செதுக்கப்பட்டிருக்கும். ஆணோ, பெண்ணோ இருவருக்குமான நட்பின் ஆழத்தை ஏதேதோ வழிமுறைகளில் மார்க் போட்டுக் கண்டறிய முயற்சி செய்திருப்போம்.

அதே விளையாட்டுதான் மக்களே... என்ன கொஞ்சமே கொஞ்சம் மாடர்னாக! வாங்க, உங்க நண்பருக்கும் உங்களுக்கும் பொருத்தம் எப்படினு பார்ப்போம்!

விகடன் ஃபிரண்ட்ஷிப் கால்குலேட்டர் - 90s கிட்ஸ் ஸ்பெஷல்! - இங்க க்ளிக் பண்ணுங்க மக்களே!

உங்களுக்குக் கிடைச்ச ரிசல்ட் என்னனு கமென்ட்ல சொல்லுங்க! விகடனின் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்! ஃபிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு!


source https://www.vikatan.com/lifestyle/relationship/celebrate-your-friendship-with-vikatans-friendship-calculator

பாரதியார் பல்கலைக்கழகம்: `தேர்வுகள் எப்போது' - வேதனையில் ஆராய்ச்சி மாணவர்கள்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மீளவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது கல்வித்துறை. வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டது. ஆனால், கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் எம்.பில், பி.ஹெச்டி படிப்புகளுக்கு இந்தாண்டு தேர்வு குறித்த அறிவிப்பு இல்லாததால் மாணவர்கள் அதர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா

Also Read: பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகள்: அரசு இன்னும் எப்படி எளிமையாக்கலாம்? - ஒரு வழிகாட்டல்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் மற்றும் பி.ஹெச் படிப்புகளில் நேரடியாகவும், தொலைதூரக் கல்வியாகவும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், “தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில், அனைத்து படிப்புகளுக்கும் ஆன்லைனில் தேர்வு வைத்து முடித்துவிட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு எங்களுக்கு ஆஃப்லைனில் தான் தேர்வு நடத்தினர். கடந்த ஜூலை 1-ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் பொன்முடி

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து,' ‘31- ம் தேதிக்குள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தி முடிவுகளையும் வெளியிட வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்’' எனக் கூறியிருந்தார்.

அதன்படி, மற்ற பல்கலைக்கழகங்கள் தேர்வை நடத்தி முடிவுகளையும் வெளியிட்டுவிட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டும் எம்.பில் மற்றும் பி.ஹெச் படிப்புகளுக்கான தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. நாங்கள் கேட்டாலும் பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான பதில் வருவதில்லை. அமைச்சர் சொல்லியும்கூட அந்த உத்தரவைப் பின்பற்றாமல் இருக்கின்றனர்.

தேர்வு

அரசே அறிவுறுத்தியும்கூட ஆன்லைனில் தேர்வு நடத்த ஏன் மறுக்கின்றனர்? என தெரியவில்லை. இதனால், மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு தள்ளப்படுகின்றனர். அரசின் உத்தரவை பாரதியார் பல்கலைக்கழகம் முறையாக பின்பற்றி, எங்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜிடம் கேட்டபோது, “எம்.பில் மற்றும் பி.ஹெச் படிப்புகளுக்கு கடந்தாண்டு தேர்வு நடத்தினோம்.

காளிராஜ்

அந்த முடிவுகளே இப்போது வரை பொருந்தும். விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/bharathiar-university-students-says-that-they-are-waiting-for-the-exam-announcement

பஞ்சாங்கக் குறிப்புகள் - ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்


source https://www.vikatan.com/spiritual/astrology/panchangam-details-for-the-period-of-august-2nd-to-8th

போட்டியே இல்லாத மல்யுத்த பிரிவு... தீபக் புனியா பதக்கம் வெல்வாரா?

18 வருடங்களுக்கு பிறகு ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த 22 வயதே ஆன இளம் வீரரான தீபக் புனியா, இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கிலும் சாதிக்கும் எண்ணத்தோடு முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறார். யார் இந்த தீபக் புனியா??

ஹரியானாவின் ஜாஜர் மாவட்டத்திலுள்ள ஜாரா எனும் கிராமத்தை சேர்ந்தவர் தீபக் புனியா. இவருடைய அப்பாவும் தாத்தாவும் உள்ளூரில் பிரபலமான மல்யுத்த வீரர்களாக இருந்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தீபக் புனியாவும் மல்யுத்த களத்தில் குதித்திருக்கிறார்.

1952-ல் கசாபா தாதாசாகேப் எனும் வீரர் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். அதன்பிறகு, நீண்டகாலமாக மல்யுத்தத்தில் இந்தியர்கள் யாரும் பதக்கமே வெல்லவில்லை. கிட்டத்தட்ட 56 வருடங்களுக்கு பிறகு சுஷில் குமார் 2008 ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார். இவரே 2012 ஒலிம்பிக்கிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார். வரலாற்று வெற்றியை சாத்தியப்படுத்திய சுஷில் குமார்தான் தீபக் புனியாவை வழிநடத்தினார். தீபக்கிற்கு தேவையான பொருளாதார உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி பக்கபலமாக இருந்திருக்கிறார். இவரின் உதவியாலயே இராணுவத்திற்கு வேலைக்கு செல்லவிருந்த தீபக் அந்த எண்ணத்தை விடுத்து மல்யுத்தத்தில் முழுக்கவனத்தையும் செலுத்த தொடங்கினார்.

தந்தை மற்றும் சுஷில் குமார் இருவரின் பயிற்சியாலும் முன்னேறிய தீபக் புனியா டெல்லியில் தங்கியிருந்து சில பயிற்சிகளை மேற்கொண்டார். இதன் மூலம் உலக ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் அளவுக்கு உயர்ந்தார். 2001-ல் ரமேஷ் குமார் மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தனர். அவர்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் தீபக். ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்திற்கான சிறந்த வீரர் விருதையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

Deepak Punia
கேடட் லெவலிலும் ஜுனியர் லெவலிலும் பதக்கங்களை குவித்தவர், சீனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டையும் பெற்றார்.

86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியாவிற்கு பெரியளவில் சிரமம் கொடுக்கக்கூடிய வீரர்கள் இல்லை என்பதால் பதக்கம் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிப்புகளை நிஜமாக்கி சாதனைபுரிவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



source https://sports.vikatan.com/olympics/will-wrestler-deepak-punia-make-a-mark-in-tokyo-olympics

ஆடி அம்மன் தரிசனம் - மேல்மலையனூர்: அந்தரியே சுந்தரியே ஆபத்தில் காத்தருளும் அங்காள ஈஸ்வரியே!

ஈசனின் ஒரு பாகமான அன்னை சக்தி மண்ணுலகில் முதன்முதலில் வந்திறங்கிய திருத்தலம் மேல்மலையனூர். அதனால் சக்தியைத் தொழுவாருக்கு அதுவே தாய் வீடு. தமிழகமெங்கும் உடுக்கை, பம்பை, சிலம்பு வாசிப்பவர்கள், சக்தி கரகம் எடுப்பவர்கள், கங்கா-காளி நாட்டியம் ஆடுவோர் எல்லோருக்கும் இதுவே முதன்மை கோயில் என்பதால் இங்கு நிகழ்ச்சி நடத்த அவர்கள் பணம் வாங்குவதே இல்லை என்பதுவே இந்த கோயிலின் சிறப்பு.
அங்காளி

ஆடி மாதத்தில் மேல்மலையனூர் எல்லைக்குள் கூட நுழைய முடியாது, அத்தனை மக்கள் கூட்டமும் மயங்கிக் கிடக்கும் சக்தி குடி கொண்ட ஆதார தலம் இது. பிரமனின் தலையைக் கொய்த ஈசன், கபாலம் ஏந்திய கபாலி ஆனார். எத்தனை பிக்ஷை ஏற்றாலும் நிறையாத கபாலமாக அது இருந்தது. சரஸ்வதியின் சாபத்தால் அன்னை சக்தியும் கொக்கு, குருவி சிறகுகளால் ஆன, உடை உடுத்தி மயானம் காக்கும் சுடலை பிச்சியாக அங்காள அம்மனாக மலையனூருக்கு வந்தாள். ஒருமுறை ஈசன் அங்காள அம்மனை நாடி வந்து பிக்ஷை கேட்க, ஆங்கார ஆவேசம் கொண்ட அங்காளி தயிர் அன்னத்தை மண்ணில் பிக்ஷையிட்டார். அதை உண்ண மண்ணுக்கு இறங்கிய கபாலத்தை காலால் நசுக்கி அழித்தாள் அங்காளி. சிவனின் சாபமும் நீங்கியது. அன்னையும் சாந்தமானாள்; அன்னபூரணி என்ற திருநாமமும் கொண்டாள். இங்கே எண்திசைக்கும் அரசியாக வீற்றிருந்து மண்ணுலகைக் காக்கும் மாதாவானாள் என்கிறது கோயில் புராணம்.

மேல்மலையனூர்
கண்டாலே உணர்ச்சி மீறி அருள் வந்து ஆட வைக்கும் திருக்கோலம் கொண்டவள் அங்காள அம்மன். சுயம்புவாக புற்று மண்ணால் உருவானவள் அங்காளி. நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்ட யோக வடிவில், பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி எழுந்தருளி காத்து வருகிறாள் அங்காளி.

Also Read: ஆடி அம்மன் தரிசனம்: கேட்டதையெல்லாம் கொடுப்பாள் கோட்டை மாரி - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்!

இவளுக்கு அருகிலேயே பெரிய புற்றும் எழுந்தருளி உள்ளது. இதனால் இவள் 'புத்துமாரி', 'வன்மீக காளி' என்றெல்லாம் வணங்கப்படுகிறாள். கோயிலுக்கு வெளியே படுத்த நிலையில் பெரியாயி வணங்கப்படுகிறாள். இவள் நிறை சூலியான பெண்களுக்கு காவல் தெய்வமாக இருக்கிறாள்.

மயானக் கொள்ளை

தீய சக்திகளால் அச்சம் கொண்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்நொடிகளால் அவதிப்படுவோர், கடன் தொல்லையால் கலங்குபவர்கள் என எல்லாவித மக்களும் இங்கு நம்பிக்கையோடு வந்து அங்காளியை சரண் அடைந்து அருள் பெற்று செல்கிறார்கள். ஒவ்வொரு மாத அமாவாசையும் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிறும், மகாளய அமாவாசையும், நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல் போன்ற நாள்களும் இங்கு விசேஷமானவை. மகா சிவராத்திரியிலிருந்து 13 நாள்கள் இங்கு நடைபெறும் மயானக் கொள்ளை விழா பெரும் விசேஷம் எனலாம். காண்பவர்கள் உணர்ச்சிவசப்படும் அற்புத கொண்டாட்டம் அது.

மயானக் கொள்ளை வைபவத்தில் காய், கனிகள், சுண்டல், கொழுக்கட்டைகள், கீரைகள், சில்லரை ரூபாய்கள், தானியங்கள் என தங்களால் இயன்ற காணிக்கைகளை பக்தர்கள் அம்மனை நோக்கி சூறையிட்டு வணங்குவார்கள். இதனால் விளைச்சல் பெருகும், தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நள்ளிரவில் மயானத்தில் நடைபெறும் அங்காளியின் மயானச் சூறைக்குப் பிறகு சாம்பல் வடிவிலான அசுரனை அழித்தப் பிறகு, அந்த சுடுகாட்டுச் சாம்பலை பக்தர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். இந்த சுடுகாட்டுச் சாம்பலை வாசலில் கட்டிவைத்தால் தீய சக்திகள் அணுகாது என்பதும் நம்பிக்கை. பிரமாண்டத் தேரில் அங்காளம்மன் பவனி வரும் திருக்காட்சி உணர்ச்சியைத் தூண்டி பக்தர்களை வாய் விட்டு அழவைக்கும் என்பார்கள்.

அங்காள அம்மன்

Also Read: ஆடி மாத அம்மன் தரிசனம்: பெரிய பாளையத்து பவானி - அண்டியோரைக் காக்கும் ஆயன் சோதரி!

3 அமாவாசை இந்த கோயிலுக்கு வந்து ‘ஊஞ்சல் உற்சவம்’ கண்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும், திருமண வரன் சரியாக அமையாதவர்களுக்கு தகுந்த வரன் கிட்டும் என்பது நம்பிக்கை. புற்று மண்ணை நீரில் கலந்து தரும் தீர்த்தப் பிரசாதம் வெம்மை நோய்களை தீர்க்கும். அண்டசராசரங்களையும் காத்து நிற்கும் அங்காள அம்மன், வடதமிழ் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட பழைமையான தெய்வமாக விளங்கி வருகிறாள். தீமைகளை அழிக்கும் துடியான சக்தியாக விளங்கி வருகிறாள். ஆபத்தில் உதவும் தாயாகவும், அநீதியை தட்டி கேட்கும் நீதிபதியாகவும் இவள் எளிய மக்களுக்கு இருந்து வருகிறாள். இவளை வேண்டிக்கொண்டால் எல்லாம் நல்லவிதமாக முடியும் என்பது லட்சோப லட்ச மக்களின் நம்பிக்கை. நம்பிக்கையை விதைக்கும் இந்த தயாபாரியை நீங்களும் ஆடியில் சென்று தரிசித்து வாருங்கள். நலமே அளிப்பாள்; நல்லருள் புரிவாள்!

"திருவிளக்கின் ஒளியினிலே தீர்ப்பு சொல்லும் அங்காளி,

மாவிளக்கின் ஒளியினிலே மறுவார்த்தை சொல்வாளே.

மக்கள் குறை தீர்த்திடுவாள், மாங்கல்யம் காத்திடுவாள்

அங்காளி துணையிருக்க ஆன குறை ஏதும் உண்டோ!"



source https://www.vikatan.com/spiritual/temples/aadi-festival-the-glory-of-melmalayanur-angala-parameswari-temple

ரிசர்வ் ப்ளேயர் டூ ஒலிம்பியன்... கோல்ஃப் விளையாடில் சர்ப்ரைஸ் கொடுக்கும் உதயன் மானே!

வ்விதி வலியது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வாக முடியாமல் வருத்தத்திலிருந்தார் கோல்ஃப் வீரர் உதயன் மானே. கடைசி நேரத்தில் அர்ஜென்டினா வீரர் எமிலியானோ க்ரில்லோ ஒலிம்பிக்கிலிருந்து விலகிவிட, உதயனுக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. ரிசர்வ் ப்ளேயராக இருந்தவர், இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் கோல்ஃப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வருகிறார். அவர் விளையாடும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

30 வயதாகும் உதயன் மானே சென்னையில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்தவர். இன்னொரு பிரபல கோல்ஃப் வீரரான அனிர்பன் லாகிரியும் இவரும் ஆரம்பக்காலத்தில் ஒன்றாகவே பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அனிர்பன் லாகிரி ரியோ ஒலிம்பிக்கிலும் ஆடியிருந்தார். இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்கிறார்.

தரவரிசை பட்டியலில் முதல் 60 இடங்களில் இருப்பவர்கள் மட்டுமே ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. 60 ஆளாக நூலிழையில் கடைசி இடத்தை பிடித்து அனிர்பன் லாகிரி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றிருந்தார். உதயன் மானே தரவரிசையில் பின்னால் இருந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்தான் அர்ஜென்டினாவைச் சேர்ந்த எமிலியானோ க்ரில்லோ டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் இருந்த உதயன் மானே கடைசி நேரத்தில் 60-வது வீரராக ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றார்.

கோல்ஃப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பங்களிப்பே இல்லாமல் போய்விடும் சூழல் இருந்த நிலையில், கடைசி வாய்ப்பில் இரண்டு வீரர்கள் தேர்வாகி விளையாடிவருகிறார்கள்.

உதயன் மானே 2017-ல் வங்கதேச ஓபனில் 10-வது இடம் பிடித்திருந்தார். 2018-ல் இந்தோனேஷிய ஓபனில் 6-வது இடம் பிடித்திருந்தார். 2019, 2020 PGTI Players சாம்பியன்ஷிப்பை வென்றிருந்தார். இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற NCR ஓபனையும் வென்றிருந்தார்.

அனிர்பன் லாகிரியை போன்றே உதயன் மானேவும் அனுபவமிக்க வீரரே என்பதால் இவர் மீதும் எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்கிறது.

கோல்ஃப் களத்தில் உதயன் மானே

இப்படி தன்னடக்கமாக பேசுபவர்கள்தான் எதிர்பாராத சர்ப்ரைஸ்களை கொடுப்பார்கள். உதயன் மானே சர்ப்ரைஸ் கொடுப்பாரா?!



source https://sports.vikatan.com/olympics/profile-of-indian-golfer-udayan-mane

குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்த மலர்களை சாமிக்கு சாத்தலாமா?

வீடுகளில், பூஜை அறையில் அலமாரியில் அல்லது சுவரில் சட்டம் அடித்து அதில் சுவாமி படம் மாட்டி வைத்து அதற்கு தினமும் பூ வைத்து வழிபடுவது வழக்கம். சிலர் முந்தைய நாள் இரவிலேயே பூவை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்து விடுகிறார்கள். அதை. மறுநாள் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் வாரம் ஒருமுறை மலர்கள் வாங்கிப் பாதுகாத்துவைத்துவிடுவார்கள்.

பொருள்களை வீண் ஆகக்கூடாது என்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ப்ரிட்ஜ் தற்காலத்தில் ஓர் அலமாரிபோல மாறிவிட்டது. கெட்டுப்போகும் தன்மையுள்ள பலபொருள்களையும் அதில் வைத்துவிடுகிறோம். சமைத்த உணவு, சமைக்க வேண்டிய காய்கறி, அரைத்த மாவு, வாங்கிய பால் என சகலமும் அதில் இருக்கின்றன. ஒரு வீட்டின் அவசியமான பொருளாக அது மாறிவிட்டது. அப்படிப்பட்ட ப்ரிட்ஜ் பயன்பாடுகளில் ஒன்றாக பூக்களை வைத்துப் பாதுகாப்பதும் சேர்ந்துகொண்டது.

ப்ரிட்ஜ்

புஷ்பங்கள் இறைவனுக்கானது அதில் எந்த சந்தேகமும் இல்லை. சாஸ்திரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், புஷ்பங்களில் ஆராதனைக்கு உரியன, அல்லாதன என்று வித்தியாசம் சொல்லப்பட்டிருக்கிறது. சில புஷ்பங்கள் கீழே விழுந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். சிலவற்றை மரத்திலிருந்து பறிக்க வேண்டும்.

ஆகமங்களில் இறைவனுக்கான மலர்களைப் பறிக்கும்போது வண்டுகள் மலர்களைத் தொடுவதற்கு முன்பாகப் பறித்துவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். முனிவர் ஒருவர் இதற்காகவே பனிவிழும் வேளையில் எழுந்து மரங்களில் ஏறி மலர்களைப் பறிப்பாராம். அவ்வாறு செய்யும்போது அதிகாலையில் பனிபெய்து மரங்கள் எல்லாம் வழுக்குமாம். அதைத் தவிர்க்கத் தனக்குப் புலியின் கால்கள் போன்ற கால்கள் தேவை என்று சிவபெருமானிடம் வேண்டிப்பெற்றாராம். அதனால் அவருக்குப் புலிக்கால் முனிவர் என்றே பெயர்.

அன்று பூத்த புஷ்பங்களை அன்றே சார்த்த வேண்டும்; அடுத்த நாள் சார்த்தக் கூடாது!’ என்று ஆகமம் சொல்கிறது. பாரிஜாத புஷ்பத்தை உலுக்கி எடுக்க வேண்டும். செம்பருத்தி, தாமரை ஆகியவற்றைப் பறிக்க வேண்டும். கீழே விழுந்தால் எடுக்கக் கூடாது.

இந்தச் சட்ட- திட்டங் களைப் பார்க்கும்போது அந்தக் காலத்தில் விஸ்தாரமான இடங்களில் வசித்து, நிறைய பூச்செடிகளை வளர்த்துக் கொண்டு தினப்படி பூஜை செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது.இப்போது நாம் புஷ்பத்தைப் பார்க்கும் நிலையில் இல்லை. தரையையே பார்க்க முடியாத இடத்துக்கு நமது வீட்டைப் பெயர்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். அப்பார்ட்மெண்ட் வீடுகளில் செடி வளர்க்க முடியாதுதானே.

நவீன காலத்தின் இந்த சிக்கல்தான் நம்மை புதிய தீர்வுகளைத் தேடிச் செல்லச் சொல்கிறது. கிடைக்கும் மலர்களை வாங்கி ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாத்து வழிபாடுகள் செய்கிறோம். நம் தர்மசாஸ்திரம் இப்படியான சூழல்களுக்காகவே சில உபாயங்களையும் சொல்லிவைத்திருக்கிறது. துளசியையும் வில்வத்தையும் 4 நாள்கள் வைக்கலாம். ப்ரிட்ஜ் தேவையில்லை. காய்ந்து பொடிப்பொடி ஆனாலும் அவற்றை சாமிக்கு சமர்ப்பிக்கலாம் என்கிறது. தாமரைப் பூவை 2 நாள் வைத்திருக்கலாம் என்கிறது.

தினமும் மலர் வாங்கும்போதும் பறிக்கும்போதும் அது இறைவனுக்கானது என்ற நினைவு நமக்குள் ஆழமாகப் பதியும். அப்போது நாம் செய்யும் பூஜைகளுக்குக்கூடுதல் பலன்கள் கிடைக்கும். விற்பனையாகும் மலர்களில் தேதி அறிந்து நாம் வாங்க முடியாது. எனவே குறைந்த பட்சம் அன்று வாங்கிய மலர்களையே இறைவனுக்கு சாத்தி வழிபடுவோம். அல்லது துளசி, வில்வம் சமர்ப்பித்து வழிபடுவோம். முடிந்தவரை நீண்ட நாள்கள் பாதுகாத்து வழிபடும் முறையைத் தவிர்ப்போம்.



source https://www.vikatan.com/spiritual/gods/can-we-keep-flowers-in-fridge

01/08/2021 | இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Horoscope | Astrology |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசிபலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்



source https://www.vikatan.com/spiritual/astrology/01082021-daily-rasi-palan-horoscope-astrology

வெள்ளி, 30 ஜூலை, 2021

ட்ரிபிள் ஷாக்... டெபாசிட் நெருக்கடி... தவிப்பில் மக்கள்!

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன, மின்கட்டண உயர்வு சர்ச்சைகள்! ஊரடங்கு காரணமாக, பொருளாதாரரீதியாக மக்கள் தவித்துவரும் நிலையில் வழக்கத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு வரும் மின் கட்டணத்தால் ‘ஷாக்’ அடிக்காத குறையாக அதிர்ச்சியில் இருக்கிறார்கள் நடுத்தர மக்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு மே மாதம் மின் பயன்பாட்டைக் கணக்கீடு செய்ய இயலாத சூழலில், ‘2019 மே மாதம் செலுத்திய கட்டணத்தைச் செலுத்தலாம்’ என்று மின்வாரியம் அறிவித்தது. அதில் சில குளறுபடிகள் எழவே, ‘‘நடப்பாண்டின் ஏப்ரல் மாதக் கட்டணத்தையே மே மாதத்துக்கும் செலுத்தலாம் அல்லது மின் மீட்டரில் பதிவாகியிருக்கும் மின்பதிவு அளவீட்டை செல்போனில் படம் பிடித்து, அதை மின் அலுவலகத்துக்குக் கொண்டு சென்று கணக்கீடு செய்து கட்டணம் செலுத்தலாம்’’ என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதில், மின் அளவீட்டைக் கணக்கிடாமல், மற்ற இரண்டு முறைகளின் (2019 மே மாதக் கட்டணம் மற்றும் நடப்பாண்டின் முந்தைய மாதக் கட்டணம்) வழியாக மின்கட்டணம் செலுத்திய பலருக்கும், தற்போது மின்கட்டணம் வழக்கத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கு இரண்டு மூன்று மடங்கல்ல... ஒன்பது மடங்கு மின்கட்டணம் அதிகமாக வந்திருப்பதுதான் கொடுமை. மின்கட்டணம் தந்த அதிர்ச்சி விலகாமல் நம்மிடம் பேசியவர், ‘‘இதென்னங்க அநியாயமா இருக்கு... ஒவ்வொரு மாசமும் 1,000 ரூபாய்க்குள்ளதான் கரன்ட் பில் வரும். ஆனா, இந்த மாசம் 9,400 ரூபா வந்திருக்கு. ஈ.பி-யில போய் கேட்டா, ‘கையில இருக்குற காசைக் கட்டிட்டுப் போங்க, மிச்சத்தை அடுத்த மாசம் கட்டுங்க’னு சொல்றாங்க. அடுத்த மாசம் கட்டுறதா இருந்தாலும், நான்தானே கட்டணும்... ‘இந்த மாசம் டெபாசிட் பணம் எதுவும் வாங்கக் கூடாது’னு அமைச்சர் பேட்டி கொடுத்தார். ஆனா, டெபாசிட் பணமும் கட்டச் சொல்றாங்க. அமைச்சர் ஒண்ணு சொல்ல, அதிகாரிங்க வேற மாதிரி நடந்துக்கிட்டா, நாங்க என்னதான் செய்யுறது?’’ என்று கேட்கிறார் கொதிப்புடன்!

சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த சாரதாதேவி, ‘‘வழக்கத்தைவிட இந்தமுறை ரெண்டு மடங்குக்கு மேல பில் வந்திருக்கு. கொரோனாவால ரீடிங் எடுக்க வர முடியாததை அதுக்குக் காரணமா சொல்றாங்க. அடுத்த மாசம் எவ்வளவு பில் வரப்போகுதுன்னு தெரியலை. இன்னும் ரீடிங் எடுக்கவும் யாரும் வரலை. ஈ.பி-யில எப்போ போய் கேட்டாலும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை’’ என்று நொந்துகொள்கிறார்.

“அதிக கட்டணம் வசூலிப்பது நுகர்வோர் சட்டத்துக்கு எதிரானது” என்று கூறும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் தலைவர் பால்பர்ணபாஸ், ‘‘500, 600 ரூபாய்னு கரன்ட் பில் வந்துக்கிட்டிருந்த பெரும்பாலான குடும்பங்களுக்கு, 3,000 ரூபாய்க்கும் மேல பில் வந்திருக்கு. கூலி வேலைக்குப் போற ஏழை மக்கள் எப்படிச் சமாளிப்பாங்க? மின்கட்டணம் மட்டுமல்ல... டெபாசிட் தொகையையும் அதிகரிச்சிருக்காங்க. பட்ஜெட் போட்டு பொழப்பு நடத்துற மக்கள்கிட்ட திடீர்னு, `மூவாயிரம் கட்டு, நாலாயிரம் கட்டு’னு சொன்னா, எங்கே போவாங்க? அப்படியே டெபாசிட் பணம் கட்டியிருந்தாலும், சொன்ன தேதியில பில் கட்டலைன்னா, முன்னறிவிப்பும் இல்லாம, பீஸைப் பிடுங்கறாங்க. முறையா நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கைகூட கொடுக்குறது இல்லை. இது நுகர்வோர் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலும்கூட. டெபாசிட் பணம் எங்கே போகுதுன்னு வெள்ளை அறிக்கையை இந்த அரசாங்கம் வெளியிடணும்.

பால்பர்ணபாஸ், நவீன், சாரதாதேவி

ரீடிங் எடுக்க வர்றவங்ககிட்ட மின் கட்டணம் பத்தி கேள்வி கேட்டா, `எதுவா இருந்தாலும் ஆபீஸ்ல போய் பேசிக்கோங்க’னு சொல்றாங்க. ‘எதுக்கு அலைச்சல்? பேசாம பணத்தையே கட்டிடலாம்’னு நினைக்குற மக்கள்தான் இங்கே அதிகம். துணிச்சலா போய் கேக்குறவங்ககிட்டயும், கம்ப்யூட்டர்ல அப்படித்தான் இருக்குன்னு முஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடறாங்க. இதனால, பணம் கட்டியே ஆகவேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்படறாங்க. எங்களை மாதிரி ஆட்கள், இதை மேலதிகாரிங்ககிட்ட கொண்டு போனா, அவங்களோ ஒண்ணுமே தெரியாத மாதிரி ‘என்னங்க சார் சொல்றீங்க... இப்படியெல்லாமா நடக்குது?’ன்னு நம்மகிட்டயே ஆச்சர்யமா கேட்குறாங்க. தமிழக முதல்வரே நேரடியா தலையிட்டு, இந்தப் பிரச்னையைத் தீர்த்துவெச்சாத்தான் மக்கள் நிம்மதி அடைவாங்க’’ என்று படபடத்தார்.

மொத்தப் புகார்களையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொண்டு சென்றோம். பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர், ‘‘ஈ.பி அலுவலகத்தில் சரியான பதில் கிடைக்காவிட்டால், 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். டெபாசிட் யாரும் கட்ட வேண்டாம். சாஃப்ட்வேரிலேயே டெபாசிட் குறித்த தகவல்களை எடுத்துவிட்டோம். இதுவரைக்கும் 14 லட்சம் புகார்களைச் சரிசெய்திருக்கிறோம். பணம் கட்டாத இணைப்புகளையும் துண்டிக்காமல்தான் வைத்திருக்கிறோம்’’ என்றார்.

மின்கட்டண உயர்வு என்கிற சுமையிலிருந்து மக்களை மீட்க வேண்டியது அரசின் கட்டாயக் கடமை!



source https://www.vikatan.com/news/general-news/electricity-bill-controversy

நயன்தாராவின் டீ கடை பாசம்... விக்னேஷ் சிவனின் மீது கோடிகளில் நேசம்!

ஹைடெக் டீ கடைகள் நகரங்களில் பெருகிக்கொண்டே வருகின்றன. பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீட்டில் டீ கடைகளை புதிதாகத் தொடங்கி வருகின்றன. அந்த வரிசையில் 'சாய் வாலே' எனும் நிறுவனமும் வேகமாக தனது கிளைகளைத் தொடங்கிவருகிறது. அந்த நிறுவனத்தில் ஏஞ்சல் இன்வெஸ்ட்டராக பண முதலீடு செய்திருக்கிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணை.

பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி சினிமாவைத்தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது இதுதான் முதல்முறை.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இதுதொடர்பாக சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம். ''நயன்தாரா எப்போதும் மனிதர்களை மட்டுமே நேசிப்பவர். அவருக்கு பணம், பொருள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். உண்மைக் காதல், நட்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால், அவரிடம் உண்மையாக இல்லாவிட்டால் அடுத்த நிமிடமே தூக்கி தூரப்போட்டுவிடுவார்.

கடந்த பல ஆண்டுகளாகவே விக்னேஷ் சிவனுடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நயன்தாரா எல்லா முதலீடுகளையும் விக்னேஷ் சிவனின் பெயரில் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார். வீடு, கார், நிலம் என அவர் வாங்கும் எதுவாக இருந்தாலும் விக்னேஷ் சிவனின் பெயரிலேயே அதைப் பதிவு செய்கிறார். அந்த வகையில் இந்த முதலீட்டிலும் விக்னேஷ் சிவனையே இன்வஸ்ட்டராக இணைத்திருக்கிறார்'' என்கிறார்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/nayanthara-vignesh-shivan-invests-crores-in-tea-brand-restaurant

Tamil News Today: `ஒரே நாளில் 41,649 பேருக்கு தொற்று; 593 மரணங்கள்!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

`முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு 4வது முறையாக அமலாக்கப்பிரிவு சம்மன்’

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ரூ.100 கோடி லஞ்சப்புகார் சுமத்தி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. தனியாக விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு அனில் தேஷ்முக் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அமலாக்கப்பிரிவு அனில் தேஷ்முக்கிடம் விசாரிக்க மூன்று முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அனில் தேஷ்முக் கொரோனா, உடல் நலக்கோளாறு போன்ற காரணங்களை கூறி அமலாக்கப்பிரிவில் ஆஜராகவில்லை. அனில் தேஷ்முக் மகன் மற்றும் மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் ஆஜராகவில்லை.

மனைவியுடன் அனில் தேஷ்முக்

அனில் தேஷ்முக் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் வாக்குமூலம் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அனில் தேஷ்முக்கின் இக்கருத்தை அமலாக்கப்பிரிவு ஏற்றுக்கொள்ளவில்லை. அனில் தேஷ்முக் வீட்டில் ரெய்டும் நடத்தப்பட்டது. தற்போது 4வது முறையாக அமலாக்கப்பிரிவு அனில் தேஷ்முக்கிற்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி சம்மன் அனுப்பி இருக்கிறது. அனில் தேஷ்முக் மட்டுமல்லாது அவரது மனைவி மற்றும் மகனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

- ஐயம்பெருமாள்

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,16,13,993 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 593. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,23,810-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,07,81,263-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,08,920 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 37,291 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 46,15,18,479 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-31-07-2021-just-in-live-updates